திங்கள், 25 ஜூலை, 2022

உடம்படு மெய்கொண்டு வெவ்வேறு சொற்கள்.( தலையன், தலைவன்)

goog_1596888458 சங்ககாலத்தில் மக்கள் அனைவரும் இடம்நோக்க ஒன்றாக வாழ்ந்தனர் என்று கொள்வதற்கில்லை. மலைவாழ்நன் குறவன் எனப்பட்டான். ஆனால் விளைச்சல் நிலமுள்ள பகுதியில்  வாழ்ந்தவன்  ஊரன் என்றும் பிறபெயர்களாலும் அறியப்பட்டான். அங்குத் தண் துறைகள் இருந்தன.  இதனால் இவனைத் தண் துறை ஊரன் என்று கவிகள் சிறப்பித்தனர்.  துறையன் என்ற சொல்லும் வழக்குக்கு வந்தது.  இவர்கள் வேளாண்மை விளைச்சலில் ஈடுபடுபட்டவர்கள்தாம்.  கன்னடர் சிலர் கோவைப் பகுதிகளில் அமர்ந்து வாழத் தொடங்கிய காலை,  துறையர் என்ற  பெயர் அவர்களுக்கு உரித்தாக்கப் பட்டு, பின் ஒரு சாதியாகவும் மாறிவிட்டது!  நெய்தல் நிலத் தலைவனுக்கு  இதே அடியிற் பிறந்த துறைவன் என்ற சொல் பயன்படுத்தப் பட்டது.  ஆக:
துறை > துறைவன்,
துறை >  துறையன் 
என்று இருவேறு விதமாகச் சொற்கள் அமைந்தன.  ஒன்று யகர உடம்படு மெய் கொண்டு அமைந்தது.
தலை என்ற சொல்லினை அடியாய்க் கொண்டு அமைந்த சொல்லினின்று " தலைவன்" என்ற சொல் அமைந்தது.  அவ்வடியிலிருந்து  தலையன் என்ற சொல்லும் அமைந்தாலும்,  " மாங்காய்த் தலையன்,  பலாக்காய்த் தலையன், மொட்டைத் தலையன்,  சொட்டைத் தலையன்"  முதலிய வழக்குகளில்  இஃது ஒட்டாகவே வந்தது.  சட்டித்தலையன் என்று ஒருவகை மீனும் கடுக்காய்த் தலையன் என்று ஒருவகைப் பாம்பும்  பெயர்பெற்றன.  சற்று நீட்டலாகத் தலையாரி என்ற சொல்லை அமைத்துக்கொண்டனர்.
வலைகொண்டு உயிர்களைப் பிடித்து வாழ்ந்தவன்   வலையனென்று பெயர்பெற்றனன்  எனினும்,  வலைவன் என்ற சொல்லும் அமைந்து சொற்பெருக்கம் ஏற்பட்டது.
கலைவன், கலையன் என்ற சொற்கள் அமைப்புறவில்லை.  இவற்றை இன்னும் பயன்படுத்தாமல் இருப்பதால் எதிர்காலத்தில் ஏற்ற வழியில் அவை ஒரு புதுப்பொருளுக்குப் பெயராய் அமைய வசதி உள்ளது.
உடம்படுமெய்களை மாற்றுவதன் மூலமே இவ்வாறு ஓர் அடியினின்று
 ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் கிட்டி, மொழி வளம்பெற்றது காணலாம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்

கருத்துகள் இல்லை: