ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

ஐயப்ப சாமி பாடல்

ஒரு சிறிய பாடல். இது ஐயப்ப சாமியைப் புகழ்வது:


ஐயப்பனின் மகிமைதனைப் புகழும் வாய்களே  -- இந்த
அகிலமதில் இனியவாழ்வு பெறுவ துண்மையே.

கொய்தணிந்த உனதுமாலை மணமும் வாழ்விலே -- இங்கு
கூடிவரும் நாடிவந்த பத்தர் காணவே.

காலையிலே கருதியவை மாலை நேரமே --- ஒரு
சோலைமலர்ச் சோபனத்தில் மெய்விளங்குமே.

சபரிமலை மகிபன் தனைப்  புகலும் வாய்களே ---ஒரு
தணிந்திடாத ஒளியைச் சேர்க்கும் தரணி போற்றவே.


பொருள்:

புகலும் =  சொல்லும்.  புகுமாறு தெளியச் சொல்லுதல்.
மெய் = உண்மை
சோபனம் :  அழகு.
காணவே = இங்கு மனத்தால் உணர்தல்.


 





நரிக்கு ஓர் ஆடு : ரகர டகர ஒலியணுக்கம்

டகர ரகரங்கள் ஒன்று பிறிதொன்றாய் நிற்கத் தக்கன என்பதைச் சில இடுகைகளில் குறித்திருந்தேம்; எடுத்துக்காட்டுக்கு ஒன்று:-

மடி ( இறந்துபோ)

மரி  ( இறந்து போ)


மடி > மரி  (போலி  என்பதுமாம்).

இதுபோலும் ஒலிப்போலி உண்மைகள் ஒலிநூலின் பாற்பட்டவை.

இப்போது இந்தப் பழமொழியைப் பாருங்கள்:

"நரிக்கு ஓர் இடம் கொடுத்தால்
கிடைக்கு ஓர்  ஆடு கேட்கும்."


நரிக்கு  -  இதில் இரண்டாமெழுத்து  ரகர வருக்கத்தினது.   ர -  ரா - ரி......

கிடைக்கு  -  இதில் இரண்டாமெழுத்து டகர வருக்கத்தினது,  ட டா டி டீ டு டூ டெ டே டை......

இப் பழமொழியில் வரிமுதல்களில் இரண்டாம் எழுத்து ரகர டகர மாக ஒன்றுபட அல்லது வேறுபட,  ஏனை இரண்டெழுத்துகளும் ஒன்றிவந்து எதுகை நன்`கு அமைந்துள்ளது காண்பீர்.

சில சொற்களில் வெறும் எழுத்துப் போலியாக மட்டுமின்றி, நுண்பொருண்மை வேறுபடுதலும் கொள்ளப்படும்.

கடி -  கடினப் பொருளைக் பல்லால் பற்றுதல் (பற்றி உடைத்தல்.)
கறி -சற்றுக் கடினக் குறைவான பொருளைப் பல் பற்றுதல்.

டி றி இரண்டும் வல்லெழுத்துக்களெனினும் றகரம் சற்று வன்மை தாழ்ந்தது.
இத் தாழ்வன்மை இலக்கண நூல்களிற் கூறப்படுவதில்லை.  நுகர்வில் உணரப்படுதல் உடைத்து.  ( சுருதி, யுக்தி, அனுபவம்!)

கவிதையில் நாம் இவ் வொலியணுக்கங்களைப் பெய்து நயமுடைத்தாக்கலாம் என்பதறிக



 

வியாழன், 18 ஏப்ரல், 2019

காத்தாலே என்னும் பேச்சுமொழிச் சொல்

"காத்தாலே பார்த்தேன் --- கடைக்குப் போய்க்கொண்டிருந்தார்;  எங்கே போனாரென்று தெரியவில்லை"

என்பதுபோலும் வாக்கியங்களைப் பேச்சில்  கேட்டிருக்கலாம்.   காத்தாலே என்பது எழுத்துமொழியில் வருவதில்லை.

காத்தாலே என்பது பெரும்பாலும் ஏழை மக்களிடையே வழங்கும் சொல் என்பதுண்டு.

இச்சொல் வந்த விதம் அறிவோம்.

காலை என்பது விடியற்பொழுதையும் அதற்கடுத்த இரண்டு மூன்று மணிக்கூறுகளையும் உள்ளடக்கிய காலப்பகுதி என்றால் அது சரியாக இருக்கும். நண்பகல் வருவதற்கு முன்னுள்ள நேரத்தை "முற்பகல்" என்பர்.

காலை என்ற சொல்லும் காலம் என்ற நீள்பொழுதைக் குறிக்கும் சொல்லும் ஓரடியினின்று வருவதாம்.

கால் > கால்+ அம் = காலம்.
கால் + ஐ =  காலை.

காலம்+ காலம் என்று சொற்புணர்ச்சி  காலாகாலம் என்றும் காலங்காலம் (காலங்காலமாய் ...)   என்று இருவகையில் வந்து பயன்பாடு காணுதலை நாமறிவோம்.

கால் என்பது நீட்சி என்று பொருள்படும் சொல்.

நடக்கும் நம் கால்கள் நீட்சியின் காரணமாகவே அப்பெயர் பெற்றன. பொழுதுநீட்சியும் கால்+அம் என்று போந்தது அது காரணமாகவேயாம்.

வந்தக்கால், செய்தக்கால் என்ற தொடர்களில் கால் என்பது  காலம் என்று பொருள்படும்.  அம் என்பது பெரும்பாலும் அமைவு குறிக்கும் ஒரு விகுதி.

அம் > அம்+ ஐ > அமை > அமைதல்.  ஐ இங்கு வினையாக்க விகுதியாகும்.

காலம் என்ற சொல்லுக்குக் காலை நேரம் என்றும்  பொருள் உள்ளபடியால் மலையாள மொழியில் "காலத்து" என்றால் காலையில் என்று அர்த்தமாகும்.

காலத்து வந்நு   (  ம  ) =   காலையில் வந்தான். (த)

காலையில் வந்தான் என்பதை காலத்தாலே வந்தான் என்பது பேச்சு மொழி.

காலத்தாலே என்பது இடைக்குறைந்து காத்தாலே என்று வந்தது.

காலத்தாலே  >  காத்தாலே.

ஒரு லகரம் வீழ்ந்தது அல்லது கெட்டது.


இதற்கும் காத்தல் என்ற வினைப்பெயருக்கும் தொடர்பொன்றும் இல்லை.