ஞாயிறு, 21 ஜனவரி, 2018

உருத்திராட்சத்துக்கு இன்னொரு பெயர்



உருத்திராட்சத்துக்கு மற்றொரு பெயரை இன்று அறிந்துகொள்வோம். பெயரை அறிதலுடன்,  அப்பெயரின் அமைப்பையும் அறிதற்கு இன்றே வாய்ப்பும் ஆகும்.

உருத்திராட்சம் என்பது  உருப்போடும் போது அதன் எண்ணிக்கையை அறிவதற்கு ஒரு மாலையாகக் கோத்த  சிறிய உருளைகளை விரல்களால் உருட்டி அல்லது நெருடி ( " நிரடி"  ) எத்தனை சொல்லிவிட்டோம் என்று அறிந்துகொள்வதற்கான கருவியாகும்.  இதைச் சுருக்கியும் இன்னும் நன்றாகவும் வரையறவு செய்யலாம் எனினும் இது விளக்கத்தின்பொருட்டு கூறப்படுவதாதலின் இத்துடன் அமைவோம்.

இங்கு முன் நிற்கும் சொல் உரு என்பதுதான்.  ஆனால் உரு என்பது உருத்தல் என்ற வினைச்சொல்லினின்று மேல்வருவதாதலின், தோன்றுதல் என்று பொருள்கொள்ளலாம்.  ஆனால் உருப்போடுதல் என்ற உலக வழக்குச் சொற்றொடரில்  இது எப்படிப் பொருந்துகிறதென்று சிந்திக்கலாம்.

மண்ணாலோ மாவினாலோ அல்லது உகந்த பிறவாலோ ஓர் உருவை அமைத்து அதற்கு மந்திரங்கள் சொல்லிப்  பூவையோ ஏற்ற பிற பொருளையோ அதன்முன் சொரிந்து ஒரு குறிப்பிட்ட தொகையில் முடிப்பது “ உருப்போடுதல்” என்று கூறலாம்.  ஆனால் இதை உருத்திராட்சம் இன்றியே செய்யக்கூடுமே.

சொல்லும்போது சிற்றுருளைகளைத் திரட்டுதல் என்ற செயலுக்கு உரு என்பதை உருளை என்ற சொல்லின் கடைக்குறையாகக் கொள்வதே சரியாகும்.

அதாவது உருளைத் திரட்சி என்பதிலிருந்து அமைந்ததே உருத்திராட்சம்
திரள் > திரள்+சை > திரட்சை > திரட்சம் > திராட்சம்.
சை :  விகுதி;  அம் :  விகுதி.

(திரள் > திரட்சை > திராட்சை  என்னும் கொடிமுந்திரிப் பழத்தின் பெயரும்  ஈண்டு கவனிக்கத்தக்கது ).
திரளாகக் காய்ப்பது திராட்சை.

ஐ என்ற ஆதி விகுதி/ எழுத்து,  பல்வேறு மெய்களிற் சென்றேறி,  கை, சை, ஞை, டை, தை, பை, மை, யை, ரை,  லை, வை, ழை, றை, 0னை என விகுதியாகவும் சொல்லிறுதியாகவும் வருமென்பதை அறிக.

ஐயீற்றை அம் எதிர்கொள்ளின், ஐ வீழும். மெய் மட்டும் அம்முடன் புணரும்.
வீழாமலும் சொல்லமையும்.  எ-டு:  இணையம்.   இது நிற்க:

உருத்திராட்சத்துக்கு மற்றொரு பெயராவது:  தாவடம் என்பது.

வடம் எனின் ஈண்டு கயிறு என்றோ வட்டம் என்றோ பொருள்தரும். இதன் அடிச்சொல் வள்.  வள் > வடு > வடம்;  வட்டமும் ஆம்.  வடம் என்பது வட்டம் என்பதன் இடைக்குறையாய் வட்டமென்று பொருள்தரும் எனினுமது.

கழுத்தின் பின்பகுதியில் இருந்து நெஞ்சு வரை தாழ்ந்து தொங்குதலை உடைமையால்,  உருத்திராட்சம் தாவடம் ஆயிற்று. இங்கு ழகரம் கெட்டது.

பிறசொற்கள்: ஒப்பிடுக:-

தாழ்வணி >  தாவணி > தாமணி.
அல்லது தாழ் > தா > தா+அணி = தாவணி எனினுமாம்.

தாழ் வரம் >  தாவரம் ( தாழ முளைத்து வளர்வன ஆகிய செடி கொடிகள் .)

தாழ்வாரம் > தாவாரம் ( பேச்சுத்திரிபு)

உருத்திராட்சம் = தாவடம். ஆயின்; வெவ்வேறு அமைப்பின ஆகும்.

ழகர ஒற்றுக்கள் பெரும்பாலும் கெடும்.  எடுத்துக்காட்டுகள்:

வாழ்த்தியம் > வாத்தியம்.
கேழ்வரகு > கேவரகு > கேவர் (பேச்சு வழக்கு).
தாழ்ப்பாள் > தாப்பா. (" )

திரிதல்:

வாழ்நாள் > வாணாள்.

திருத்தம் : மறுபார்வை.

கவனம்: கள்ளமென்பொருள் புகுத்தும் வேண்டாப்புள்ளிகள். 






கோயிலிற் சென்றுறைவோர் தாசியல்லர்



கோயிலுக் காண்டவன்பால் குன்றிவிடாப் பற்றினால்
தாயன் எனப்பணிந்து  தக்க அறிவோடு
சென்றுறைந்த பெண்ணெலாம் சீர்கெட்ட தாசியெனக்
கன்றுமதி  கொண்டோர் கழறுதற்குக் கண்டனத்தை
முன்வைத்தல் யாண்டுமே  வேண்டுவதே மாறுதல்பால்
கண்வைத்து நிற்போர்எக் காலமும் வேண்டாமே!
பத்தி இலார்நம்  பரமனின் ஆலயத்துள்
புத்தி புகட்டார் நமக்கேலோர்  எம்பாவாய்!


தாயன் -  தாய்போன்றவன்.

சனி, 20 ஜனவரி, 2018

பிசாசு மற்றும் மாதா , பிதா



இன்று ஒர் சொல்லினை ஆய்வு செய்து அறிந்துகொள்வோம்.

புதிய சொற்களை எதிர்காலத்தில் எப்படி அமைப்பது என்பதையும்  இவ்வாய்வின் மூலம் நாம் அறிந்துகொண்டு, இந்தப் பாணியில் புதிய சொற்களை இனி அமைத்தல் இயலுமா என்பதையும் கண்டுணரலாம். 

சொல்லை எப்படி அமைத்தாலும் அது மக்களிடத்து வழக்குப் பெற வேண்டும் அன்றோ.   அமைப்பதினும் அதன் பின் வழக்கே முன்மையானதாகும்.

ஆசு என்ற சொல்லைப் பண்டை ஆய்வாளர்கள் பெரிதும் கையாண்டிருக்கிறார்கள் என்றே தெரிகிறது.  ஆசிரியன் என்பது மட்டுமின்றி ஆசனம் என்பதையும் கவனித்தல்வேண்டும்.

ஆசு+ அன்+ அம் =  ஆசனம்  ஆகிறது.

ஆசனங்கள் செய்யும்காலை தரையையே நாம் பற்றுக்கோடாகக் கொள்கிறோம்.  ஆசனம் என்பதை ஆகாயத்தில் இயற்றுதல் இயலாது. தரையில் அமர்ந்துகொண்டோ,  கிடந்துகொண்டோ, நின்றுகொண்டோ தான் செய்யவேண்டும்.  ஒரு பலகையில் படுத்துக்கொண்டு செய்தாலும் தரையில்தான் அப்பலகை இடம்பெறும். மேலும் உடலுடன் கைகால் தலை முதலியன கூடியே ஒவ்வோர் ஆசனத்தையும் செய்யமுடிகிறது.  இதனாலும் அது இவ்வுறுப்புகளைப் பற்றுக்கோடாகக் கொண்டு செய்யப்படுவதாகிறது.

ஆசனம் எனின் பற்றுக்கோடு.  இதனை இருக்கை என்ற மற்றொரு சொல்லால் குறித்தலும் ஆகும்.

இனி நாம் எடுத்துக்கொண்ட சொல்லுக்கு வருவோம்.

பிசாசு என்பது:

பி = பின்.  (பின்பு).   காலப்பின்மை.
சா =  சாவு.

அதாவது சாவுக்குப் பின்;  "Pin"  used like a prefix.

ஆசு = பற்றி நிற்பதாகிய நிலை.

சாவிற்குப் பின்னால் பற்றிநிற்பது என்பதில்; பி முன்னாகவும், சாவு பின்னாகவும் இறுதியில் பற்றுதல் கருத்தும் வருமாறு முன்பின்னாகச் சொல் அமைந்தது.

ஒப்பு நோக்குக:

பி = பின்.
தா = தாய் .
பிதா: தாய்க்குப் பின் வருவோனாகிய தந்தை.
இந்த முறை பின்பற்றப்பட்டது.

மாதாவே பெரியவள் என்பது பண்டையர் கொள்கை.  மா= பெரிதாகிய தன்மை; தா =  தாய்.

மாதா : பெரியோளாகிய தாய்.   அம்மாவே பெரியவள்.

இந்தச் சொல்லின் வரும் மா என்பது அம்மை (அம்மா) என்பதன் ஈறாகவுமிருத்தல் கூடும்,  இருமுறை அம்மா சொல்லில் பதிவுபெறுதல் மாதாவின் பெருமையையே புலப்படுத்தும்.  இருமை பெருமை. பன்மை பெருமை. ஒருவனை அவர் என்று நாம் பன்மையில் சொல்லவில்லை?? பணிவுப் பன்மை அதுவாகும்.  (  எனினும் அதுவே).

மாதா பெரியவள்; தந்தை அவள் பின்.  மாதா - பிதா.

பெண்வழிக் குமுகத்தின் பண்டை மேலாண்மையைக் காட்டுகிறது இது.
அறிந்து மகிழ்வீர். 

இது ஒரு பெண்ணாளுமைக் குமுகத்தின் ஆக்கம் ஆகும். 



வியாழன், 18 ஜனவரி, 2018

கள்ள மென்பொருள்

இந்த இரண்டு நாளும்
வந்த கள்ள மாகும்
மென்பொருள் அதனாலே
என் கணினி தானே
சீர்பட வேண்டி  வீணே
நேரம் சென்றது தோழி!
இனிநம் வலைப்பூ வாழி!

Among the havoc created by the  virus, the
modems were de-recognised by the computers.
New modems are yet to be installed.

The next post is from another location.

செவ்வாய், 16 ஜனவரி, 2018

இராசி வீட்டுக்கும் பாவகம் ....



இன்று பாவகம் என்ற சொல்லை அறிந்து இன்புறுவோம்.

பாவகம் என்பது பல பொருளுடைய ஒரு சொல். அப்பொருள்களில் வீடு என்பதும் ஒன்றாகும்.

கணியக் கலையில் (சோதிடத்தில் )  பிறப்பினைக் கணிக்கக் கட்டங்கள் வரைவர்.  அக்கட்டங்கள் பன்னிரண்டாயினும் இராசி நாதர்கள் என்னும் கோள்கள் ஒன்பதே ஆகும்.  சில கணியர் ஏழே கோள்களைக் கொண்டு கணித்துக் கூறுதலும் உண்டு. இதற்குக் காரணம் இராகு ( இர்+ஆகு) மற்றும்  கேது (கே(டு)+து)   என்பன பாணிப்புகள் அல்லது ஊகத்தில் விளைந்தவை.  (postulated)

ஆனால் இற்றை  நிலையில் புதிய கிரகங்களும்1 கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ( நெப்தியூன், யூரேனஸ் ). கணிதத்தின் மூலம் இன்னும்* இரண்டு கோள்கள் இருந்திருக்க வேண்டும் என்று ஊகித்தறிந்தது நுண்மாண் நுழைபுலமே ஆகும்.

இந்த இராசி வீட்டுக்குப் பாவகம் என்றும் சொல்லலாம்.   இதைக் "கோள் பாவிக்கும் அகம்" என்று முடிபுகொண்டு,  பாவி+ அகம் = பாவகம் எனினுமாம்.

பன்னிரண்டாகப் பகுக்கப்பட்டிருத்தலால்,   பகு+ அகம் =  பா + அகம் = பா+வ்(வகர உடம்படு மெய்) + அகம் = பாவகம் ஆகும்.  பகுத்துள்ள வீடுகள் என்பது பொருள்.  பகு என்பது பா என்றும் திரியும்.  பகுதி > பாதி.   இது மிகுதி > மீதி எனல்போலுமாம்.

மனிதன் முதன்முதல் அறிந்துகொள்ள விரும்பியது தான் சாகும் நேரம்,  அதை உடனே அறிய இயலாமல் பல கணிப்புகளுக்குள்ளும் புகுந்து படிப்படியாக கணியக் கலையை வளர்த்துப் பிற பல அறிந்தான்.  

சா+ து + அகம் = சாதகம் எனின் சாவை  அறிவதற்கான (கணிக்கலையின்) உட்பொருள் என்று அர்த்தம். இதுபின் பிறப்பை அல்லது அதிலிருந்து அதை (சாவு நிகழ் நேரத்தை )  அறிய முற்பட்டு அது உடன் அறியா நிலையில் பிறப்பு முதலியவை கணித்து, ஏனைய அறிந்தான். அது    ஜா+து + அகம் = ஜாதகம் ஆயிற்று. (து :  உடையது , உரியது, அஃறிணை விகுதியும் ஆகும்.) ஆனால் மாரகத்தை ( மரணம் அல்லது சாவு நேரத்தை மட்டும்) இன்னும் துல்லியமாக அறிய இயல்வில்லை. பல்வேறு கோணங்களில் சில நாட்களாவது முயன்று அறிய வேண்டுமாதலின் அது கைவிடப்பட்டு,  கண்டங்கள் அல்லது அது (சாவு) நிகழும் வாய்ப்புள்ள காலங்களை மட்டுமே இப்போது கூறுவர்.

பாவகம் - இராசி;  (வீடு) .   

 சொல்லறிந்து மகிழ்வீர்.


அடிக்குறிப்புகள்:
இரு+ அகம் > இரகம் > கிரகம்.  இராசி வீட்டில் இருப்பது.
இரு + ஆசு + இ > இராசி.  (பற்றுக்கோடு கொண்டு இருப்பதான கோளின் வீடு.)
* இன்னும் என்பது சேர்க்கப்பட்டது.  இப்போது  யாம் நினைத்த பொருண்மை நன்'கு வெளிப்படும்.

திங்கள், 15 ஜனவரி, 2018

பொங்கல் இனிமை பெருகட்டும்!



பொங்கல் உண்பீர்!

பொங்கலுண்டால் மங்கலமே தங்கு மெங்கும்;
பொங்கலிது போகுமுன்னே உண்க நன்`கே;
எங்களுக்குப் பொங்கலிலை என்ற பேரும்
இனிமையினால்  நன்றிதுவே என்றி ணைவார்;
நன்கணமாய்   நலங்கள்தாம்  நண்ண வேண்டின்
நாற்சிறந்த பெருநாளும் கொண்டா டுங்கள்
பெண்களினிப் பொதுநிலையில் கண்போல் பண்பீர்
பேதமின்றிப் பொங்கினிய சாதம் உண்பீர்.