நேற்றும் இன்றும் இறையருள் பெருகிட
நாளை அருவியாய் அருளாசி வருகவே!
ஆத்தாள் கருணையில் காலை வணக்கம்!
அரிய நலங்கள் அடைவீர் பலப்பல!
வெள்ளிவந் திடிலோ அள்ளித் தருவது
வியனுல கறிந்திடாப் பயனுறு பரிசே.
உள்ளொளி உலகத்து உயிர்களுக் கெல்லாம்
வெள்ளுறு விடியலும் விரிந்திடப் பெறுக.
திருவருள் என்பது தித்திக்கும் தேனே
பெறுமவற்றுள்ளே அறவில் வானே.
பொருள்:
வெள்ளுறு - வெள்ளையாகும். ( வெளிச்சம்)
அறவு இல் - எல்லை இல்லாத. முடிவு இல்லாத.
அறவு: இதன் வினைச்சொல் , அறுதல். என்றால் முடிதல்.
வானே - விரிவானதே. அருளுவிரிவுக்கு வான் உவமையானது.
ஒப்பீடு: துறவு என்ற சொல்லில் துற - வினைச்சொல். வு என்ற விகுதி சேர, இயல்பாய் அமைந்தது. ஆனால் அறவு என்பதில் அறு என்பதன் உகரம் கெட்டு விகுதி வந்தது. அறு என்பது அற என்று எச்சம்போல ஆகிப் பின் விகுதி ஏற்றது. உறு என்பது உறவு என்பதைப் பிறப்பித்ததும் ஈற்றுகரம் கெட்டே ஆனது. இலக்கணத்தில் கெடுதல் என்றால் எழுத்து மறைதல்.
இவை ஒரு நண்பருக்கனுப்பிய வாழ்த்து வணக்கத்தில் போந்த சிறப்புச் செய்திகளின் தொகுப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக