சனி, 16 மார்ச், 2019

முயன்றாலும் நல்லிணக்கம் வருமோ?

கொன்றுதான் கொள்கையைக் கூரிதாய்ச் செய்யவேண்டின்
என்றுதான் மாந்தனும் இப்புவி யிற்சிறந்தோன்
என்றுநாம் ஏற்றுக் கணக்கில் கொளலாகும்?
தின்றுநாள் போக்கும் விலங்கினும் கீழ்த்தரத்தோன்
என்றுதான் அன்னவனை இங்கியம்பல் கூடுமே.
இந்நாள் அறிவியலில் ஏற்றம் அடைந்தவராய்
மன்னும் மனிதப் பிறவிகட்கோ இஃதிழுக்கே
ஆகும்; சமயத் தனைவரும் ஒன்றென்று
போகும் மனநிலையில் பொய்யாப் புதுமையுடன்
ஏகும் நலம்காணும் நாளும் எதிர்வருமோ?
ஞாலம் சுழலினும் காலம் அறியாப்புன்
கோலம் பயில்வான் குறைபோக்க நாளும்
முயன்றால் முடிந்திடுமோ தான்.


பன்றி வருடமே வருக பாடல் சிலவரிகட்குப் பொருள்

பன்றி வருடமே வருக என்ற கவிதையில் சில அடிகளுக்குப் பொருள்:

"வானை முத்தமே இடும்
வரையாய் வளரரத் தினம்"

இதன் பொருள்:  ( இ-ள்). 

வளர் -    வளருகின்ற;   அரத்தினம்  -  இரத்தினமாகிய செல்வம்;
 வரையாய்  -   மலையாக அல்லது மலைபோல;
வானை முத்தமே இடும் -   வானுயர  வளர்ந்து  நிறைவு தரும்.

பொழிப்பு:   செல்வம் பன்றிவருடத்தில் வானுயர வளரும் .


"வெல்வ தெலாம் உடன் ஒன்றி
பன்றி தருவதும் நன்றி."

இ-ள்:  வெல்வ தெலாம் -   நாம் உழைத்து நமக்குக் கிடைப்பதெல்லாம் ,
உடன் ஒன்றி -  காலம் கழியாமல் ஒன்றாகச் சேர்ந்து;
பன்றி  -  சீனர்களின் இந்தப் பன்றி ஆண்டு;
தருவதும் =  நமக்குக் கொடுப்பதுவும்;
நன்றி =  நன்மையே  ஆகும். தீமை இராது என்றபடி.


"பின் நிறை உழைப்பதில் விம்மி,
பெற்றவை இல்லையே கம்மி."

இ-ள்:  பின் நிறை -  பிற்காலத்தில் முழுமையாக;
உழைப்பதில் விம்மி -    கடின உழைப்பு தன் எல்லையை எட்டி;
பெற்றவை -  அதனால் நாம் அடைந்த நன்மை;'இல்லையே
கம்மி -   குறைவே இல்லை.

இல்லையே கம்மி  என்பதைக் கம்மி இல்லையே என்று
மாற்றிப் போடுக.

இதில் குறிக்கப்பெற்ற பாடல் பிப்ரவரி 5ல் வெளியிடப்பட்டது.

நன்றி என்பதற்கு நன்மை என்பதும் பொருள்.

பிழைத்திருத்தம் பின்.

வெள்ளி, 15 மார்ச், 2019

பன்றி வருடத் தாக்குதல்கள்

பன்றி வருடத்தில் நன்று வருமென்றால் 
ஒன்று மிதுகாறும் இன்றேகாண்--- சென்றவை,
கொன்றதும் மூச்சுமே   நின்றதும் போகட்டும்,
நன்றே வருக இனி.

இந்தப் பன்றி வருடம் / ஆண்டு என்பது பல கொடூரங்களைக்
கொண்டுவந்துள்ளது. அவை உங்களுக்குத் தெரியும்.
அவற்றை வரணனை செய்தல் தவிர்ப்போம். மறப்போம்.
இல்லையென்றால் சோகத்திலிருந்து தப்பமுடியாது.
கவலையே மிஞ்சும். இனி வருவது நல்லதாகட்டும்
என்பது இப்பாடல்.

யாப்பு:  மோனைகளைக் கையாளாமல் பெரிதும்
எதுகைகளாலே ஆக்கப்பட்டுள்ளது இப்பாடல்.
எதுகைகள்:  பன்றி, நன்று, ஒன்று, இன்று,
கொன்று,  நின்று, நன்று என்பன.

இது நேரிசை வெண்பா. ஒரு சீன விளம்பரத்தைப்
பார்த்தேன். அது இது பன்றி  ஆண்டென்பதை நினைவு
படுத்தியபோது இப்பாடல் முகிழ்த்தது.  உடன்
கைப்பேசியில் பதிந்துகொண்டேன்.  வாசித்து
மகிழ்வீராக.  இவ்வாண்டில் எல்லாம் நல்லதே
 நடக்கட்டுமாக.

வருடம் சொல்லமைப்பு

வருடம் என்ற சொல்:  அறுபது ஆண்டுகளும்
மீண்டும் மீண்டும் சுற்றுச்
சுற்றாக வருபவை.  அதனால் இதன் அடிச்சொல்
வருதல் என்பதே என் ஆய்வு.  மழை குறிக்கும் வர்ஷ
என்பதும் மழை வருடத்தில் குறிப்பிட்ட மாதங்களில்
வருவதாலே வருஷ என்று அமைந்தது. இவை தமிழ்
மூலங்கள்.  ஆண்டு என்பது ஆட்சி என்பதிலிருந்து
வருகிறது.  அடிச்சொல் ஆள் என்பது;  அது ஆளுதல்.
இனி அடுத்தடுத்து வருவதால்,  அடு> அண்டு> ஆண்டு
எனினும் ஒப்புதற்குரித்தே. அதனால் ஆண்டு என்னும் சொல்
இருபிறப்பி ஆகும்.

சோகம்

சோகம் :  இது சோர்தல் அடிப்படையில் எழுந்த சொல்.
 சோர்+ கு+ அம் = சோர்கம் > சோகம். ரகர ஒற்று
கெட்டது.  ரகர ஒற்று கெடுதல் முன் இடுகைகளிலும்
விளக்கப்பட்டுள்ளது. ய ர ல வ ழ ள பெரிதும் வீழ்வன.
தேய்ந்து அழிவது தேகம்:  தேய்+கு+ அம் =  தேய்கம் > தேகம்
ஆனது காண்க.

தேள்வை (தேவை)  துளிக்கடை (துக்கடா)

ளகர ஒற்று  மற்றும் ளகர வருக்க வீழ்ச்சி:  தேள்வை > தேவை; 
துளிக்கடை > துக்கடா. (ளி).

கொடியது ஊர்ந்து நாம் அறியாமலே வந்துவிடுகிறது.
ஆகவே கொடு ஊரம் ஆகிற்று. கொடூரம்.

நன்றி.