செவ்வாய், 23 ஏப்ரல், 2019

மா உனம் மௌனம்

சில இடுகைகளை வாசிக்குமுன் முன்வந்த இடுகைகளயும் வாசித்தல் நலமாகும். அப்போது சற்று விரிவாக அறிந்துகொள்ளுதல் இயலும், இங்கு எழுதப்பட்டவை ஒரு நூல்போல இல்லாமல் தனித்தனிச் சுளைத்தன்மை உடையனவாய் இருத்தலால் முன்னிடுகை வாசிப்பு நலம்பயக்கும்.

முன் இடுகை இது:-

https://sivamaalaa.blogspot.com/2018/05/blog-post_47.html



(முனிவரும் மௌனமும்)


முன்னுதல் என்ற வினைச்சொல்லே முனிவர் என்பதன் அடியாகும்.

அடி என்பது அடுத்து முன்னிற்பது:   அடு > அடி ( அடு+ இ ).

உன்னுதல் என்பதும் முன்னுதல் என்பதும்  ஒன்றுக்கொன்று பிறப்புத் தொடர்பினவாம்.   ஆகையால்  உன்னுதல் என்பதினின்று சொல்லமைப்பைக் காட்டினும் வேறுபாடு ஒன்றுமில்லை.

இப்போது மௌனம் எனற்பாலதை உன்னுதல் என்னும் சொல்லினடிப்படையில் அறிவோம்.

மா = பெரிய, நீண்ட

உன்னு(தல்) >  உன்னு > உன்னம் > உனம்.     ஆழ்ந்து சிந்தித்தல். முன்வைத்து எண்ணுதல்.

மா+ உனம் >  மாவுனம் > மவுனம் > மௌனம்.

ஒன்றைத் தீர எண்ணுகின்றகாலை,  பேச்சுக்கு வேலை இல்லையாகின்றது. பேசாமை மௌனமென்று பொருள் எழுவதாகுதல் காண்க.

இவ்வாறு உரைப்பினும் இழுக்காதென்ப தறிக.

சிவனாகிய ஆதிப்பரம்பொருள் எப்போதும் பேசுதல் இல்லை, எப்போதாவது மொழிந்ததாகச் சொல்லப்படுதல் உண்டு.

இலக்கணம்:

மா உ என்பது மௌ என்றும் மவு என்றும் திரிந்தது.  இது நெடிற் குறுக்கம்.

தலை எழுத்துக்கள் நீளுதலும் குறுகுதலும் நீரோடைபோலும் மிக்க இயல்பான நிகழ்வாகும்.

தோண்டு >  தொண்டை  ( ஐ விகுதி ).
மா உ  > மவு (குறுக்கம் )  >  மௌ ( திரிபு).
முனி+ அம் = மோனம் ( திரிபு - முதனிலை திரிதலும் மு> மூ என்று  தன்னீட்சியாக இன்றி  மு> மூ >  மோ என்று இனமாகத் திரிதலுமாம்.

பண்டு ( பழமை ) என்ற குறில் தொடக்கக் குடிப்பெயரில் பகரம் பாகாரமானது தன்னீட்சி ஆடும்.

பண்டு > பாண்டு> பாண்டியன்.  மூவேந்தருள்ளும் பண்டு தோன்றியோன்.

காலம் செல்லச் செல்லவே எதுவும் பண் அடைகிறது,

பண் > பண்டு > பாண்டு > பாண்டியன் -  பண்பட்டவன் என்று பொருள் கூறினும் ஏற்கலாம்.

சொற்கள் தோன்றித் திரிவுறுகையில் நாம் பார்த்துக்கொண்டோ கேட்டுக்கொண்டோ இருக்கவில்லை. நாம் பிறந்தது இந்நூற்றாண்டில்.    ஆய்வு நெறிகளால் அதில் கிட்டிய அளவைகள் சிலவற்றால்தான் நாம் இதைக் கூறலானோம். ஈரளவைகளும் பொருந்துங்கால் சொல்லை இருபிறப்பி என்று ஏற்றல் அறிவுடைமை என்று முடிக்க. ஒன்றைச் சரி என்று தொங்கிக்கொண்டிருக்கலாகாது.

கருத்துகள் இல்லை: