தமிழைப் படிக்கமாட்டேன் என்று விலகிச் செல்லும் மாணவர்கள் இன்று நிறைய உள்ளனர். சாதம், சோறு என்ற சொற்களைக் கூட விலக்கிவிட்டு, Rice போடு, அல்லது serve rice என்றுசொல்லி முடிப்போர் பலர். தமிழைப் போதிக்கும் முறைகளில் சில இக்கால மாணவர்களுக்குப் பொருந்திவராமல் போனதனாலே இவ்வாறு நேர்ந்துள்ளது. இலக்கணம் உரைப்பதைவிட எப்படிச் சொன்னால் புரியும் என்று சிந்தனை செய்து சொற்களுக்கு இடையில் உள்ள தொடர்புகளைக் காட்டினால் மாணவர்களுக்கு ஆர்வம் உண்டாகலாம். அவ்வப்போது இத்தகையை முறைகளை எழுதுவதில் கடைப்பிடித்திருக்கிறோம்.
இந்த முறையைப் பயன்படுத்தி, தவல் என்ற சொல்லை விளக்குவோம்.
தவறு(~தல்) இதில் று என்பதை எடுத்துவிட்டால் தவ என்பதே மிச்சம். இதில் தவ என்பதைப் பாவித்துக்கொள்வோம். தவ+ அல் > தவல், இரண்டு அகரங்களில் ஒன்று கெட்டது. தவயல் என்றோ தவவல் என்றோ வருவதில்லை. தவல் என்பதன் பொருளென்ன என்றால் தவறுதல் என்பதுதான்.
தவல்அருஞ் (செய்வினை) - தவறிவிடாத செயல்.
தவல் அருந் ( தொல்கேள்வி) - கெடுதல் இல்லாத பழைய கேள்வி யறிவு ( கேள்விஞானம்.)
தவல் - (தவறுதல் ) மரணம்
தவல் - வறுமையால் வருத்தம். ( பொருளின்மையால் கெட்டுப்போவது). செல்வச் செழிப்புடன் வாழ்ந்த ஒருவன் கெட்டுப்போவது என்க
தவல் - ( வினைச்சொல்) நீங்குதல். [ தவலுதல் ]
இவை எல்லாம் தவறுதல் என்ற சொல்லால் பொருள் சொல்லக்கூடியவைதாம்.
சுட்டடிச் சொற்கள் வளர்ந்த பண்டைக் காலத்தில் ஒருவன் அங்கு போய்க் கெட்டான் என்பதற்கு த அ ( தா ஆ) என்று ஓரசைகளைக் கொண்டு பேசியிருப்பர் என்று தெளியலாம். பண்டை ஓரசைச் சொல்லாக்கத்தில் த அ அல் து எனக் கலந்து தவறு என்ற சொல் உருவாகியுள்ளது தெரிகிறது. இது புரியவில்லை என்றால் தவிர்த்துவிடலாம். அல் இடைநிலை. து வினையாக்க விகுதி.
தபுதல் என்ற சொல்லை இங்கு விரிக்கவில்லை. தப்புதல் என்பதும் தொடர்புடைய சொல். இதை விளக்கவில்லை.
கவிதையில் இடைக்குறை, தொகுத்தல் எல்லாம் உண்டு. இங்கு சொல்வது சொல்லாக்க இடைக்குறை. அதாவது இடைக்குறை முறையால் இன்னொரு சொல் உண்டாகுதல் அல்லது அறியப்படுதல்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக