புதன், 3 ஏப்ரல், 2019

கலியாணம் விவாகம் ரத்து

இன்று வீடு என்ற சொல்லுக்கும் அகம் என்ற சொல்லுக்கும் ஒரு ஒப்பீடு எழுதலாம் என்று எண்ணினாலும் கல்யாணம் என்ற சொல் வந்து குறுக்கிட்டு என்னை எழுதென்றது. அதற்கு ஒப்பி இச்சொல்லைப் பற்றி இன்று சிந்திக்கின்றோம். ஒப்பீட்டு ஆய்வை இன்னொரு நாளில் கவனிப்போம்.

கல்யாணம் என்பது உண்மையில் கலியாணமே ஆகும். இதற்குக் காரணம் கல்லுக்கும் கல்யாணத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் இச்சொல் பல இந்திய மொழிகளில் வழங்கி வருகிறது. அங்கெல்லாம் அது கல் என்றுதான் தொடங்குகிறது. நாம் கலியில் தொடங்குவதானது பிற மொழி வழக்குகளுக்கெல்லாம் இசையாமல் நம்மைக் கல்லாக்கிக் கொண்டு தொடங்குவதுபோலச் சிலரால் உணரப்படுதலும் இயல்பே ஆகும்.

தமிழ்ச்சொற்கள் பிற மாநிலங்கட்குச் செல்லுங்கால் இவ்வாறு சுருக்கப்படுதல் இயல்பு. கைலாசம் என்பதை கைலாஷ் என்றுதான் பிற மொழிகள் சுருக்கும். சுருங்கிய நிலையில் வந்து சேர்ந்த சொற்களை விரித்துப் பலுக்குதலும் காணப்படுவதே. எடுத்துக்காட்டு: ப்ரட் என்ற ஆங்கிலச் சொல் பிரட்டு என்று தமிழரிடை மாறுவது காண்க. எக் (முட்டை) என்பது எக்கு என்று ஒலிப்புறுகிறது. இதை நாம் மறந்துவிடவில்லை.

கல்யாணம் கலியாணம் என்பவற்றை விளக்கி யாம் எழுதியது
இப்போது கிட்டவில்லை.

இப்போது புதிதாகவே சிந்திப்போம்.

சங்க காலத்தின் பின்பு பெண்கள்மேல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆண்கள் பலர் ஏமாற்றிவிட்டு ஓடிவிடுதல் கூடுதலாக நிகழ்ந்தமையால் இவை விதிக்கப்படவேண்டி நேர்ந்தது.
கலி என்பது மகிழ்ச்சி என்று பொருள்படும். ஆணுடன் பழக அனுமதி பெறும் சடங்கே கலி + ஆண் + அம் ஆகும். சிற்றூரார் இன்றும் கலியாணம் என்றே சொல்வர். ஆணுடன் சேரும் நிகழ்வு என்பதே கலியாணம் என்பதன் பொருள். ஆண் என்பது யாண் என்று வருவது யகர உடம்படு மெய். அம் விகுதியாகும், இவ்வாறு அறியவே இது தமிழ்ச்சொல் ஆகிறது.

வாழ்க்கை விழுமிய நிலையை அடையத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது பண்டைத் தமிழர் கொள்கை. இதனடிப்படையில் எழுந்தது விவாகம் என்ற சொல்: வி+ வா + ஆகு + அம் : விவாகம், விழுமிய வாழ்வு ஆகும் தொடக்கச் சடங்கு. இது ஒரு சொற்சுருக்கப் புனைவு ஆகும். இரத்து என்பது இறத்து: இறு+ + து: இறத்து > இரத்து > ரத்து, இறுதல்: முடிதல்; இறுதி என்ற சொல்லும் இதில் வந்ததே. ஆக விவாக ரத்து என்பதை உணர்ந்து கொண்டீர்கள்.


கருத்துகள் இல்லை: