இன்று நிர்வாணம் என்ற சொல்லைச் சிந்தித்து அறிவோம்.
இது மிகப் பழைய சொல்லாகும். புத்தர்பெருமான் நிர்வாணநிலை பற்றிப் பேசினார். ஆங்கிலத்தில் "நிர்வாணா" என்று இது சொல்லப்படும். இதை வரையறை செய்து மதநூல்கள் விளக்கும்.
இஃது விடுதலை பெற்ற நிலையைக் குறிக்கிறது. மறுபிறவியும் இறப்பும் இல்லையாகிவிட்ட நிலை. அதாவது கருமம் தீண்டாத தூயநிலை. இங்குப் பற்று இல்லை. ஆசை இல்லை. அதனால் துன்பமுமில்லை. இந்து வாழ்வியல் புத்த மதத்தையும் முந்தியதாதலின், இக்கருத்துகளைப் புத்தர் இந்து மதத்திலிருந்து பெற்றார் என்று ஆய்வாளர் கூறுவர்.
இதனைச் சாத்தனார் மணிமேகலையில்:
பிறந்தார் உறுவது பெருகிய துன்பம்,
பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்,
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றால் வருவது அறிக
என்று எடுத்துக் கூறுமாறு காண்க. குறளில்: பற்றுக பற்றற்றார் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு என்று அழகாகக் கூறுமாறும் காண்க. மண்ணாசை, பெண்ணாசை , பொருளாசை என்று மூன்று கூறுவர். பெண்ணாசை என்றது ஆண் பெண்மீது கொள்ளுமாசையும் பெண் ஆண்மீது கொள்ளுமாசையும் ஆகும். இதை இற்றையர், பாலியல் ஆசை என்று கூறுவர். ஆசை யாவது, அசைவற்ற மனம் அசைந்து பற்றுதற் கான மூவாசை ஆகும். அசை- ஆசை , இது முதனிலை நீண்டு திரிந்த தொழிற்பெயர். சுடு> சூடு என்பது போலுமிதாம்.
பொருள் சொல்லப் புகுந்து நீண்டு விட்டது. என்றாலும் நிர்வாணம் என்பது அறிந்துகொண்டோம்.
நிர்வாணம் எனற்பாலது நிர்மாணம் என்றும் வழங்கும். இவ்வடிவமும் அகரவரிசைகள் இயற்றினார்க்கு அகப்பட்டுள்ளது. புத்தகராதிகளில் கிடைக்காமற் போகலாம். ஒரு 200 ஆண்டுகட்கு முன் வந்த பதிப்புகளிற் காண்க.
வகரமும் மகரமும் மோனைத் திரிபுகள் எனப்படும். " மானம் பார்த்த பூமி" என்ற சிற்றூர் வழக்கில் வானம் என்பது மானம் என்று திரிந்து நின்றதும் காண்க. இத்தகைய திரிபுதான் நிர்மாணம் என்ற சொல்லில் நிகழ்ந்துள்ளது என்று அறிக.
மாட்சி அல்லது மாண்பு நின்ற நிலையே நிறுமாண்+அம் ஆகும். இதுவே மூலம் ஆகும். இது திரிந்து நிறுவாணம்> நிர்வாணம் ஆயிற்று.
முற்றத் துறந்த முனிவர்கள் எதையும் அணிவதில்லை. இதைப் பின்பற்றியே சமணமதமும் அம்மணம் போற்றிக்கொண்டனர். அம்மணம். இச்சொல் இடைக்குறைந்து, அமணம், பின் வழக்கம்போல அகரம் சகரமாகி அமணம் > சமணம் ஆயிற்று. அடு:( அடுதல் ) > சடு> சட்டி என்றாற்போல. ( சடு+ இ ). டகரம் இரட்டிப்பு.
நிறுமாணம் - நிறுவாணம் > நிர்வாணம்.
நிர்வாணம் எனின் மாட்சி நின்ற உயர்நிலை.
நின்று மாணுதல் : நிறு மாண் > நிறுமாணம் > நிர்வாணம்.
நிர்வாணா > நிப்பானா ( பாலிமொழி)
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
மேலும் வாசிக்க:
சமணர், ஜெயின்: https://sivamaalaa.blogspot.com/2021/07/blog-post_3.html