செவ்வாய், 25 அக்டோபர், 2022

வெற்றிலை - புக இலை : பெயர்கள்.( புக - தொடங்க)

 வெற்றிலை போடும் பழக்கம் நம் புதிய தலைமுறையினரிடைப் பரவா தொழிந்துவிட்டது.  இது ஒரு வகையில் நல்லதுதான்.  வெற்றிலை பாக்கினுடன் போயிலை என்னும் புகையிலையும் சேர்த்துச் சவைத்து,  வாய்ப்புண் முதலிய இன்னல்களை வரவழைத்துக்கொள்ளுதல் அறிவுடைமை ஆகாது. அதனால் சீர்ச்சைச் ( சிகிச்சைச்) செலவுகள் ஏற்பட்டு இழப்பினை உய்த்துவிடும் என்பதும் ஒரு காரணியாகும்.

போயிலை போடுவதால் புற்றுநோய் வருகிறதா என்று ஒரு சிறப்பு மருத்துவ (  ஆய்வாள)ரிடம் கேட்டு உரையாட ஒரு வாய்ப்புக் கிட்டிய காலை, யாம் அவரிடம் கேட்டேம்.   நோய் வந்துற்ற காலை அதற்கு மருந்துகொடுத்து மனிதரைக் காப்பாற்றுவதே வேண்டத்தக்கது,  இந்த ஆய்வெல்லாம் செய்யத்தக்கதாகாது என்று அவர் சொல்லிவிட்டார்.  வாழ்க்கை முழுமைக்கும் போயிலை போட்டு எந்த நோயுமின்றி இறந்தோரும் உண்டு.  சிலகாலமே போயிலை போட்டுப் புற்று நோயில் இறந்தோரும் உண்டு. ஆகவே முடிவாக எதையும் சொல்லமுடியாமையால், இம்மருத்துவர் கூறியதும் ஒருவகையில் சரிதான்.

இந்த இடுகையின் சொல்லாய்வுக்கு இது ஒரு முன்னுரையாகுமா?  ஆமென்றாலும் அன்றென்றாலும் இருக்கட்டும்.  வெற்றிலை என்பது வெற்றி இலை என்பதன் மரூஉ என்றோரும் உளர்.  இந்த வெற்றி என்பது  நீடித்த வாழ்வைத் தரும் வெற்றி என்று பொருள்சொல்ல எம்மிடம் சான்று எதுவுமில்லை.  ஆனால்  பெண்பார்த்து முடிவாகி மணவுறுதி ஏற்பட்ட ஞான்று,  குழுமியிருக்கும் பெரியோர் வெற்றியின் அடையாளமாக வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்ளும் பழக்கம், மலாய்க்காரர்களிடமும் உள்ளதாகும். மலாக்காரர் வழிசார் சீனரிடமு இவ்வழக்கம் உள்ளது. புகையிலைக்கு இப்படி ஒரு சிறப்பு இல்லை என்று தெரிகிறது. வெற்றிலை பாக்குப் போடுவதில், போயிலை போடுதல் ஒரு பிற்சேர்க்கைப் பழக்கம் என்று தோன்றுகிறது.  ஆகவே புகையிலை என்பது புக இலை  ( தொடக்கத்தில் போடும் இலை) அன்று.  புகையிலைதான். புகை என்பது போ என்று திரிந்தது.

வெற்றிலை,  பல பெயர்கள் உடைய ஒரு பொருள்.

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு எல்லாம் இயைத்து மென்று, வாயானது கனிவாகி விடுகிறது.   இந்தக் கனிவில், நோய்நுண்மிகள் இறந்துவிடுகின்றன.  வாயில் நல் மணம் உண்டாகிவிடுகிறது.  கத்தக்காம்பு உள்படப்  பலவும் இயைந்து கனிவதனால்,  இதற்கு "இயைகனி" என்ற பெயரிருந்தமை அறியலாம்.  இயைகனி என்பது நாளடைவில் இடையிலிருந்த  "யை" என்ற எழுத்தை இழந்து,  "இகனி" என்றாயிற்று.  பிறபாகங்களுடன் கலந்து கனியும் இலை யாதலின்,  " இகனி " என்பது வெற்றிலை என்னும் இலையைக் குறித்தது.

இந்தச் சொல் இன்னும் நம்மிடை உள்ளது.

வெற்றிலை தொடர்பான ஆய்வுகள்:

https://sivamaalaa.blogspot.com/2021/11/blog-post_10.html

வெற்றிலைப் பெயர்கள்:

https://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_7697.html

கவிதை: - வெற்றிலை:

https://sivamaalaa.blogspot.com/2018/02/blog-post_2.html

வெற்றிலை:  https://sivamaalaa.blogspot.com/2014/05/vetrilai.html

பாக்கு:  https://sivamaalaa.blogspot.com/2021/12/blog-post_21.html

குரங்கு இன்னும் பல https://sivamaalaa.blogspot.com/2021/05/blog-post_27.html

சருகு பிளகு: https://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_16.html

தாம்பூலம் https://sivamaalaa.blogspot.com/2021/11/blog-post_11.html

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

கருத்துகள் இல்லை: