சனி, 9 நவம்பர், 2019

வித்துவான் பற்றிய இன்னொரு சிந்தனை

வித்துவான் என்ற சொல்பற்றி முன்பதிவுகள் இட்டதுண்டு.  அவற்றுள் ஒன்று அடிக்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

இச்சொல்லை வித்துவன் என்று எழுதுவோருமுண்டு.  அன், ஆன் என்பன இரண்டும் தமிழ்விகுதிகளே.

விள் என்பதோர் அடிச்சொல்.  வித்து விதை முதலிய பலவேறு வடிவங்கள் இதனோடு தொடர்பு கொண்டவை ஆகும்.

எச்ச வினையினின்று சொற்களைப் பிறப்பிக்கும் முறை பாலி முதலிய மொழிகளில் காணப்படுகிறது.

விளைத்தல் என்பதினின்று விளைத்து,  விளைத்த என்ற எச்ச வினைகள் தோன்றும்.  விளைத்து என்பது எச்சவினை வடிவத்திலே பெரிதும் காண்புறும் சொல்லாயினும் அதைப் பெயர்ச்சொல்லாய்க் கருதுவதற்கு இறுதித் துகரத்தைப் பெயராக்க விகுதியாகக் கொள்ளுதல் வேண்டும்.  கொள் > கொளுத்து என்பது வினையாகவும் பெயராகவும் பயன்பாட்டிற்கேற்பப் போதரும்.  கொளுத்து என்பது கொண்டி அல்லது தாழ்ப்பாள்.  விளைத்து எனற்பாலதும் அவ்வண்ணமே   போதரத் தக்கது.

விளைத்து என்பது இடைக்குறைய வித்து என்றாகிவிடும்.   வித்து என்பது பெயரும் வினையுமாம்.  ளைகாரம் கெட்டது.

எதனையும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் விளக்கினும்  ஏற்புடைமை மாறாதது காணலாம்.

அடிக்குறிப்பு.


வித்துவான்.
https://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_33.html

வியாழன், 7 நவம்பர், 2019

திடகாத்திரம் இனிய படைப்புச்சொல்

இன்று "திடகாத்திரம்" என்ற சொல்லை அறிந்துகொள்வோம்.

இது ஒரு புனைவுச்சொல்லே.

ஒருவன் திடகாத்திரமாக இருக்கின்றான் என்றால்:

அவன் தன் உடலின் திடத்தினை      {....திட(ம்)  }

உணவினாலும்  ஏனை  நடபடிக்கைகளாலும்   காத்துக்கொண்டு   {....கா(த்து ) .....}

இவ்வுலகில் இருக்கும்படியாக நல்வாழ்வை அடைந்துள்ளான்   {....இரு....}

அம் என்பது ஒரு விகுதி.

அம்முக்கும் ஒரு பொருளைக் கூறிக்கொள்ளலாம்.  பெரிய வேறுபாடு ஒன்றும் ஏற்பட்டுவிடுதல் இல்லை.

எல்லாத் துண்டுகளையும் இணைக்க:

திட(ம்)  +  காத்து +  இரு +  அம்.


=  திடகாத்திரம்

ஆகிவிட்டது.

காத்து + இரு + அம் > காத்திரம் என்பதை

கா+ திறம்  >  காத்திரம் என்றும் பிறழ்பிரிப்பாகக் கூறலாம்.

இதிலும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.

அறிவீர் மகிழ்வீர்.


தட்டச்சுப் பிழைகள் புகினோ அன்றிக் காணப்படினோ திருத்தம் பின்.



ஞாயிறு, 3 நவம்பர், 2019

சிருஷ்டி காட்டும் சொல் அமைப்புத் தந்திரம்

உருள் >  உருட்டு,   திரள் > திரட்டு என்றெல்லாம் தமிழில் வினைச்சொற்கள் முடிகின்றன. இவற்றைப்  பார்க்கும்போது ஒரு சொற்படைப்பாளனுக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது.  "ட்டி"  என்று ஒலிக்கும்படியாக ஏன் ஒரு சொல்லைத் தோற்றுவித்தலாகாது? என்பதுதான் அது.

இறைவன் உலகின் உள்ளிருக்கும்படியாக ஒன்றைத் தோற்றுவிக்கின்றான். அதைப் புதுவிதமாகச் சொல்லவேண்டும்.

உள்ளிரு என்பதை எடுத்துக்கொண்டான்.

உள்ளிரு  >  (முறைமாற்ற )  >  இரு + உள்.

இரு + உள் +(  து + இ.)

இவற்றுள்,  இ என்பது இறுதி  வினையாக்க விகுதி.
து என்பதும் வினையாக்க விகுதிதான்.

இரு + உள்  + தி.

து+ இ இரண்டும் இணைய, தி என்றாகும்.

ள் + தி  =  டி என்றாகும்.

அகர வருக்கத்துக்கு   சகர வருக்கம் மிக்கப் பொருத்தமான  திரிபினை வழங்கும்.

எ-டு:  அமணர் >  சமணர்.
             அட்டி >  சட்டி   ( அடுதல் :  சமைத்தல்)
             எட்டி > செட்டி.
             அமை > சமை.
              அவை > சவை > சபை.

இரு + உள்  + தி  >  சிருட்டி.

சிருட்டி > சிருஷ்டி > சிருஷ்டித்தல்.

இல்லாத ஒன்றை இவ்வுலகின் உள்ளிருக்கும்படி செய்தல்.

சிருஷ்டி :  நல்லபடி அமைந்த சொல்.

எழுத்துப்பிழைகளிருப்பின் திருத்தம் பின்பு.