சனி, 3 மார்ச், 2018

tamil nadu newspapers



தனிச்சுவையாய் இனித்திடுமாம் தமிழர்நா டாக்கும் செய்தி;
தரணியிலே இருப்போருள் தமிழர்போல் செய்தி தந்தோர்
இனிச்சென்றே எங்கேனும் திரக்கிடினும் யாண்டும் காணோம்;
இருப்பனவும் உடைப்பனவும் உடைப்பனசேர்த் தாக்கம் என்று
கணிக்கவரும் அனைத்தினையும் கண்டிடலாம் செய்தித் தாளில்
காசுதனைப் பார்க்காமல் கடுகிப்போய்  வாங்கிப் பார்க்க!
மணிக்குட்த்துள் யாவினையும் திணிக்கினது போன்ற பன்மை
மகிழ்வுறுத்தும் மனமகழ்க்கும் மற்றும்செயும் யாவும் உண்மை

வெள்ளி, 2 மார்ச், 2018

வெண்பா இறுதி: கன்றுநிலை மாறும் மாடு என்பது:

 ஒரு கவிதையில்:  " கன்றுநிலை காண்மாறும் மாடு"  என்று
முடித்திருந்தோம்.   அந்தக் கவிதை இங்கே இருக்கிறது:

http://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_31.html

இதற்கான பொருள் யாது என்றார்க்கு இப்போது இங்கு
பொருளைத் தருகிறோம்.

இத்தொடரை,  மாடு கன்றுநிலை மாறும்,  காண்  என்று
முதலில் மாற்றிக்கொள்ளுவீர்.

பொருள்:

மாடு:  ஒரு வளர்ந்துவிட்ட பசுவோ (ஆவோ)  காளையோ;

கன்றுநிலை:  ஒன்றுமறியாத, எது தனக்கு நன்மை அல்லது
எது தனக்குத் தீமை என்று தெரிந்து செயல்பட முடியாத
நிலையில் இருத்தல்;  (  அப்படி இருந்தால் );

மாறும் :    அஃது  மாற்றமடையும்

காண் :   தெரிந்துகொள்வாய்,  என்றவாறு.

கன்று என்பதைப் பெயர்ச்சொல்லாக எடுத்துக்கொண்டால்:
இது மாட்டின் இளம்பருவத்தைக்  குறிக்கிறது,  எனவே
கன்று நிலை - அறியாமையுடன் இளம்பருவத்து
வீண்சேட்டைகளையும் உட்படுத்துகிறது.

கன்றுதல் என்ற வினையாக எடுத்துக்கொண்டால்:
வாட்டம், அடிபடும் நிலை,  கருகுதல், பிறர் இரங்கு
நிலை என்றும் பொருள்தரும்.  கன் என்ற அடிச்சொல்
கனல் என்பதையும் பிறப்பித்துள்ளது;  கன்று என்ற
வினையும் உண்டுபண்ணி யுள்ளது.  பொருந்துமாறு
உரைத்துக்கொளக. ஈண்டு  கன்றுநிலை
வினைத்தொகை ஆகும்.

மாட்டைப் பிறர் கண்டு சினக்கும் நிலை மாறும் என்பதும்
பொருந்தும். தொக்க உருபுகளை வருவித்துக்கொள்க.


செல்வம், பணம், பண்டம், சம்பளம் இன்ன பிற



செல்வம் என்ற சொல்,  பெருவழக்கினதாகும்.  தாய்மாரும் தம் குழந்தையைச் செல்வம் என்பர்.  மேலும் தமிழர் பதினாறு செல்வங்களைக் கண்டுரைத்துள்ளனர்.

ஆனால் செல்வம் விளிதலை உடையது.  செல்வம் வரினும் பின்னர் செலவாகி இல்லாமல் ஆகிவிடும். மீண்டும் அதைச் சேர்க்கவேண்டும்.  இப்படிச் சேர்க்கவும் செலவாக்கவும் ஆன நிகழ்வுகளுக்கு உட்படுவது செல்வம்.

சேர்க்கும்போதே அது சேமிப்பு ஆகிறது.  சேர் > சேர்மி.> சேமி > சேமிப்பு எனச் சொல் அமைந்தது. வார்> வா என்பன வரு என்பதிலிருந்து அமைந்ததைப் படித்துள்ளீர்கள். வார் > வா ஆனதுபோல சேர்>  சே ஆயிற்று.

பெயர்ச்சொல் ஆகும்போது சில வினையாக்க விகுதிகள் கெடும்.  உதாரணத்துக்கு: குவி > குவிப்பு > குப்பு> குப்பை என்பது காண்க. இதில் வி என்ற வினையின் ஈற்றெழுத்துக் கெட்டது.  இதைக் குவிப்பு> குவிப்பை> குப்பை என்று காட்டினும் அதுவே.  வேறுவழிகளிலும் காட்டலாம்.

இனிச் செல்வம்.  செல்வமென்பது சேமிப்பைக் குறிக்கவில்லை.  செல்வதையே குறித்தது.   சேமித்துவைத்தாலும் சென்றுவிடுகிறது.  சகடக்கால் போல் வருவதும் போவதும் உடையதாயினும், அது வரும்போது மனிதர்க்கு ஆக்கும் மகிழ்ச்சியை விட அது செல்லும்போது ஆக்கும் துயரே பெரிதாகும். இதன் காரணமாகவே,  செல்> செல்வு> செல்வம் என்று சொல் அமைந்தது.  சொல் இப்படி அமைந்ததுதான் என்றாலும் “எசமான் ( இயமான் ) பெற்ற செல்வமே” என்று பாராட்டுங்காலை இந்தச் சொல் செல் என்பதிலிருந்து வந்தது என்பதை யாரும் உன்னுவதில்லை. அப்படி உன்னாமல் இருப்பதே சொல்லின் பயன்பாட்டுக்கு இனியது.

நடிப்பவர்களும் வணிகன்மாரும் பணம் பண்ணுகிறார்கள். பண்ணுவது என்றால்  நல்வாழ்வுக்கு வேண்டியபடி சேர்த்துக்கொள்வது, சம்பாதிப்பது என்று பொருளாகிறது.  ஆடுகிறவர்களும் பணம் பண்ணுகிறார்கள்.

மிகப்பழங்காலத்தில் பண்களை வீடுவீடாகப் போய்ப் பாடியவர்களே பணம் பண்ணினார்கள்.  பண் > பண்+அம்=  பணம் ஆகிறது.    பண்ணுக்குக் கிடைத்ததே பணம்.  இது முற்காலத்தில் நெல்லாகவோ வேறு பொருளாகவோ  இருந்திருக்கலாம்.  இவர்களுக்கெல்லாம் குடியானவர்களே ஆதரவு தந்தனர் என்று தெரிகிறது.   இன்றோ  திரைப்படங்களைக் காட்டிப் பணம் பண்ணுகிறார்கள். பண்டமாற்றுக் காலம் முடிந்து நாணயங்கள் வந்தபோது அவை பணம் என்ற சொல்லுக்கு உரியவாயின.   பண்> பணம்;  பண்> பண்> பண்டம் ( பண்+து+ அம் )  பண்டம் என்ற சொல்லை விரித்தால் அது பண்ணுக்கு உரித்தானது என்ற பொருளைத் தருகிறது.

பண்டாரமும் பண்ணால் இறைவனைப் பணிந்தவன்.  பண் தந்தவன். பண்+தரு+ஆர்+ அம் = பண்டாரம். பண்ணப்படுவதும் பண்டமாகலாம். சில சொற்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் வெளிப்படும்.

சம்பாவும் உப்பும் சேர்த்து ஊதியமாகக் கொடுத்து அது சம்பளம் ஆனது.  சம்பு+ அளம்.   சம்பு என்பது ஒரு நெல்வகை. அளம் என்பது உப்பு.   இந்த வரலாற்றை இத்தமிழ்சொல்லே வழங்குகிறது.  ஆங்கிலத்தில் உள்ள சாலரி என்ற சொல்லும் உப்பு வழங்கப்பட்ட காலத்தைக் குறிக்கிறது.  சால்ட் .  சாலரி.


குறிப்பு:
அரசனின் படம் போட்டிருப்பதால் படம்> பணம் என்று வந்ததென்று கருதுவோருமுண்டு.


வியாழன், 1 மார்ச், 2018

சீர்ச்சை ( சிகிச்சை) : நோயாளிபற்றி.



மருத்துவர்செய்  சீர்ச்சைக்கு மாட்டேன்என்  றுரைத்தால்

பொருத்தமிதோ புன்விளைவே பொறுத்தல்நோய்ப் பட்டார்

அறுத்தமைவே  ஆள்சீர்ச்சை ஆகுமதால் இன்னோர்

உரைத்திடுதல் உலகமிதில் காட்சியென்றே  ஆச்சே.



அரும்பதவுரை

சீர்ச்சை:   இச்சொல் இந்நாட்களில் “சிகிச்சை” என்று திரிந்து
வழங்குவது ஆகும்.  இது சீர்ப்படுத்துவது என்ற பொருளில் சீர்ச்சை
என்றே வழங்கிய சொல். அவ்வாறே இது இப்பாடலிற் பதிவு
பெறுகிறது.
பொறுத்தல் நோய் -  நோயைப் பொறுத்துவாழ்தலே உடையவரான
நோயாளி.  நோயாளி என்றாலே நோயை ஆள்பவர் என்றும் பொருள்
கொள்ளலாம்.  நோய்பொறுத்தலுக்குட்பட்டவர்.  ஆங்கிலத்திலும்
இவர்களுக்குப் “பேஷன்ட்” என்பது காண்க.
அதால் -   அதுவால்;  அதனால்.

அறுத்தமைவு =  அறுவை மருத்துவம்.
ஆள்சீர்ச்சை:  சீர்ச்சைகளில் முன்மையானவை.
காட்சி -  எங்கும் காணப்படுவன ஆதல்.
ஆச்சே -  ஆயிற்றே.

இறப்பும் பிறப்பும்





இறப்பும் பிறப்பும் இயல்புதான் என்பார்
உரையிஃ   துளமையென் றாலும்----உரைக்கினோ
சாவறிந்தக் கால்நெஞ்   சதிருமே  செய்பவைபின்
மேவிட  ஓரிரு  நாள்.

அரும்பொருள் உரை:

உரை யிஃது ---  இந்த வாக்கியம்;
உளமை --- உண்மை;
மேவிட --- தொடர்ந்து செயல்படுத்த.
ஓரிரு நாள் ---  ஒன்று அல்லது இரண்டு நாட்கள்
ஆகும் என்றபடி. 

புதன், 28 பிப்ரவரி, 2018

முற்காலத்தில் பெண்ணாதிக்கம்.

மிக்கப் பழங்காலத்தில் பெண்களே குமுகத்தில் ( சமுகத்தில்) குடும்பங்களுக்கும்  வெளியுலகிலும் பல அமைப்புகளுக்கும் செயல்பாடுகளுக்கும் தலைமை தாங்கினார்கள் என்று மனிதவளர்ச்சி நூலார் கண்டுபிடித்துக் கூறுவதுண்டு. எனினும் சில இனத்தார் ஆண்கள் தலைமையில் இயங்கினர் என்று தெரிகிறது.

கழிந்த காலத்தில் யாது நடந்தது என்று கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதன்று.  இன்று நாம் சில ஆய்வுகளை மேற்கொள்ளுவோம்.

இன்றைத் தமிழில் ஆள் என்ற சொல்லுக்கு பால்பாகுபாடு கூறமுடியவில்லை. இதற்குக் காரணம்,  ஆள் என்பது ஆணாகவும் இருக்கலாம்; பெண்ணாகவும் இருக்கலாம்.  ஆள் என்பது ஒரு பொதுப்பால் சொல்.  பொதுப்பால் என்பது தமிழ் இலக்கணப் பாகுபாடு அன்று.  ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்பனவே இலக்கணக் குறியீடுகள்.

ஆள் என்பது இற்றை வழக்கில் பாலறி கிளவி அன்று எனினும் அதற்கு மாறாக அது பெண்பால் விகுதியாக தமிழ்மொழியில் வழங்குகிறது:

அவள் வந்தாள்.
கவிதா சென்றாள்

இந்த வாக்கியங்களில் வரும் வினைமுற்றுக்களில் ஆள் என்பது பெண்பால்
குறிக்கவருவதைக் காணலாம்.

தனிச்சொல்லாக வரும்போது ஒரு மனிதப்பிறவியைக் குறிக்கும் இந்தச்சொல் விகுதியாக வரும்போதுமட்டும் எப்படிப் பெண்பால் குறிக்கவருகிறது?  இதை நீங்கள் சிந்தித்ததுண்டா?

பொதுப்பாலாக வரும் ஆள் என்னும் சொல்,  வினைச்சொல்லாக வருகையில் மட்டும் எப்படி ஆட்சிசெய்தல் என்ற பொருளில் வருகிறது?  ஆள், ஆள்தல், ஆளுகை, ஆளுமை, ஆட்சி என்பவற்றில் முற்றிலும் மாறுபட்ட பொருளில் அன்றோ வருகிறது?

இப்போது விடையத்திற்கு வருவோம்.  ஆள் என்பதன் பொருள் ஆள்தல் என்பதுதான்.  பெண்ணே குமுகத்தில் ஆட்சி செய்தாள். ஆகவே வந்தாள் கண்டாள் முதலியவற்றில் ஒருவிதப் பணிவுடன்`தான் பெண்ணைக் குறித்தனர்.

வந்தாள் என்றால் ஆள்கிறவள் வந்தாள் என்பதே பொருள்.

பணிவுடன் தொடங்கிய இந்த வழக்கு, இந்நாளில் பொருள் இழிவு கண்டது. வந்தாள் என்பது பணிவுக்குறைவாகிவிட்டது,

நாற்றம் என்ற சொல் இனிய மணம் என்று பொருள்பட்டு இன்று தீயவீச்சம் என்று பொருள்பட்டதுபோலவே ஒரு பொருள் இழிவே இதுவும்.

இங்கனம் பொருளிழிவுகண்ட பதங்கள் மொழியில் பல.

ஆள்பவள் வந்தாள் என்று பொருள்பட்ட இந்தவழக்கு, மரியாதையற்றதாகக்
கருதப்பட்டது மொழியிலும் வழக்கிலும் ஏற்பட்ட மாற்றம்.  ஆள் என்பது இன்றும் மேலாண்மையையே குறிப்பதால்,  வந்தாள் என்பது மேன்மைக்குரிய பெண் வந்தமையையே குறிக்கும்.

ஆள் என்பது பெண்ணுக்குரிய சொல்லாகவும் விகுதியாகவும் பயன்பட்டபின்பு, ஆடவர்களுக்கு ஒரு சொல் தேவைப்பட்டது.

அது ஆள் என்ற சொல்லிலிருந்தே வந்தது.

ஆள் > ஆண் என்று அமைந்தது.

அதாவது முன் காலத்திலேயே பெண்ணுக்கு வந்த ஆள் என்பதிலிருந்துதான்
ஆண்மகனும் தன்னைக் குறிக்கும் சொல்லைப் பெற்றுக்கொண்டான்.

ளகரம் ணகரம் ஆகுமா?  ஆகுமே. பல திரிபுகளைக் காட்டலாம். எனினும்
ஒன்றுபோதும்.  உண் என்பது தின்பது குடலுக்குள் செல்வதைக் குறிக்கிறது. இது உள் என்ற சொல்லின் திரிபு ஆகும்.  உள்>  உண்.  உணவை உள்ளிடுவதே  உண்பது ஆகும்.  உள் என்பது புணர்ச்சித் திரிபிலும் உண் என்றாகும். உள்+ நாக்கு= உண்ணாக்கு என்று காணலாம்.  ஆகவே மொழியில் ளகரமும் ணகரமும் நன்`கு தொடர்புபட்டவை ஆகும்.

ஆள் என்பதிலிருந்து திரிந்துவிட்ட ஆண் என்பது, பிற்கால ஆட்சியைக் குறிக்கிறது.  இது, பெண் ஆட்சி முந்தியது என்பதையே காட்டுகிறது.

அறிந்து இவ்வரலாறுகளை நமக்குக் காட்டும் தமிழ்மொழியைக் கொண்டாடுவோம்.


திங்கள், 26 பிப்ரவரி, 2018

கைலாசம் சொல்லும் பொருளும்



இன்று கைலாசம் என்ற சொல்லினை அறிந்துகொள்வோம்.

கைலாசம் என்ற சொல்லொலியை ஒத்த பிறமொழியின் ஒலிப்பு கைலாஷ் என்பதாகும் என்பது நீங்கள் அறிந்ததே.  கைலாஷ் என்பதற்குப் பிறமொழியின் வழிச்சென்று அடிச்சொற்கள் கண்டுபிடித்துப் பொருள்விளக்குதல் நீங்கள் கேட்டிருத்தல் கூடும்.

இதைத் தமிழின் வழிச்சென்று இன்று பொருள்விளக்குவோம்.

கை+ லாசம் என்று இதனைப் பிரித்தல் வேண்டும்.

இச்சொல்லில் லாசம் என்பதனை முதலில் எடுத்துக்கொள்ளலாம்.

இச்சொல் லாயம் என்றும் வழங்கும். இதில் உள்ள சகரமானது யகரமாய் வருவது சகர யகரப் போலி. தேயம் > தேசம் எனல் போல. லா என்பது தமிழில் முதலெழுத்தாக வருவதில்லை.  ஆகவே இது தமிழாயின்,  இலாயம் என்றே இருந்திருத்தல் கூடுமாதலால்,  இலாயம் என்பதனையே மேற்கொள்வோம்.

இலாயம் என்பது இல்+ ஆயம்.

இல்+ஆயம் என்பது புணரின் இல்லாயம் என்றன்றோ வருதல் வேண்டும்
எனின்,  அதுவும் இடைக்குறைந்து இலாயம் என வருதல் இலக்கணத்தின்கண் உளதாதலின், இதனால் ஆயதொரு வேறுபாடின்மை
அறிக.

இல் = இல்லம்;

ஆயம் =  ஆய்+ அம்:   இது ஆக அமைந்தது   என்று வாக்கிய நிலையை அடையும்.  ஆய் -  ஆதல் என்பதன் வினை எச்சம்;  அம் என்பது விகுதி என்று வகைப்படுத்தினும் இழுக்கொன்றுமில்லை.

ஆய் அமைந்தது என்ற பொருள் அப்போதும் வெளிப்படும்.

எனவே இல்லமாய் அமைந்தது என்பதே பொருள்.

கை என்பது  பக்கத்திலேயே இருப்பது என்று பொருள்படும்.  வெகுதொலைவு எங்கும் செல்லாமல் அருகிலே அமைந்துள்ள ( இல்லம்).

உலகனைத்தும் ஆண்டவனுக்கு இல்லம்தான்.  கடவுள் ஓரிடத்தில் ஒடுங்கிவிடும் நிலையினன் அல்லன்.  எனினும் மனிதனின் கருத்தில் கடவுளுக்கும் ஓர் உறையுள் இருக்கவேண்டும். அவர் நாமிருக்கும் இடத்தில் கண்ணுக்குத் தெரியவில்லை ஆகையால்,  வேறோர் இடத்தில் இருக்கிறார், என்று மனிதன் எண்ணுவது இயல்பு. அதுவே அவருடைய இல்லம். என்னுள்ளே இறைவரும் (இறைவனும்) உள்ளார் என்பதானது ஞான நிலை. கைலாசம் என்பது அந்நிலையில் தோன்றிய சொல் அன்று. இயல்பான சொல் ஆகும்.

கை =  அருகிலமைந்த

இல் ஆயம் = இல்லம் ஆவது.

இப்படி இச்சொல்லும் தமிழில் பொருள்தருகிறது.

அவர் இல்லம் ஒரு மலைப்பக்கமாய் உள்ளது என்பர்.  கைலாய மலை.

இதுவே இச்சொல்லின் தமிழ்ப்பொருள்.

அறிந்து மகிழ்வோம்.

பிழைத்திருத்தம் பின் செய்யப்படும்.