திங்கள், 20 ஜூலை, 2020

இவ்வளவுதான் கடைப்பிடிக்க வேண்டியவை

இடைத்தொலைவே இருந்தவன்பால் 
    முடிமுகியோ நெடுந்தொலைவு
படைக்கிருமி பரவாமல் 
    கைத்தூய்மை கைக்கொளலே
நடைச்செலவு  புறப்படினோ 
    உடைகளுடன் முகக்கவசம்
கடைப்பிடித்தல் கொடுங்காலக் 
    கடுந்தொற்றில் வாழ்வகையே.


உரை:

இடைத்தொலைவு -  ஒருவனுக்கும் இன்னொருவருவனுக்கும்
இடையில் இத் தொற்று நாட்களில் கடைப்பிடித்தற்குரிய
இடைவெளி;

இருந்தவன் - இடைத்தொலைவு போற்றிக்கொண்டு 
இருந்தவன்,

முடிமுகி -   கொரனா வைரஸ் என்னும் நோய்நுண்மி;

நெடுந்தொலைவு -  (இவ்வாறு  போற்றிக்கொள்வானிடமிருந்து
நோய்நுண்மி  )வெகுதூரம் சென்றுவிடும்.

படைக்கிருமி -  கொல்லும் கொடிய நோய்க்கிருமி.

கைத்தூய்மை -  கழுவவேண்டும் என்று உடல்நலத்துறையோர்
கூறிய வேளைகளில் கைகளைக் கழுவுதல்;

கைக்கொளல் -  கடைப்பிடிக்கவேண்டும்;

நடைச்செலவு - நடந்து செல்லுவதற்கு 

புறப்படினோ - வெளியில் போகுங்கால்

உடைகளுடன் முகக்கவசம் -  உடுத்துக்கொள்வதுபோல 
முகக்கவசமும் அணிந்துகொள்ளுக;

கடைப்பிடித்தல் - இவைகளைச் செய்தல்,

கொடுங்கால  -  துன்பகாலமாகிய;

கடுந்தொற்றில் -  கடுமையான நோய்த்தொற்றின்போது;

வாழ்வகையே -  வாழும் வகை ஆகும்.

கருத்துகள் இல்லை: