ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

ஆட்சேபம் சொல் வந்தவிதம்



வரலாறு கற்பிப்போர்.

வரலாற்றைச் சொல்லிக்கொடுப்பவர்கள் பெரும்பாலும் ஓர் அறைக்குள் இருந்து தாம் கற்றுக்கொண்டதையே வெளியிடுவதால் சொற்கள் எந்த மொழியிலும் பல நிலைக்களன்களிலிருந்து  தோன்றியிருக்க்க்கூடுமென்பதை உணரும் வாய்ப்பு உடையவர்களாய் இருப்பதில்லை.   பரீட்சை அல்லது தேர்வுக்கு என்னென்ன கேள்விகள் வரும் என்று மாணவர்களுக்குத் தெரிவிக்கு முகத்தான், அவற்றுக்கான பதில்கள் எப்படியிருக்கவேண்டும் என்பவற்றை வரைந்து மாணவர்களுக்குத் தெரிவித்து அவர்கள் தேர்வுபெற வேண்டியவற்றைச் செய்பவர்களாகவே  கற்பிப்போர் இருக்கிறார்கள்.  சொல்லிக்கொடுத்துப் பெரும்பாலானோர் தேர்வில் தோற்றுப்போனால் சொல்லிக்கொடுப்போரின் பதவி உயர்வு முதலியவை பாதிக்கப்படலாம்.  அதனால் முன் பலன் தந்தவற்றை மாற்றிக்கொள்ள விரும்பாதவர்கள் இவர்கள்.  இது தீமையற்ற செயல்பாடு என்றாலும் புதுமையற்றதுமாகும். வகுப்பறைப் படிப்பில் உண்மைகளை வெளிக்கொணர முடிவதில்லை.

ஆட்சேபம் சொல்

இவற்றை மனப்பின்புலத்தில் வைத்துக்கொண்டு, இப்போது ஆட்சேபம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

முன்னாளில் இந்தியாவெங்கும் பல அரசர்களும் குறுநில மன்னர்களும் இருந்தனர். அரசர்போன்றே ஆற்றலை மக்கள்முன் காட்டிய நிலக்கிழார்களும் அவர்களின் சேவகர்களும் இருந்தனர். ஒரு போருக்குப் போகுமுன் போதுமான தக்க வீர்ர்களைத் திரட்டி அவர்களுக்குப் பயிற்சி தரவேண்டியிருந்தது.   

இப்போது படையில் சேர்வோருக்கு இருக்கும் விதிமுறைகளும் பாதுகாப்புகளும் அப்போது இல்லை. ஒரு படைஞன்மேல் ஒரு குற்றம் சுமத்தப்பட்டால் அதற்கான சான்றுகள் ஒரு பொறுப்பதிகாரியினால் கேட்டறியப்பட வேண்டுமென்பதும்  நிறைஆய்வு நிகழ்த்தப்பெறுதல் வேண்டுமென்பதும் மெய்ப்பிப்பதற்கு ஆதாரமான அனைத்துப் பொருள்களும் கொணர்ந்து முன்னிலைப் படுத்தப்படவேண்டுமென்பதும் சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்படுதல் வேண்டுமென்பதுமாகிய நடைமுறைகள் அக்காலத்தில் இல்லை. 

தண்டனைச் சான்றுகள் முறைகள் விதிகள்:

 குற்றம் சுமத்தப்பட்ட படைவீரனை மேலதிகாரி தலைகொய்து  தரையில் வீழ்த்திவிடலாம். அவனைக் கேட்பார் யாருமில்லை.  கேட்க முனைவோனும் தலைதப்ப இயல்வதில்லை.  இதனால் படையில் பணிபுரியப் பலர் முன்வந்ததில்லை.  இக்காரணம் கொணடும்  சாதிகளை   (சார்+தி > சார்தி > சாதி )  (ரகர ஒற்று வீழ்ச்சி ) ஏற்படுத்தி, அந்தச் சாதிக்கார்ர்களையே படைக்கு ஆள்தரும் கூட்டமாக ஏற்படுத்திக்கொண்டனர் அரசர்கள்.    

சில வேளைகளில் இப்படிக் கிடைத்த ஆள்தொகை போதவில்லை என்றால்,  சிற்றூர்களில் சென்று கால்கை நன்றாக உள்ளவர்கள் பிடித்து வரப்பட்டுப் படைச்சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சண்டைக்குப் போனால் அத்துடன் ஒழிந்தோர் பலர். சீனாவில் சிற்றூர்களிலும் படைக்கு ஆளெடுக்கவருகையில் ஓடி ஒளிந்துகொள்வது உண்டென்பதுபோன்ற கதைகளும் உள்ளன.  சேரமாட்டோம் என்று அதிகமாகப் போராடியவர்களின் உடல்கள் ஏரி குளங்கள் கடல்களில் வீசப்பட்டு மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டது உண்டு.  இவற்றையும் சொல்லக் காரணம், படைக்கு ஆள்சேர்ப்பது விவசாயிகளுக்கு வெறுப்பைத் தந்த ஒரு செயலாம்.  விவசாயி என்றாலே விழுமிய (வி) வாழ்வுக்கு (வ) சாலச் சிறந்த (சா) நலத்தினை மேற்கொண்டவர் என்ற கருத்தின் சுருக்கச்சொல் ஆகும்.    வாழ் என்ற சொல் இலத்தின் மொழிக்கும் சென்றது.
inter vivos என்ற ஆங்கில (  இலத்தீனிலிருந்து வந்தது ) சொற்றொடரை நோக்குக.  viva il papa என்பதும் காண்க.

ஆட்சேர்பு> ஆட்சேர்பம்.

 ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளினால் விவசாயம்  கெட்ட நிலையை அடைந்தது. ஆட் சேர்க்கைக்கு வருவோன் குடிகெடுப்போன் என்று நினைத்தனர்.  நிலத்தில் வேலை செய்வோருக்குப் பிறவகை நிகழ்ச்சிகள் இருத்தலாகாது என்று ஆசிரியர் தொல்காப்பியனார் இதற்காகத்தான் கூறினார் என்பதை நம் ஆசிரியர்கள் போதிப்பதில்லை.

வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல்லென மொழிபபிறவகை நிகழ்ச்சி

என்கிறது தொல்காப்பியம்.
மொழிப   ( மொழிப் என்றிருந்தது திருத்தம்பெற்றது. )  
மொழிப என்றால் மொழிவார்கள் புலவர் என்பது.

பார்ப்பனரும் வேளாண்மாந்தருமல்லாத பிற இடைப்பட்டோரெல்லாம்  நன்றாகவே மாட்டிக்கொண்டார்கள். நாளடைவில் ஆட்சேர்பு என்ற சொல்லுக்கு ஓர் அம் விகுதி கொடுத்து:  “ஆட்சேர்பம் என்றாகி,  ரகர ஒற்று நீங்கி  “ஆட்சேபம்” என்றானது.

ரகர ஒற்று மறைந்த சொற்கள் பல. இவற்றில் சில எம்மால் காட்டப்பெற்றன.
இந்த இடுகையிலே இரண்டு உண்டே:

சார்> சார்தி > சாதி.
ஆட்சேர்பு > ஆட்சேர்பம் > ஆட்சேபம்.

ஆட்சேபம் என்றால் மறுப்பு என்று பொருளாயிற்று.

சாப்பாடு கிடைக்காத போது மனிதனை மனிதன் உண்டு வாழ்ந்ததும் உலக வரலாற்றில் உள்ளது என்பது அறிக.

அறிந்து மகிழ்வீர்.

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

வெற்றிலை இல்லா வினை நீங்கியது!!



 வெற்றிலை இல்லாப் பொழுதிலே மெல்லுதல்
விட்டிங் கிருப்பதும் வீணென;;
கற்ற கறிசோறு  ஆக்கவும் முற்றக்
கருதா மனமே கலங்குமோ?
சுற்றம் இருந்தார் சுருக்காய் விரைந்தனர்
சொல்லிய விறபனை மண்டியில்
மற்றும் அதனையே பெற்றனர் பெற்றபின்
ஆங்கு  முகமலர்  பூத்ததே.

நாலு கடையில் அலைந்தபின் கிட்டிய
நல்லன வெற்றிலை  நாடு.

வியாழன், 1 பிப்ரவரி, 2018

அகத்து இருந்தவர் அகத்தியர்,



இன்று அகத்திய முனி பற்றித் தெரிந்துகொள்வோம்.

அகத்தியர் பற்றி இங்கு முன்பும் எழுதப்பட்டுள்ளது, அவற்றையும் சேர்த்துப் படித்துச்  சிந்தனையை விரிவுபடுத்திக்கொள்ளலாம்.

அகத்தியர் வெளிநாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்தவர் என்பது கதை. எல்லாக் கதைகளையும்போல இந்தக் கதைக்கும் வரலாற்றுப் படியிலமைந்த ஆதாரங்கள் ஏதுமில்லை.  வெளியிலிருந்து வந்துமிருக்கலாம். வெளியிலிருந்து யாரும் வந்து தங்குவது இயற்கைக்கு மாறானதன்று.  விவேகான்ந்தர் தமிழ் நாட்டுக்கு வந்திருந்தாலும் இங்குத் தங்கவில்லை.

ஆனால் யாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புவதென்னவெனில்,  அகத்தியர் என்பது உள்நாட்டினர் என்று பொருள்கொள்ளக்கூடியதாய் இருக்கிறது. அகம் என்றால் உள் என்று பொருள். வேறு பொருளும் உள்ளதென்றாலும் இதற்கு வெளி என்ற பொருளில்லை.  ஆகவே அவர் உள் நாட்டினர் என்பதைச் சொல்லின் பொருள் நமக்குத் தெரிவிக்கிறது.

அவர் எந்த ஊரினர், தாய்தகப்பன் யார் என்று பிற்காலத்தில் அறியாத நிலையில் அவர் வெளிநாட்டினர் என்று சிலர் கருதி, அதையே ஒரு கதையாக்கியிருக்கலாம். ஆனால் இக்கதை அகத்தியர் என்ற சொற்பொருளுக்கு மாறானதென்பதைத் தமிழறிஞர்கள் சிந்தித்துக் கூறவில்லை என்று சொல்லலாம்.

அகத்து இருந்து  (தமிழகத்திலே இருந்து) ஆசிரியராய் விளங்கியவரே அகத்தியர் எனலாம்.

வெளியிலிருந்து வந்தவராயின் எந்த மொழி பேசினார், எந்த மொழிக்கு உரியவர் என்பதற்கான கதைகூட இல்லை.

கடல்குடித்த:   குடித்த என்ற எச்சவினை  நீர்ப்பொருளைக் குடித்த என்று பொருள்தரலாம். எனினும்,  குடி+து+ அ =  குடித்த  என்பது குடியை உடைய என்றும் பொருள்தரும்.  அவர்தம் வீடு அல்லது அவரைச் சேர்ந்த குடிகள் கடற்பக்கமாக இருந்தனர் என்று பொருள்தர வல்லது இதுவாகும்.

இவர் மாணாக்கர் தொல்காப்பியர் என்பதற்கு ஆதாரம் இல்லை. இதுவும் பழங்க்தைகளிலிருந்து வருவதே.

ஆரியர் வந்தது உண்மையா?

கண்டது கற்கப் பண்டிதனாவான் என்பது தமிழ்ப் பழமொழிகளிலொன்று.

கண்டது என்பதற்கு இருபொருள்:

1.  அறிஞர் ஆராய்ந்து உண்மையென்று கண்டதை;

அல்லது:

2.  கண்ணிற்கண்டதை.  (எதையும் என்று பொருள்).

அதாவது : மனிதன் ஒரு நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்வது அரிது.

ஆனால் நூறு வருமுன்னே நோய்கள் பல வருவதற்குக் காத்துக்கொண்டுள்ளன.

அதனால் கற்பதைத் தெரிவுசெய்து கற்றுப் பயனடைய வேண்டுமென்று நாலடியார் என்னும் நூல் கூறுகிறது.

இதையும் படித்து மகிழுங்கள்:


http://anadimishra2.blogspot.sg/2016/02/change-history-books-aryan-theory-fake.html

இது ஆரியர் வருகை பொய்க்கதை என்`கிறது. 

புதன், 31 ஜனவரி, 2018

விளங்காதவனுக்கு எப்படி விளங்கவைப்பது



விளங்காதவன் யார்?

ஒவ்வொரு மனிதனும் தான் எல்லாவற்றையும் அறிந்துவிட்ட்தாகவே நினைத்துக்கொண்டு செயல்பாடுகளில் இறங்கிவிடுகிறான், இத்தகையோரை மேய்ப்பதென்பது ஒரு பெரிய கலை, இதற்காக இப்போது பெரிய கல்விச்சாலைகள் உள்ளன. உயர்நிலைப்பள்ளிகள் போன்றவற்றில் இவற்றை முழுமையாக்ச் சொல்லிக்கொடுக்க முடியாது.  வேலையில் ஈடுபட்டிருப்போருக்கு  அவ்வப்போது கொஞ்சம்  கால இடைவெளி விட்டு இக்கலைகளில் தேவையானவற்றைக் கற்பிப்பதே நல்ல விளைவுகளை ஏற்படுத்தித் தருமென்பதை இப்போது பல நிறுவன்ங்களில் உணர்ந்திருக்கிறார்கள்.

ஒரு பத்திரிகை நிறுவனத்தில் பத்து எழுத்தாளர்களுக்கு மேல் வேலைபார்த்துவந்தனர். இவர்களில் பலர் நல்ல எழுத்தாளர்கள்  என்றாலும் அரசில் பணியாற்றும் மந்திரிகளைச் சாடியே எழுதிவந்தனர். இவர்கள் எழுதுவது மக்கள் வாசிப்பதற்கு நன்றாக இருந்தாலும் அடிக்கடி வழக்கறிஞர்களிடமிருந்து கடிதங்கள் வந்தபடி இருந்தன. இரண்டு மூன்று வழக்குகளும் தொடங்கப்பட்டு நீதிமன்றங்களில் நடைபெற்றுவந்தன.

கூட்டத்தில் தீர்வு:

தலைமை ஆசிரியராய் இருந்தவர் ஒரு கூட்டத்தைக் கூட்டி வழக்குகள் அதிகரித்துவருவதைச் சுட்டிக்காட்டினார்.  எழுத்தாளர்களோ தாங்கள் எழுதும் முறைகளை மாற்றிக்கொள்ள முடியாது என்றனர். காரணம் என்னவென்றால் நாட்டில் எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் எல்லாம் சட்டப்படி எழுத்தாளர்களுக்கு இருக்கிறது.  இதை விட்டுக்கொடுக்க முடியாது. அப்படித்தான் எழுதுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இது பெரிய தலைவலிதான். --- இந்த சுதந்திரங்களையெல்லாம் தலைமை அதிகாரிதான் தடுக்கிறார் என்ற இரீதியில் வாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

சரிசரி.   நீங்கள் எல்லாம் இட்டப்படியே சட்டப்படியே எழுதுங்கள். நீங்கள் தவறிவிட்டதாகத் தீர்ப்பளித்து நட்ட ஈடு கட்டும்படியாகத் தீர்ப்பு வந்துவிட்ட வழக்குகளில் ஆகும் எல்லாச் செலவுகளையும் எழுதுகிறவரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.  நமது குழும்பு ஏற்றுக்கொள்ள முடியாது.  அதுமட்டுமின்றி குழும்புக்கு ஏற்படும் எல்லாச் செலவுகளையும் நீங்களே சரிப்படுத்திவிடுங்கள். நான் உங்களைக் கட்டுப்படுத்தவில்லை  என்று தலைமை அதிகாரி சொன்னார்.

தலைமை தேவை

நட்டங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றனர் எழுத்தாளர்கள்.
அப்படியானால் நான் சொல்கிறபடி எழுதுங்கள். வழக்குகள் வராதபடி பார்த்து எழுதுங்கள். எனது மேற்பார்வை இல்லாமல் எழுதுவதை அனுமதிக்க முடியாது என்று தலைமை அதிகாரி சொல்லவே,  வேறுவழியின்றி எழுத்தாளர்கள் ஒப்புக்கொண்டு இப்போது எல்லாம் நன்றாக நடைபெற்று வருவதாகத் தகவல்.
ஆகவே ஒவ்வொரு நிறுவனத்திலும் தலைமை தேவையானதாகிறது.

இந்தக் கட்டுரையில் வரும் சொற்களைப் பின்னர்
அலசி ஆராய்வோம்.

சிறுமை குறிப்பவை

சின் என்பது சில் என்பதனடிப் பிறந்த சொல்.  இது சிறுமை குறிக்கும்.

சில் -  ஒரு கல்லிலிருந்து சிறு துண்டாகப் பெயர்ந்தது.

சில் -   சில என்றும் பொருள்படும்.
    சில் > சில.   இங்கு அ  பன்மை விகுதி.  வந்தன என்ற சொல்லில் உள்ளது         போன்று.

சில்+ நாள் =  சின்னாள் (சிலநாள் )
சிலர். சில்லோர்.

சீனி  <  சின்+ இ .   சிறு கற்கண்டு அல்லது இனிப்புத் துகள். சின் என்ற சொல் முதனிலை நீண்டு விகுதி பெற்றது.

மலையாளிகள் சீனியை ஜீனி என்பர்.

சின் >  சின்னம் ( ஒன்றைப் பின்பற்றிச் சிறிதாகச் செய்யப்பட்டது அல்லது
 வரையப்பட்டது.
 இப்போது பெரிதும் இதிலடங்கும் என்று தெரிகிறது,  எ-டு: நினைவுச் சின்னம்.

சின்+து =  சிந்து,   (சிறிய அடிக் கவிதை.  மூன்று சீர்கள் ).  ஓர் இராகம்.

சின்+து:  சிந்து (ஒருவகை நூல் என்பர்.)  இது பாகிஸ்தானில் பண்டைக்காலத்தில் விற்பனை செய்யப்பட்டதால்  நதிக்கும் பெயராயிற்று.

சிந்து > இந்து ( மத அல்லது மக்கட் பெயர்).

சின் > சிந்துதல் ( நீர் துளிகளாக வீழ்தல்)

சிந்தித்தல் -  சிறிய அளவில் எண்ணுதல், மற்றும் அதை வெளிப்படுத்துதல்.

சின் > சினை ( சிறிய குஞ்சுகள் உள்ள கருக்கூட்டம் அல்லது பை)  ; உறுப்பு.

சின் > சிந்து > சித்து:  சிறிய இயற்கைக்கு மீறிய செயல்கள்.  சிந்தனை.
சித்தன் = சிந்தனையாளன்.

இன்னும் பல,



செவ்வாய், 30 ஜனவரி, 2018

நினைவிலிருத்தும் திரிபுகள்.



நினைவில் நிறுத்தத் தக்க திரிபுகள் சிலவற்றை இங்குப் பதிவு செய்வோம்.

தாவணி >  தாமணி
வகரத்துக்கு மகரம் பதிலாக நிற்கும் திரிபுவகை.

குறில் நெடிலாகியும் பொருள் மாறாமை.

தலம் >  தாலம்
தரணி >  தாரணி.

சில தமிழ்ச் சொற்கள் குறில் நெடில் விதந்து தோன்றாத பிற மொழிகட்குச் சென்றால் நீண்டொலிக்கும்.  வந்துழிக் காண்க. இங்கு யாம் பட்டியலிடுதலைத் தவிர்ப்பேம்.

சில சொற்களில் ழகர ஒற்று வீழும்.

தாழ்மதித்தல் > தாமதித்தல்.

இது நேரமதிப்பீட்டினோடு தொடர்புபட்ட 
செயல்பாட்டினை குறிப்பது.  இப்போது செய்வதைப் 
பின் செய்வதுபோலும்.

சில சொற்களில் ழகரத்துக்கு டகரம் ஈடாதல்:

பாழை  :  பாடை.
தாழ்ச்சி :  தாட்சி.
தாழ்ச்சணியம் :  தாட்சணியம்.

மீறிப்போகாமல் தாழ்ந்து அணிசெய்தல் எனினுமாம். 
இதில் வல்லவன் அருளன்பு காரணமாக மேட்டிலிருந்து 
இறங்குதல்போல் கீழ் தாழ்ந்து நிகழ்வை அழகு
படுத்துகிறான்.  இஃதோர் அரிய செயல்பாடாகும். 
இரங்குவோனே மாந்தன்;

அறிந்து மகிழ்வீர்.