வியாழன், 23 ஜூலை, 2020

ஒவையுடன்... ஆசை... வைரசுடன் வாழ்க்கை


முன் வைத்த இடுகைத் தலைப்பு:
ஓளவையுடன் அளவளாவ ஆசை, 
ஆனால் வைரசுடன் வந்த வாழ்க்கை.
இந்தத் தலைப்பு மேற்கண்டவாறு
சுருக்கப்பட்டது.

அம்மையும் அவ்வையும்

அவ்வை என்பது ஒரு பழம் பெண்பாற் புலவரின் 
பெயரென்பது தமிழறிந்தார் பலரிடமும் 
குடிகொண் டிருக்கும் ஒரு வரலாற்றுக் 
கருத்தாகும். இதனினும் மேலாக அவர் இப்போது 
நிலவில் காணப்படுகிறார் என்பது பாட்டிமார் 
சிலர் சிறுபிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்த
கதைகளின் ஒரு சுவைத் துணுக்கு என்பதும் 
நீங்கள் அறிந்திருக்கக் கூடும்நமக்கெல்லாம்
எவ்வளவோ நற்கருத்துக்களை அறிவுறுத்திய 
பாட்டி நம்முடனே வைகிவிடாமல் நிலவிலேறித் தனிமையில் இருப்பது நமக்கு வருத்தம் 
விளைக்கும் கதையே  ஆகும்.

எங்கள் மனங்களை வென்றாய் --- மறந்தே
எளிதாக நீங்கி நிலவிற்கோ சென்றாய்?
தங்க நிலவுடன் ஒன்றாய் --- கருப்பாய்
எங்கள் விழிகளில் தோன்றினை நன்றாய்!
-- சிவமாலா

ஆய்வு:

அவ்வை அல்லது ஒளவை என்பது அம்மை என்ற 
சொல்லிலிருந்து வந்ததாக அறிஞர்கள் கூறி
யுள்ளனர்.மகர வகரத் தொடர்புத் திரிபு இது
வென்பர். அம்மா என்ற சொல்லும் பிற தமிழின
(திராவிட) மொழிகளில் அவ்வா என்று திரிதலும் 
காணலாம். செய்யுளில் வகரத்துக்கு மகரம் 
மோனையாகவும் நிற்கும்மிஞ்சு(தல்) என்பது 
விஞ்சுதல் என்று திரிதலும் காண்க
மிகுதி எனற்பாலது விகுதி என்று திரிந்து 
இறுதிநிலையைக் குறிப்பதும் அறியலாகும்
மகர வகரங்கட்குச் சொன்னது அவற்றின் 
வருக்கங்கட்கும் பொருந்தும்.

ஒளவை என்ற பெயருள்ள புலவர்கள் ஒன்றுக்கு
மேற்பட்டோர் இருந்ததாகக் கூறுவர். ஒன்றுக்கு 
மேற்பட்ட பட்டினத்தார்கள் இருந்தது போலுமே 
இது.

அவ் + ஆய் = அவ்வாய் என்பது குறுகி அவ்வை 
என்று வருதல் கூடுமெனலும் கருதற்குரியதே 
ஆகும். ஆய்= தாய்.

அரசன் அதியமான் அருநெல்லிக்கனியை 
ஒளவைக்கு அளித்து, இதை உட்கொண்டு 
அதனால் நெடுநாள் நீங்கள் உயிர்வாழ்வது 
தமிழுக்கும் உலகுக்கும் நல்லது என்று தலையை 
வருடிவிட்டான் என்பர். அதிக அளவில் 
கள் கிடைக்குமானால் இருவரும் ஓரிடத்தமர்ந்து 
அதை அருந்துவராம். சிறிதே கிடைத்தால், அதைத் 
தானுண்ணாமல் ஒளவைப் பாட்டியிடமே தந்து
மகிழ்வானாம் அதியமான். அவ்வேளைகளி
லெல்லாம் அவர்களிடைத் தமிழ்ப்பாக்களே வழிந்து செழுந்தேனாய் ஓடுமாம். யாம் பாடத் தான்மகிழ்ந்
துண்ணு மன்னே என்று பாடுவார் ஒளவை
அம்பொடு தடிபடு வழியெல்லாம் தானிற்கு 
மன்னன் அவன்.

அப்போது நாம் அங்கிருந்திருந்தால் நம் 
மகிழ்ச்சிக்கும் ஓர் எல்லை இருந்திருக்காது.
இப்போது  நம் வாழ்க்கை மகுடமுகி 
நோய்நுண்மி எனும் இக்கொரனா வைரசுடன்
ஒன்றாகி விட்டதுஎன் செய்வோம்?

மெய்ப்பு: பின்




கருத்துகள் இல்லை: