வியாழன், 30 ஜூலை, 2020

இனி யாம் செய்யவிருப்பது

முன்னெழுதி இட்டவோலை மூன்றுதினம் முன்னே
பின்னெழுதி இட்டவெல்லாம் பிறர்படித்தற் கில்லே
இன்றெழுதிக் கிட்டுவதோ  இனிமை இலாச் சொல்லே
நன்றெழுதி விட்டிடயாம் நனிஉறங்கும்  பின்னே. 


இதன் பொருள்:

முன்னெழுதி இட்டவோலை மூன்றுதினம் முன்னே:
மூன்று நாட்களுக்கு முன்பு யாம் இடுகை ஒன்று
உங்களுக்காக இட்டிருந்தோம்;

பின்னெழுதி இட்டவெல்லாம் பிறர்படித்தற் கில்லே--
அதன்பின் யாம் எழுதியவை எல்லாம் எம் சொந்த
வேலைகளை முன்னிட்டு; அதனால் அவை 
மக்கள் படிக்கத் தக்கவை அல்ல;

இன்றெழுதிக் கிட்டுவதோ  இனிமை இலாச் சொல்லே-
இன்று ஒன்று எழுதப்போகிறோம்;  அது உங்களுக்குக்
கிட்டும்;  ஆனால் அந்தச் சொல்லில் இனிமை எதுவும்
தேடாதீர்கள், இனிமை என்பது இராது.

நன்றெழுதி விட்டிடயாம் நனிஉறங்கும்  பின்னே. 
நல்லபடியாக எழுதியபின்புதான் அயர்ந்து
உறக்கம் கொள்ளுவோம் என்றபடி.

அதைப் படிக்கத் தயாராய் இருங்கள். நன்றி

மெய்ப்பு - பின்...


திங்கள், 27 ஜூலை, 2020

மருத்துவர் உயிரிழப்பு.

பீடிக்கும்  எந்த வயதிலும் 
நோயிம் மகுடமுகி
மாடியில் வாழினும் மண்குடில்
வீழினும்  பார்ப்பதில்லை
ஓடி உழைத்த மருத்துவர்
ஒய்ந்துயிர் விட்டகன்றார்
கூடும் இருபத் துடனேழில் 
நோய்நுண்மி கூடியதே

உரை:

பீடிக்கும்  எந்த வயதிலும் நோய் -  எந்த
வயதிலும் நோயானது பற்றிக்கொள்ளும்;

இம் மகுடமுகி மாடியில் வாழினும் மண்குடில்
வீழினும்  பார்ப்பதில்லை - கொரனா வைரஸ்
நோய் மகுடமுகி என்பது  மாடியில்
வாழ்பவரையும் மண்குடிலில் வாழ்க்கையில்
வீழ்ச்சி காண்பவரையும்
வேறுபடுத்தி நடத்துவதில்லை;

(டெல்லியில்) ஓடி உழைத்த மருத்துவர்
  -  முன்னணியில் இருந்துகொண்டு
 ( இந்த நோயாளிகளைக்) 
கவனித்துக்கொண்ட மருத்துவர்,

கூடும் இருபத்துடன் ஏழில் -  அடைந்த
தன் இருபத்து ஏழாம் (வயதில் )

ஓய்ந்து  -  மருந்துவமனையில் படுக்கையில் 
நடமாட்டம் இன்றிக் கிடந்து;

உயிர்விட்டு அகன்றார் -  இறப்பினை எய்தி
உலகினைப் பிரிந்தார்;

நோய்நுண்மி கூடியதே -  நோய்க்கிருமிகள்
அதிகம் ஆகிவிட்டன.

( அதனால் )  என்றவாறு.



செய்தி:
கொரனா நோய் மருத்துவர் 27 வயதில்
தொற்றின் காரணமாய் மறைந்தார்.
டில்லியில்.

கவனமாய் இருங்கள்.
நோயிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்.

மெய்ப்பு பின்

சனி, 25 ஜூலை, 2020

டகர ரகர ஒலிப்பரிமாற்றங்கள்


எழுத்து திரிபு அடைந்தாலும் பொருள் மாறாமையைப் போலி
என்பர். இங்கு யாம் அந்தக் குறியீட்டினைப் புழங்கவில்லை.
பழைய குறியீடுகளையே பயன்படுத்தி மருட்சியை
விளைக்காமல் புதிய தென்றாலாய் உட்புகுத்துதல் வேண்டு
மென்பதும் எம் நோக்கமாகும்.  இலக்கணத்தையும் உள்ளிலங்கும் குறியீடுகளையும் கொணரப் போதகர்கள் போதுமான அளவில் இருக்கிறார்கள். மட்டுமின்றி, நூல்களும் அனந்தம். பல
படிப்பாரற்றுக் கிடக்கின்றன. வேறு வழிகளில் அவர்களுக்கு
ஆர்வமூட்டுதல் வேண்டும்.

மேலும் சொல்லாய்வு என்பது வேறு. சொல்லாய்வு என்பது
இலக்கணம் அன்று.  தெரிந்த இலக்குகளை வைத்துக்கொண்டு
தெரியாத. உணரப்படாத, உணரமறுக்கின்ற பலவற்றை
வெளிக்கொணர்ந்து ஆய்வதுதான் எம் சொல்லாய்வின்
நோக்கமாகும். தெரிந்ததற்கு நூல்கள் உள்ளன. அதை இங்கு
எழுதவேண்டியதில்லை. மாறுபட்டுச் சென்று உண்மை
காண்பதும் யாம் மேற்கொள்வதாம்.

ஓர் எழுத்துக்கு இன்னோர் எழுத்து மாற்றீடு ஆன
போதும் சில நிலைகளில் பொருள் மாறுவதில்லை. இதை
நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

மடிதல் என்பது இறத்தலைக் குறிப்பது. இச்சொல்லுக்கு
வேறு பொருளுமுண்டு. இதன் பிறவினை வடிவமாகிய
மடித்தல் என்பது பொருளில் வேறுபடும். இவை ஒரு
பொருளனவல்ல.  இந்தத் துணி மடித்துப்போய்விட்டது
என்றால் அது தரமிழந்து, கையால் தொட்டால் தானே
கிழியும் வண்ணம் அழிவின் எல்லையைத் தொட்டுவிட்டது
என்பது பொருள்.

மடிதலென்பது :  மடி > மரி என்று திரியும். இதைப் பிற
அறிஞர்களும் கூறியுள்ளனர்.  மடிதல் எனற்பாலதற்கு
மரித்தலென்பதே ஈடான பொருளுடையது ஆம். ஒன்றில்
வலிமிக்கு வரினும்,  மடி > மரி என்று வினைப்பகுதிகளை
ஈடாக நிறுத்துவதே பொருத்தமாகும்.

இந்த மாற்றம் பழைய இடுகைகளில் தரப்பட்டுள்ளன.  இன்று
இன்னொன்றையும் அறிந்து இன்புறுவோம்.

ஒடுக்குதல் என்பது ஒருக்குதல் என்று மாற்றமாய்
நிற்பதுண்டு. இங்கும் டகர ரகர மாற்றீடு காணலாம்.

மேற்காட்டியபடி டகரத்துக்கு ரகரமேதான் வருமென்பதில்லை.
டகரத்துக்கு றகரமும் வருதலுண்டு.  அந்நிகழ்வினை
ஒண்டி >< ஒன்றி என்பதிற் காணலாம்.

இவற்றை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்தவகையில் டகரம் ரகரமாகவோ றகரமாகவோ
மாறுமென்னும் போது இதை நினைவில் வைத்துக்கொள்ள
வேண்டும். 

இது நினைவில் இருக்குமானால் ஒரு திரிபைக்
காட்டும்போது எடுத்துக்காட்டுகள் கூறாமல் சுருக்கிக்
கொள்ளலாம், நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.

அறிக மகிழ்க.

கொரனா (முடிமுகி)ப் பரவலில் சிக்கிக்கொள்ள
வேண்டாம்


Edit later