திங்கள், 23 ஜனவரி, 2017

மக்கள் அறப்போர்

மக்கள் அறப்போர் தகுவழி தானிறும் எண்ணினேற்கு;
தக்க   படிஇற வில்லை தடியால் முடிந்ததென்னே!
தெற்க  ண‌மக்களின் பொங்கல் மறுநாள் கவினுறவே
நற்க மழும‌லர் ஏறு தழுவுதல் நிறைபெறுமே.

பன்னீர்ப் பெரியவர் முந்நீர்க் கரைசென்று மக்களையே
தந்நிலை மற்றும் தமிழர் நிலையொடு சட்டநிலை
என்னு மிவற்றை விளக்கி இனிதே உரைத்திருந்தால்
பின்னை அனைத்தும் நலம்பெறும் சொன்னார் கருத்துரையே.



 மக்கள் அறப்போர்   -    பொதுமக்கள் நடைபெறுவித்த அமைதியான போராட்டம்;

தகுவழி தானிறும்  -   தகுதியான வழியில்தான் முடியும் ;

எண்ணினேற்கு   -    என்று எண்ணி இருந்த எனக்கு;

தக்க   வாறிற வில்லை  -  தக்கபடி முடியவில்லை;
தடியால் முடிந்ததென்னே!   -   தடியடி நடைபெற்று முடிந்தது
என்னே  (என்று இரங்கியவாறு)

தெற்க  ண‌மக்களின் - ‍தென்னாட்டு மக்களின்;

பொங்கல் மறுநாள் கவினுறவே  -  மாட்டுப்பொங்கல் விழா
அழகாக நடைபெற;

நற்க மழும‌லர் ஏறு தழுவுதல் நிறைபெறுமே--. நல்ல கமழும்
மலர்களை அணிந்த காளைகளைத் தழுவுதல் நிறைவு அடைய
வேண்டும்  என்றபடி.


இ ற -  முடிய
கவினுற -  அழகுற .
நற்  கமழு மலர் -  நல்ல வாச  மலர்   அணிந்த .
பொங்கல மறு  நாள் -  மாட்டுப் பொங்கல்.
ஏறு  தழுவுதல் -  ஜல்லிக்கட்டு.

மு ந்  நீ ர்  -  கடல்     கரை:  ( மெரினா கடற் கரை )

இதை முதலில் ஒரு கட்டுரை வடிவில் எழுதலாம் என்று
நினைத்தேன். ஆனால் அதற்கு நேரமில்லை; சில வேலைகள்
இடையிடையே என் கவனத்தை வேண்டிநின்றதால், என்ன செய்யய்யலாம் என்று தீர்மானிக்க இயலாமல் இருந்தபோது,
நான் எழுதத் தொடங்கிய சில வரிகள் ஒரு கவிதைபோலவே
காதில் வந்தேறியது. அப்படியே எழுதியபோது, ஐஞ்சீர் விருத்தம்
போல் தோற்றம் காட்டியது. அப்படியே எழுதி வெளியிட்டேன்.மீண்டும் அதை நோக்குங்கால், சில சீர்களைச் சீர்ப்படுத்திவிட்டால், பாடல் கட்டளைக் கலித்துறை ஆகிவிடும்போல் தோன்றியதால், அப்படியே மாற்றிவிட்டேன்.


இந்தப் பா நேரசையில் தொடங்கியதால், மெய்யெழுத்தை
நீக்கி எண்ணினால் மொத்தம் ஓர் அடிக்குப் பதினாறு எழுத்துக்கள்
‍‍‍‍‍இருக்கவேண்டும்.  நான்கு அடிகளிலும் அடிக்குப் பதினாறு
இருப்பின் யாப்பு சரியாக இருக்கிறது என்றும் இது கட்டளைக் கலித்துறை என்றும் அறிக.










கருத்துகள் இல்லை: