ஞாயிறு, 22 ஜனவரி, 2017

அகடவிகடம்

அகடவிகடம் என்பது ஓர் இணைச்சொற்றொடர். அகடமும் விகடமும்
இணைந்தே நிற்கும். இரண்டிலும் கடம் உள்ளது.

பாலத்தைக் கடப்பது,  பாலைவனத்தைக் கடப்பது என்றெல்லாம், கடத்தல் பற்றிப் பேசுவதைக் கேட்டிருப்பீர்கள்.  பெண்ணைக் கடத்தல்,
பிள்ளையைக் கடத்தல் என்றும், கள்ளக் கடத்தல் என்றும் சொல்வழக்குகள் உள்ளன.  கடத்தல் (கட) என்பது பல பொருட்சாயல்களை உடைய சொல்.

கட என்பதில் கடு (கடுமை) ஒளிந்துகொண்டிருக்கிறது. பழங்காலத்தில்
எதையும் கடந்துசெல்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. எனவேதான், கட(த்தல்) என்னும் வினை கடுமை பொருந்திய பொருட்சாயல்களிலே வளர்ந்த சொல்லாகக் காணக்கிடக்கின்றது.

கடந்தே தீரவேண்டிய ஒன்று கடமை. ஒரு கடமையைத் தட்டிக் கழிப்பதைக் குமுகம் ஏற்பதில்லை. இது கடம் என்றும் கடன் என்றும்
வழங்கும். கற்பும் ஒரு கடமை; இது கற்புக் கடம் எனவும் படும்.

இவற்றையெல்லாம் அறிந்துகொண்டு, அகடம் என்ற சொல்லை அணுகுவோம்.

அ : இது முன்னொட்டு.  அல் என்ற சொல்லின் கடைக்குறை.
கடம்: கடத்தல் உரியது.

அகடம் = கடத்தற்குரியதல்லாதது.

அகட விகடம்:  கடத்தற்குரித்தல்லாததும்  கடத்தற் குரித்தான
விழுமிய பொருளும்..  இது சொல்லமைப்புப் பொருள்.

 இங்கு விகடம் :நகைச்சுவை.  (வழக்கில் வரும் அர்த்தம் )

அகடமாகிய விகடம் எனின், பின்பற்றலாகாத விகடம் எனினுமாம்.
அகட விகடம் :  அதாவது அகடமும் விகடமும், எனின்  கடமை
அற்றதும் நையாண்டித்தன்மை வாய்ந்ததும் என்றும் பொருள்படும்.

ஒருவன் செய்தக்கதே செய்க; நகைப்புக்கிடனாயது செய்யற்க.















கருத்துகள் இல்லை: