இன்று மங்கலம் மங்களம் என்ற சொற்களைச் சிந்திப்போம்.
மங்கலம் மங்களம் என்பவை இரண்டும் ஒரே பொருளைத் தருதலால், இவை ஒரே அடியினின்று தோன்றிய சொற்கள் என்பது இன்று நிலவும் கருத்தாகும். மேலும் இவை தமிழன்று என்ற கருத்தும் சமஸ்கிருதம் ( பூசை மொழி அல்லது சங்கதம் ) என்ற கருத்துகளும் உள்ளன. மங்கலம் என்பது தமிழ்ச்சொல் என்ற கருத்தும் உள்ளது. மங்களம் என்றெழுதுவது வழுவென்று எண்ணுவோரும் உளர் என்று தெரிகிறது.
ஆரியா என்றால் அறிவாளிகள் என்பது பொருளாகும் என்று கூறியுள்ளனர். இதற்கான வேர்ச்சொல் என்னவென்பதில் ஐயப்பாடு முன்னர் எழுதினவர்களிடையே நிலவுகிறது.
இதற்கான வேர் ஆர்(தல்) அல்லது அறிதல். ஆர்யா என்றால் அறிந்தோர். இந்த வேர்கள் தமிழிலே தான் இருக்கின்றன.
ஆரியர் படை எடுத்து வந்தனர் என்ற தெரிவியல் இப்போது மெய்ப்பிக்கப்படவில்லை என்பதை மேலையர் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் படை எடுத்துவராமல் மாடு ஓட்டிக்கொண்டபடி வந்த நாடோடிகள் என்ற கருத்தை இன்னும் வைத்துள்ளனர். இதை ஒப்பாதவர்களும் உள்ளனர்.
ஆரியா என்பது ஓர் இனப்பெயர் என்பதை இணங்குவோர் ஆய்வாளர்களில் இல்லை. அதை ஒரு மொழிப்பெயராக இன்னும் கருதுவோர் உள்ளனர். இந்தத் தெரிவியல்களைக் கருதிக் குழம்பாமல் இங்கு மங்களம், மங்கலம் என்ற சொற்களை ஆய்வு செய்வோம். இந்தியாவுக்குள் பலர் முன்காலத்தில் வந்துள்ளனர் என்றாலும் ஆரியன் என்ற பெயர் அவர்களைக் குறிக்கவில்லை என்பதே எமது கருத்தாகும்.
மங்களம் என்பது மங்கல் நிறத்தின் அடிப்படையில் வந்த பெயர் என்று ஆய்வறிஞர் சிலர் கருதுகின்றனர்.
மங்கலம் என்பதும் மங்களம் என்பதும் ஒருபொருளன என்று கருதப்படுகிறது.
இனி, மனை, மனைவி, என்ற சொற்கள், மன் என்ற அடியிலிருந்தே வருகின்றன. திருவள்ளுவரும் தம் குறளில்:
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
என்கின்றார்.
நன் என்பதற்கு மன் என்பதே நேர் எதுகை. ஆகவே மன் நன் என்பதன் எதுகைத் தன்மையை மனைமாட்சி என்ற தொடரின்மூலம் அவர் தெளிவாக்கியுள்ளது தெரிகிறது. எனினும் அவர் காலத்திலே அங்கு மன் கலம் என்ற வடிவிலிருந்து மங்கலம் என்று திரிந்துவிட்டது. எனவே அந்தத் திரிபையும் ஏற்றுக்கொண்டு மங்கலம் என்று வழங்குகிறார்.
இது தெளிவாகுவதால்:
மங்கலம் என்பது மன்+ கலமே ஆகும். மன்னுதல் என்பது நிலைபெறுதல். மனிதர் நிலைபெறுவதும் பெண் அல்லது மனைவியினால்தான். மனைவிக்கும் அதுவே அடிச்சொல் என்பது முன் கூறினோம்.
மன் கலமே மங்கலம் என்று திரிந்துவிட்டது. இதுபோல் திரிந்தவை முன்னர் நம் இடுகைகளில் கூறப்பட்டுள்ளன.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக