சனி, 25 ஜூலை, 2020

டகர ரகர ஒலிப்பரிமாற்றங்கள்


எழுத்து திரிபு அடைந்தாலும் பொருள் மாறாமையைப் போலி
என்பர். இங்கு யாம் அந்தக் குறியீட்டினைப் புழங்கவில்லை.
பழைய குறியீடுகளையே பயன்படுத்தி மருட்சியை
விளைக்காமல் புதிய தென்றாலாய் உட்புகுத்துதல் வேண்டு
மென்பதும் எம் நோக்கமாகும்.  இலக்கணத்தையும் உள்ளிலங்கும் குறியீடுகளையும் கொணரப் போதகர்கள் போதுமான அளவில் இருக்கிறார்கள். மட்டுமின்றி, நூல்களும் அனந்தம். பல
படிப்பாரற்றுக் கிடக்கின்றன. வேறு வழிகளில் அவர்களுக்கு
ஆர்வமூட்டுதல் வேண்டும்.

மேலும் சொல்லாய்வு என்பது வேறு. சொல்லாய்வு என்பது
இலக்கணம் அன்று.  தெரிந்த இலக்குகளை வைத்துக்கொண்டு
தெரியாத. உணரப்படாத, உணரமறுக்கின்ற பலவற்றை
வெளிக்கொணர்ந்து ஆய்வதுதான் எம் சொல்லாய்வின்
நோக்கமாகும். தெரிந்ததற்கு நூல்கள் உள்ளன. அதை இங்கு
எழுதவேண்டியதில்லை. மாறுபட்டுச் சென்று உண்மை
காண்பதும் யாம் மேற்கொள்வதாம்.

ஓர் எழுத்துக்கு இன்னோர் எழுத்து மாற்றீடு ஆன
போதும் சில நிலைகளில் பொருள் மாறுவதில்லை. இதை
நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

மடிதல் என்பது இறத்தலைக் குறிப்பது. இச்சொல்லுக்கு
வேறு பொருளுமுண்டு. இதன் பிறவினை வடிவமாகிய
மடித்தல் என்பது பொருளில் வேறுபடும். இவை ஒரு
பொருளனவல்ல.  இந்தத் துணி மடித்துப்போய்விட்டது
என்றால் அது தரமிழந்து, கையால் தொட்டால் தானே
கிழியும் வண்ணம் அழிவின் எல்லையைத் தொட்டுவிட்டது
என்பது பொருள்.

மடிதலென்பது :  மடி > மரி என்று திரியும். இதைப் பிற
அறிஞர்களும் கூறியுள்ளனர்.  மடிதல் எனற்பாலதற்கு
மரித்தலென்பதே ஈடான பொருளுடையது ஆம். ஒன்றில்
வலிமிக்கு வரினும்,  மடி > மரி என்று வினைப்பகுதிகளை
ஈடாக நிறுத்துவதே பொருத்தமாகும்.

இந்த மாற்றம் பழைய இடுகைகளில் தரப்பட்டுள்ளன.  இன்று
இன்னொன்றையும் அறிந்து இன்புறுவோம்.

ஒடுக்குதல் என்பது ஒருக்குதல் என்று மாற்றமாய்
நிற்பதுண்டு. இங்கும் டகர ரகர மாற்றீடு காணலாம்.

மேற்காட்டியபடி டகரத்துக்கு ரகரமேதான் வருமென்பதில்லை.
டகரத்துக்கு றகரமும் வருதலுண்டு.  அந்நிகழ்வினை
ஒண்டி >< ஒன்றி என்பதிற் காணலாம்.

இவற்றை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்தவகையில் டகரம் ரகரமாகவோ றகரமாகவோ
மாறுமென்னும் போது இதை நினைவில் வைத்துக்கொள்ள
வேண்டும். 

இது நினைவில் இருக்குமானால் ஒரு திரிபைக்
காட்டும்போது எடுத்துக்காட்டுகள் கூறாமல் சுருக்கிக்
கொள்ளலாம், நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.

அறிக மகிழ்க.

கொரனா (முடிமுகி)ப் பரவலில் சிக்கிக்கொள்ள
வேண்டாம்


Edit later 






கருத்துகள் இல்லை: