வெள்ளி, 26 ஏப்ரல், 2019

அரிமா சிங்கம் குறைந்துவருதல் பொருண்மை

அரிமா சிங்கம் என்ற இரு சொற்களையும் இன்று நுணுக்கமாக நோக்குவோம்.

அரிமா என்ற சொல்லின்  பொருள் அரிதல் - அரித்தல் ( தன்வினை - பிறவினை ) என்ற வினையடிப்படையில் தோன்றிய தென்று அறிஞர் கூறியதுண்டு.  சிற்றுயிர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து இல்லாதனவாக்கும் கொடிய வலிமை பொருந்திய விலங்கு என்பது இதன் பொருள் என்பர்.

இஃது சரியான சொல்லாய்வு என்று ஒப்புவோம்.  நீருள் பாசியைச் சிறிது சிறிதாக அரித்தெடுத்தல் போல உயிர்களை அது  ஒழித்துவிடுகிறது  என்பது அருமையான கருத்தே.

அரி என்ற வினைக்கும் அப்பால் சென்று அதனடியைக் காணின்,  அது அரு என்ற வடிவமே என்பது புலப்படும்.

அரு >  அருமை.
அரு >  அருகு >  அருகுதல்.   எண்ணிக்கையில் குறைவாதல் இதன் பொருள்.
அரு > அரி  ( அரியது;  குறைந்த எண்ணிக்கையே உடையது )

ஓர் இடத்திற்கும், இன்னோர் இடத்திற்கும் உள்ள இடைத் தொலைவு சுருங்குதலும் அருகுதலே ஆதலின்,   " அருகில் ( உள்ளது)" என்ற வழக்கு உண்டாயிற்று.

காணற்கு அரியனவான இவ்விலங்குகளை அரிமாக்கள் என்று பெயரிட்டது
அற்றை நிலையுடன் மிகப் பொருந்தியதாகும்.  இன்று அருகிவரும் விலங்குகளைக் காப்பதற்குப் பல நடவடிக்கைகளை  ஐக்கிய நாடுகள் நிறுவனமும் பல அரசுகளும் எடுத்துள்ளன என்பது நீங்கள் அறிந்ததே.  அரிமாக்கள் என்னும் சிங்கங்கள் அருகிவிட்டன என்று தமிழன் அன்றே கவலைப் பட்டிருக்கின்றான். 

சிங்குதல் என்பதும் அழிதல், தேய்தல் , மீந்துபோதல் என்பன போலும் பல பொருளுடைய சொல்லே.  சிங்கம் பல நாடுகளில் இல்லை. ஆகவே அழிந்துவரும் ஓர் விலங்கினம் அது.  மனிதனால் பாதுகாக்கப்படவேண்டிய இரங்கத்தக்க நிலையில் இருக்கின்றது.  அதன் எண்ணிக்கை தேய்ந்துகொண்டு உள்ளது.  

அருகிவரும் விலங்கு. அழிந்துவிடுமோ என்ற அஞ்சத் தக்க விலங்கு. சிங்கிக் கொண்டு வரும்  விலங்கு சிங்கம்.

அரு+ இ = அரி > அரிமா.
சிங்கு + அம் =  சிங்கம்.

விலங்குகளின் அரசனுக்கு இந்தக் கதியா? 

சிங்கம் என்பது அன்றாட வழக்கிலுள்ள சொல்.  சிங்கு என்ற வினையின் அடியாகத் தோன்றிய பெயர்.  மேலும் எங்கும் பரவித் தமிழுக்கும் பெருமை சேர்த்த சொல்.

சிங்கிப்போன சிங்கத்தையும் அருகிப்போன அரிமாவையும் கண்டு சொல்லுக்கு இன்புற்றோம், கருத்தடிப்படை கண்டு கவலைகொண்டோம், பொருளடிப்படை ஒன்றுதான்.


பழமொழி:  பன்றி பத்துக்குட்டி சிங்கம் ஒற்றைக் குட்டி. குறைவுக்கு இதுவும் காரணமாகுமோ?

கருத்துகள் இல்லை: