சனி, 19 ஆகஸ்ட், 2017

ஔவையார் புறநானூற்றுப் பாடல் விளக்கம். பா: 286


இனி ஔவைப்பாட்டியின் ஓர் ஐந்துவரிப் புறநானூற்றுப் பாடலைப் பாடிப் பொருளறிந்து இன்புறுவோம்.
இது 286வது பாட்டு. கரந்தைத் திணையில் வேத்தியல் துறையில் வருகிறது.
பாடல்:
வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போல
தன்னோர் அன்ன இளையர் இருப்ப
பலர்மீது நீட்டிய மண்டை என்  சிறுவனைக்
கால்கழி கட்டிலிற் கிடப்பத்
தூவெள் அறுவை போர்ப்பித் திலதே.

இந்தப் பாடலில் போர்மறவர்கள் வெள்ளாட்டுக் கடாக்களுக்கு ஒப்பிடப் படுகின்றனர். ஒரு தாய் பாடுவதுபோலப் பாடல் அமைந்துள்ளது. அத்தாயின் மகனோ போருக்குப் புறப்படத் தயாராய் நின்ற இளைஞன். “வெள்ளை வெள்யாட்டுச் செச்சை”. வெள்யாடு என்பது வெள்ளாடு.   யாடு =  ஆடு.
ஆனை என்பது யானை என்றும் வரும். இவ்விரண்டுள் நாம் யானை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஆடு என்பது யாடு. இவ்விரண்டுள் யாடு மறக்கப்பட்டது; ஆனால் ஆடு இன்னும் வழக்கில் உள்ளது.  மொழியில் எப்படியெல்லாம் மாறுதல்கள் ஏற்படுகின்றன பார்த்தீர்க்ளா வெள்ளாடு அல்லது வெள்யாடு என்பது ஒரு வகை ஆடு. மறி என்பது வேறுவகை. இப்போது செம்மறி ஆடு என்று வழங்கும்.
இளைஞனைக் காளை என்று ஒப்பிடுவது இன்றும் காணப்படுகிறது. வெள்ளாட்டுக் கடாவுக்கும் ஒப்பிடலாம் என்பதை இப்பாடலின்மூலம் தெரிந்துகொள்ளலாம்.
சுற்றி நிற்கும் வெள்ளாட்டுக் கடாக்களைக் போல இத்தாயின் மகனைச் சுற்றி இளைஞர் பலர் நின்றனர்.
ஓர் உண்டாட்டு நடைபெற்றது. ( உணவுடன் கலந்த ஆட்ட நிகழ்ச்சி ). அப்போது வேந்தனோ அல்லது படைத்தலைவனோ அவர்களுடன் நிற்கிறான். (ஓரு பெரிய அதிகாரி ).  ஒவ்வொருவருக்கும் ஒரு மண் சாடியை நீட்டுகிறான். அதனுள்ளே கள். அதை எல்லோரும் வாங்கிக் குடித்து மகிழ்ந்து ஆடுகிறார்கள். அதில் குடித்த பலர் பின் போருக்கு ஏகி அங்கு மடிந்தனர். ஆனால் இத்தாயின்மகன் சென்று வெற்றிக்கனியைக் கொணர்ந்து தாய்க்கு அர்ப்பணித்தான். (வெற்றியைத் தாயின் திருமுன் படைத்தல் ).
பாடலில் வந்துள்ள சில அருஞ்சொற்களைப் பார்ப்போம்.
செச்சை -  கடா.
தன் ஓர் அன்ன – தன்னை ஒத்த;
இளையர் -  இளவயதினர்;
இருப்ப -  சூழ நிற்க;
மண்டை -  மண் சாடி.  (மண் + தை.  இங்கு தை விகுதி ). தை > தைத்தல் : இணைத்தல், செய்தல் எனக்கொண்டு, மண்ணால் ஆனது என்று சொல்லமைப்பைக் காட்டினாலும் ஆகும்.
சிறுவன் -  இங்கு மகன் எனற்பொருட்டு.
கால்கழி கட்டில்:  பாடை.  காலம் கழிந்ததும் இடுவதற்குரிய கட்டில்.  கால் – காலம்.  அம் விகுதி இன்றி வந்தது.  கழி -  கழிந்த. இது வினைத்தொகை.
அறுவை – போர்வை.
போர்ப்பித்து இலதே -  பிணப்போர்வையை இடவில்லை.
அறுவை:  இன்று இப்பொருளில் இச்சொல் வழங்கவில்லை என்று தெரிகிறது.  அறுக்கப்பட்டதை அறுவை என்றனர்.  துணிக்கப்பட்டது துணி என்றும், வெட்டப்பட்டது வேட்டி (வெட்டு+ இ : இது முதனிலை நீண்ட தொழிற்பெயர்). என்றாற்போல அறுவை என்ற சொல் அமைந்துள்ளது.
வேட்டி என்பதை வேஷ்டி என்று அழகுபடுத்தியதுடன். இச்சொல் மேலை மொழிகளிலும் பரவிச் சேவை செய்கிறது.  Vest என்ற ஆங்கிலச் சொல்லும் இதிலிருந்து வந்ததுதான். இது இலத்தீன் முதலிய மொழிகளிற் பரவிப் பல சொற்களைப் படைத்துள்ளது. உலக மொழிகட்குத் தமிழ் செய்த பேருதவி இதுவாம். 

Will be edited later as there are posting problems presently.

Justified on 6.6.2022











வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

பகலவன் வணக்கம்

பகலவன் வணக்கம்.

பகலவனின் வெப்பமிங்கு மிகுந்து விட்டால்
பையிலுள்ள எழுதுகோலும் மையி ழக்கும்!
தகத்தவென் றேகிழக்கில் உதிக்கும்காலை
தன்னிழப்பை மறந்துமனம் அதைவணங்கும்.

பகலவன்இல் லா உலகில் பசுமை இல்லை;
பகலவன் இல் லா விடிலோ முதுமை இல்லை;
பகலவனில் லாவிடிலே வளர்ச்சி இல்லை;
பகலவனில் லாவிடிலே தளர்ச்சி இல்லை;
பகலவனால் உண்டெலாமே நன்மை தீமை;
பகல் அவனே இகல் அவனே; நட்புமாமே.

ஒரு பந்துமுள் ((ball-point pen )எழுதுகோல் காய்ந்துவிட்டது.
இதுபோன்றவை காய்ந்துவிடுதற்குக் காரணம்
பகலவனே என்றெண்ணியகாலை மேற்கண்ட
வரிகள் பிறந்தன. பாடி மகிழுங்கள்.

சொற்பொருள்:

இகல் : பகை.

பெரும்பாலும் பகலவனை அவன் என்று சுட்டுவது   பெரும்பான்மை.
இங்கு அதை என்று சுட்டப்பட்டுள்ளது. சூரியதேவன் என்று உயர்திணையாகக் கொள்ளப்படினும்,  (மக்கள், தேவன் உயர்திணை)  அஃறிணையாக வரும்வழக்கும் உளது.    பொழுது புலர்ந்தது என்பதும்
காண்க. பகலவன் என்பதற்கு அன் விகுதி உண்டெனலாம்.  எனினும்
அதை என்றே குறிப்பிட்டுள்ளேம். சோதிடர்கள்   கிரகநாதர்களைப் பற்றி விவரிக்கையில்  அது  இது என்று ஒவ்வொன்றையும் குறிப்பிடுதலும்
கேட்டிருக்கலாம்.


சேவை



சேவை என்ற சொல்லை ஆய்வு செய்யலாம்.
இச்சொல்லைப் பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட முறை யாம் எழுதியதுண்டு.

சே என்ற அடிச்சொல்லைப் பற்றிய இடுகையும் இங்கு உள்ளது. அதையும் நீங்கள் இன்னொரு முறை வாசித்துக்கொள்ளலாம்,.
http://sivamaalaa.blogspot.com/2015/10/blog-post_61.html (“ சே அடிச்சொல்” )

செய் என்ற சொல்லும் சே என்று திரியும்.
செய் > செய்வை > சேவை.
செய் என்னும் வினை சே என்று முழுச்சொற்களில் திரிதலென்பது இயல்பானது ஆகும்.  அறியார்க்குப் புதிதாகத் தோன்றும் இது வரும் ஓரிண்டு இடங்களைக் கண்டு அதுகொண்டு நமதறிவினை விரித்துக்கொள்வோம்.

செய் > செய்தி > சேதி.
செய் > செய்தரு (பழங்கால வினைச்சொல்)..
செய் > செய்தரு+ அம் = செய்தாரம் > சேதாரம்.
தரு+ அம் = தாரம். எப்படி என்று குதிக்கலாம் சிலர்.  ஒரு+ ஊர் என்பது ஓரூர் என்று திரிவது போன்றதே இது. உயிர் வருவிகுதி முதலில் வருவதால் தரு என்பது தார் என்று திரிகிறது.  அப்படி இல்லாமலும். சொற்பிறப்புக்காக தார் என்று திரிவதும் உளது.  தரு> தார்.  (வாழைத்தார்)  வாழை தருவது வாழைத்தார்.  பிள்ளைகள் பெற்றுத் தருபவள் என்ற பொருளில் தரு+ அம் = தாரம் எனவும் ஆகும். மொத்தத்தில் தாரம் என்பது தரு அம் என்பதுணர்க.

சேதாரம் என்பது சேதம் என்பதன் விரிவாகக் கருதப்படுதலும் உளது.   அங்ஙனம் ஆயின். அதன் அடிச்சொல் யாது:?

செது > செதுக்கு.
செது + அம் = சேதம்’
செது+ ஆரம் =  சேதாரம்,

இவற்றில் முதனிலையும் நீண்டு தொழிற்பெயராம் என்பது உணர்க.  செதுக்குகையில் “சேதம்” ஆனது என்று பொருள். இங்ஙனம் இருமாதிரியாக வரும். ( இருபிறப்பிச் சொல்). இவ்வாறாவது, ஆர்தல் – பொருந்துதல் என்னும் பொருட்டாம். முழுப்பொருள்:  செதுக்கிப் பொருந்துதலுக்கு உண்டாகும் இழப்பு என்பது. இதை விளக்க, வழிமாறிச் செல்லுதல் தேவையாகின்றது.



.




வியாழன், 17 ஆகஸ்ட், 2017

To appreciate and respect all religions

This Video of a Muslim Building a Temple Is ...

More than just religious tolerance.....

Emulate in your own way.


https://www.thequint.com/india/2017/08/15/this-video-of-a-muslim-building-a-temple-is-melting-our-hearts

Click:

https://www.thequint.com/india/2017/08/15/this-video-of-a-muslim-building-a-temple-is-melting-our-hearts


ஆனை புலி ஊருக்குள் வருதல்......தீர்வு!!



ஓர் உரையாடல்

:
தம்பி:    அண்ணே,  நம் ஊரில் இப்போது நடமாடவே
         அச்சமாய் இருக்கிறதே…..
அண்ணன்:  ஆமாம்  தம்பி.   என்ன செய்வது,  உடனே
         வேறே ஊருக்குப் போய்விடவா முடிகிறது ?  
         எதற்கும் பத்திரமாயிரு…….
தம்பி:    நம் காவல் துறைக்குத் தெரிவித்துவிட்டோம்.      
         ஆனால் யாரும்வந்து இந்தக் காட்டு 
         யானைகளைப் பிடிக்கமாட்டோம் 
                     என்பதுபோல் நடந்துகொள்கிறார்கள். புலி
                    வந்து தொந்தரவு செய்து அது இப்போதுதான்
                    ஓய்ந்தது. அதற்குள் யானை வந்து
                    கரைச்சல் பண்ணுகிறது……

அண்ணன்:  அது,  காரணம் என்ன தெரியுமா?  
          காவல் துறையில  ஒன்றிரண்டு பேருக்குத்தான்
          யானை புலி பிடிக்கத்தெரியும். பாக்கிப்பேர்கள்
          எல்லாம் ஏட்டெழுத்துப் படித்தவர்கள். ஆளை 
          வேண்டுமானல் பிடிப்பார்கள்.  ஆனையைப் 
          பிடிக்கமாட்டார்கள். அதற்குக் காட்டிலாகா 
          அதிகாரியை வரவழைக்கவேண்டும். அவரெங்கே 
          போய்த் தொலைந்தாரோ தெரியாது.
அவர் வரும்வரை ஆனை இங்கேதான் இருக்கும்.


தம்பி:     நெருங்கிப் போகமுடியாத யானைகளாக

இருக்கின்றன…..அவர்கள்
வருவதற்குள் ஒரு மரஞ்ச்செடி கூட மிஞ்சாது…..காவல்துறைக்குள்ளேயே 
புலிப்பகுதி, ஆனைப்பகுதி என்று ஏற்படுத்திவிட்டால்
நமக்குத் தொல்லை இருக்காது….

செய்தி: தமிழ் நாட்டுச் சிற்றூரில் யானகள் புகுந்தன. 


cannot be justified.















 


செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

அம்மன் அலங்காரம்,



 (வேறு வேறு சந்தங்களில்)

இனிதாய் நிறைவை அடைந்து --- அம்மன்
இன்னருள் பெற்றே மகிழ்ந்தனர்காண்!
கனிதேன் கலந்து சிறந்து ---- கோவிலில்
கண்டவை யாவும் ஒளிர்ந்தனகாண்.

 ***

ஈரா    யிரம்பெறும் மாமாலை  ----- அணிந்தே
ஏற்ற முடன் திகழ்ந்  தாள்அம்மையே
ஆரும் அறியா அழகுடனே --- அம்மை
அருள்வடி வாகினள் கேள்உண்மையே.

பிறவி எடுத்தேனே அம்மனது ---- மனங்கவர்
பேரலங் காரமே கண்ணுறவே.…!
சிறையுள் புகுந்தேன் அவள்மனமே ---- இனி
விடுதலை என்பதெம் கைக்கனியே.

தகத்தக என்னும்நல் தாலிதனை ---  அணிந்து
தன்னே ரிலாதொரு காட்சிதந்தாள்;
மிகத்தரு புன்னகை கண்டயர்ந்தேன்  -----  இக்கவின்
இகத்தினில் காணவும் உண்டென்பையோ  ?

அச்சுப்பிழைகள் திருத்தப்பட்டன. 2300  15082017





சிங்கப்பூர் தேசிய தினம் வாழ்த்து



தேசிய நல்   தினந்தன்னை விமரிசையாய் இன்று
சீர்சான்ற முறையினிலே கொண்டாடும் சிங்கை;
பாசமிகும் மக்களுடன் பகிர்ந்தொன்றாய்  நின்று
பன்மூச்சும் ஒருமூச்சாய்க் கலந்துவெளித் தங்க
நேசநகை தோன்றிடவே நிமிர்ந்தழகு காட்டி,
நிலையான குடியரசை  நிறுவுபுகழ் கொண்டார்
தூசுபடி ஊழல்பிற தொல்லைகளை  வென்ற
வீசொளி நட் சத்திரமே  வெகுகாலம் வாழ்க,,

இது 2015ல் எழுதப்பட்டது.   (9.8.15) தேசிய தினத்தைக் கொண்டாடி மகிழ்வோம்.
குடியரசு எல்லா நலங்களும் பெற்றுத் திகழ்க.