சனி, 5 மார்ச், 2022

ஆயிற்று, ஆச்சு, போயிற்று போச்சு i

ஆயிற்று போயிற்று என்ற இலக்கியத் தமிழ்  வடிவங்களைச் சிற்றூர் மக்கள் ஆச்சு, போச்சு என்று பேசி வருகின்றனர்.  சிற்றூர்களில் நடைபெற்ற கூத்துகள் நாடகங்கள் முதலியவை,  அவர்கள் போற்றும் மொழிவடிவத்திலே அவர்களைச் சென்றடைய வேண்டுமாதலின்,  ஆச்சு போச்சு என்ற முற்றுக்களைப் பயன்படுத்தி நாடக உரையாட்டுகளையும் கவிதைகளையும் புனைந்தனர். 

"திலகன் ஒருவனாலே இப்படி ஆயிற்று" என்று வாக்கியம் புனைந்தால்,  சிற்றுர் வாழ்நருக்கு  எதோ இன்னொரு மொழியில் பேசுவது போல் தெரியும், ------ அதை அவர்கள் புரிந்துகொள்ள முடிந்தாலும் கூட.  சிற்றூர்ப் பாட்டுகளுக்கு ஆச்சு என்பதுபோலும் வடிவங்கள்,  பாட்டு வரிகளுக்குள் புகுந்து நன்கு படிந்துகொள்ளும் வசதியுடையவை.

"இன்னும் ஐயுறுதலும்  ஆமோ?"   என்பது இலக்கிய நடை.  " இன்னமும் சந்தேகப் படலாமோ? " என்பது சிற்றூரார்க்கு  அவர்கள் வீட்டுமொழி யாகும்.  சந்தேகம் என்ற சொல் இங்கு விளக்கப்பட்டுள்ளது. 

https://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_9.html

இதற்கு முன்னும் அது இவ்வாறே விளக்கப்பட்டது. நம்முடன்  இணையவழி உரையாடியோர் மறவார்.  " இன்னமும் பாரா முகம் ஏனம்மா" என்ற பற்றுப்பாடல் ஒரு திரையில் ஒலித்தது.   " இன்னமும்" என்பது சிற்றூரார் வழங்குவது.


ஆச்சரியம் என்ற சொல்லுக்கு யாம் இலக்கணமுறையிலான சொல்லமைப்பைக் கூறியுள்ளோம்.   அது இரண்டு மூன்று இடுகைகளின் முன் பதிவு கண்டது.  இனி இங்குச் சிற்றூர் வழக்குச் சொல்லைப் போட்டு அதன் சொற்புனைவை விளக்குவோம்.

எப்போதும் நடவாத ஒரு நிகழ்வு நடைபெறுமானால் அதைத் தான் ஆச்சரியம்  என்று கூறுகிறோம்.

தலைகீழாக மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த ஒருவன், தன் கால்  கட்டுக்களை  அவிழ்த்துக்கொண்டு,  மண்டை தரையில் இடிக்குமாறு விழுந்து, ஒரு வலியும் காயமும் இன்றித் தப்பி, நன்றாக இருக்கிறான் என்றால் இதைக் கேட்டவருக்கு இது "ஆச்சரிய"மாக இருக்கலாம்.  இஃது ஓர் அரிய நிகழ்ச்சி அன்றோ?

அது ஒரு நடைபெற்ற நிகழ்ச்சி.   ஆகவே  அது " ஆச்சு".  அது அரியது.  ஆகவே ஆச்சு + அரி.   அப்படி அமைந்துவிட்டது.  அதனால் அம் விகுதி. எல்லாம் சேர்த்தால்

ஆச்சு + அரி + அம்

=ஆச்சரியம் "   ஆகிறது.

" ஆச்சரியம்!  அப்படியா!  ஒரு காயமும் இல்லையா!"  என்று வியப்பர் மக்கள்.

ஆகவே, இச்சொல், ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளில் அமைந்திட  இடந்தருவதாகும்.  

பழங்காலத்தில் இத்தகைய சொற்களை வைத்துச் சிலேடைக் கவிகள் புனைந்து புகழ்ப்பெற்ற கவிகளும் இருந்தனர். ஒன்றுக்கு மேற்பட்டதைச் சில  என்று குறிப்போம்.   ஒரே வழியிற் கொள்ளாமல்,  சில வழிகளில் புனைவு தெரிக்கும் சொற்கள் " இருபிறப்பி" என்று குறிக்கிறோம்.  ஆச்சரியம்  என்பதும் அத்தகைத்தாகும்.

ஆச்சு போச்சு என்ற சொற்கள் இப்போது இலக்கிய வழக்கும் உடையன.   ஆகவே அதைச் சிற்றூர் வழக்கு என்போர்,  " முன் சிற்றூர் வழக்கினதான, இன்று இலக்கிய வழக்குடையதாக வளர்ந்துவிட்ட " என்ற அடைமொழிகளுடனேதாம் சொல்லவேண்டும்.   இன்றேல், குறிப்புரை தவறாம் தன்மை உடையதாகிவிடும்.

 அறிக மகிழ்க.

மெய்ப்பு   பின்னர்.



மெட்டு என்றால் என்ன?

 மெட்டு என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளோம்.  ஆனால் இந்தச் சொல் எவ்வாறு அமைந்தது என்று இதுவரை விளக்கியதாக நினைவு இல்லை. .இங்கோ வேறு எங்குமோ தேடிப்பார்க்கவில்லை.  வேறு யாரும் அதை விளக்கியிருந்து அது இணையத்தில் கிட்டுவதாக யாம்  அறிந்திருந்தால், பிறரும் கூறியதையே ஏன் கூறவேண்டும்  என்று விலக்கிவிடலாம். அவ்வாறு இதுவரை விளக்கியுள்ளதாகவும் யாம் அறிந்திருக்கவில்லை.

இராகம் என்பது வேறு,  மெட்டு என்பது வேறு.  இங்கு மெட்டு என்ற சொல்லினமைப்பை மட்டும் விளக்குவோம்.

மெட்டு என்பதில், மேல்,  இடு ( இட்டு) என்ற இருசொற்கள் உள்ளன. இவை திரிந்து ஒருசொன்னீர்மை எய்தின.

ஓர்  இசையின் அல்லது பாட்டின் போக்கைத் தழுவிப் பாடிக்கொள்வது மெட்டு.

எடுத்துக்காட்டு:

1. ஜெகத்ஜெனனி  என்ற இரதிபதிப்பிரியா இராகப் பாடலும்.  சுத்தானந்த பாரதியாரால் இயற்றப்பட்டு,  எம். எம். தண்டபாணி தேசிகரால் பாடப்பட்டது.

2. மனம் கனிந்தேன் என்ற  பாபநாசம் சிவன் பாட்டு. எம்.கே. தியாகராச பாகவதர் பாடியது.

ஜெகத்ஜெனனி என்பது மூலப்பாடல் போல் தெரிகிறது.

மேல்  > மே.  (கடைக்குறை)..  மெ. (முதற்குறுக்கம்).

இட்டு . ( இடப்பட்டது ).

மே+ இட்டு>  மெட்டு.  இதில் முதலெழுத்து குறுகிற்று.

சொற்கள் குறுகியும் அமையும்.   எ-டு:  தோண்டு > தொண்டை.  காண் > கண்.

மெட்டு:  முன்னரே புனையப்பட்ட பாட்டின் இசைப்போக்கினைத் தழுவி மேல் இட்டுப் பாடப்பட்ட பாட்டு.

அறிக மகிழக.

மெய்ப்பு பின்னர்.

Please do not copy, republish and backdate or do any one of these. You may use it in discussion in your class or study.


வெள்ளி, 4 மார்ச், 2022

ஆச்சரியம்

 ஒன்றைக் கேட்டு அல்லது பார்த்த மாத்திரத்தில்,  " ஆ "  என்று வியத்தல் இன்றும் உள்ளதே  ஆகும். ஆ என்ற ஒலி,  வியப்பில் மட்டுமின்றி, ஏனைத் தருணங்களிலும் எழக்கூடியது.

ஒரு கணவர் வேடமிட்டுக்கொண்டு மனைவியின்முன் வந்து நிற்கையில், அவளால் அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை. அவர் தம் வேடத்தைக் கலைத்தபின் "  ஆ! நீங்களா!"  என்று வியக்குங்கால்  வரும் ஒலிக்குறிப்பாகிய "ஆ!" என்பதைக் கவனிக்கவும்.

வியப்பில் ஆழ்ந்துவிட்ட மனிதன்,  ஓர் சரிவை அடைகின்றான்.  சரியம் என்ற சொல் இந்த நிலையைத் தெரிவிக்கிறது. இஃது ஓர் தளர்வு நிலை ஆகும்.

ஆ+  சரி + அம் = ஆச்சரியம்  ஆகின்றது.  

சரி என்பது ஒப்புக்கொள்வு குறிப்பதாகவும் ஆகிறது.

இன்னொரு வகையிலும் விளக்கலாம்.  பின்பு  அளவளாவுவோம்.


அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்