வெள்ளி, 28 டிசம்பர், 2018

முக்கம் என்ற பேச்சுமொழிச் சொல்

முக்கம் என்றொரு சொல் தமிழில் உண்டு எனினும் பேச்சு வழக்கில் உள்ள முக்கமென்னும் இன்னொரு சொல்லின் பொருள் அகரவரிசைகளில் காணப்படவில்லை.

முக்கம் என்பது முற்கம் என்பதன் திரிபாகும்போது:

பல்லி செய்யும் ஒலி
நாவு கொட்டும் ஒலி
ஒவ்வாமைக் குறிப்பு ஒலி

என்று பொருள்படுகிறது.

இச்சொல்லின் இன்னொரு பொருள் பயறு வகைகளைக் குறிக்கிறது, இது திவாகர நிகண்டில் காணப்படுவதும் ஆகும்.


ஆனால் பேச்சு வழக்கில் முக்கம் என்பது  வழியில் உள்ள திருப்புமுனை அல்லது தெருச்சந்திப்பு என்று பொருளாகிறது,   இதை இப்பொருளில் பேச்சில் யாம் கேட்டதுண்டு.  எழுத்தில் இப்பொருளில் இதைச் சந்தித்ததில்லை.

அகரவரிசைக்காரர்கள் விடுபாட்டில் இதுவும் ஒன்று என்று தெரிகிறது.

கடத்தற்கு அரிய அல்லது கடக்கு  மிடம் கடம் எனப்படும்.   வேங்கடம் என்னும் சொல்லில் இஃது உள்ளது.  வெம்மை மிக்கக் கடப்பிடம் என்னும் பொருளது இதுவாம்.  தாம் கடத்தற்கரிய இடையூறு சங்கடம் ஆகிறது.  இது தம் கடம் > சங்கடம் என்னும் திரிபு.   கடு> கடம்;  கடு>காடு.   இவ்வாறு கடு என்ற உரிச்சொல்லினின்று போந்து கடிய காட்டினையும் குறிக்கும்.  இன்னும் கயிறு, பாலைநிலத்துவழி,  சுடுகாடு, கும்ப இராசி,  யானை மதம் ( கட யானை ),  ஒரு நிறுவை, உடம்பு என்றெல்லாம் பொருள் பல. இன்னும் உள.   கடத்தற்கரியது என்னும் கருத்திலே கடல் என்ற சொல்லுமமைந்தது.

முக்கம் என்பது   சாலைகளில் முக்கடப்புகளைக் குறித்த சொல்.  மூன்று என்று பொருள்தரும் மு என்பது முன் நிற்றலால்.   இது மற்ற முக்கம் என்னும் சொற்களினின்று வேறான சொல் ஆகும்.

முக்கடம் > முக்கம்.  இங்கு டகரம் இடைக்குறைந்தது.

டகரங்கள் குறைந்த சொற்கள் பல நம் பழைய இடுகைகளில் அவ்வப்போது காட்டப்பெற்றுள்ளன.  நினைவுகூர:

பீடுமன் >  பீமன்.  டுகரம் குறைந்தது.   பீடுடைய மன்னன் என்பது பொருள்.
பீடுமன் > பீஷ்மன்.    பீமன் > வீமன் என்பதும் திரிபு.  ப-வ.

பேச்சில் முக்கம் நிலைத்தபின் முக்கடம் மறைந்தது.  இத்தகைய சொல் இறுபுகள் இயல்பே ஆகும்.   இறுபு - ஒழிதல்,

அறிந்து மகிழ்க.

பிழை : திருத்தம் பின்.


பூரா என்ற சொல்.

எங்கும் அல்லது எல்லாம் என்று பொருள்தரும் பேச்சுவழக்குச் சொல்லே பூரா என்பது.

"வீடு பூரா தூசியாய் இருக்கிறதே"  என்ற வாக்கியத்தில் இது எங்கும் என்று பொருள்படுகிறது.

புகுந்து உறுவதே பூரா.   புகுதல் என்பது உட்செல்லுகை.

இது  புகு>  பூ  என்று சொல்லின் முதனிலையில் திரியும்.


இதற்கு ஓர் உதாரணம் தருவோம்.

தொகு ( தொகுதல். தொகுத்தல் )  என்ற வினைச்சொல் தோ என்று சொல்லில் திரியும்.

தொகு >  தொகுப்பு > தோப்பு.  (வாழைத் தோப்பு முதலியவை).

இதுவுமது:

(திகை > திகைதி >) திகதி > தேதி.   " உறுதிபெற்ற நாள்,  குறிக்கப்பெற்ற நாள்"

திகைதல் : உறுதியாதல்.

ஆகவே,   புகு+ உறு + ஆ =  பூறா > பூரா  ஆனது.

சொல்லாக்கத்தில் றகரம் ரகரமாகிவிடும்.  பல சொற்களில்:  பழைய இடுகைகளைப் படித்துக் கண்டுணர்க.

வெளியாட்கள் புகப்பார்க்கிறார்கள் என்பது பேச்சில் பூரப்பார்க்கிறார்கள் என்று வரும்.

எதுவும் அல்லது யாரும் எங்கு புகுந்தனரோ அதுவே அவர்களின் தொடக்கம். ஆகவே பூர்தல் -  என்பதிலிருந்து பூர்வு> பூர்வம் என்ற சொல் அமைந்தது. பூர்வம் =  தொடக்கம்.  பூர்வு + ஈகு + அம =  பூர்வீகம்:  ஈகு என்பது ஈங்கு என்பதன் இடைக்குறை.  எங்கே முதலில் புகுந்தீர் அல்லது தோன்றினீர் அதுவே உம் பழைய இருப்பிடம். பிறத்தலும் இவ்வுலகில் புகுதலே.

எரியும் நெருப்பிலிருந்து வெளியில் புகுவதே புகை.   புகு+ ஐ  = புகை.  வெளிவரலைப் புகுதல் என்றது ஒப்புமையாக்கம். வெளியி டங்களில் புகுதல் அல்லது பரவுதல்.

பூரம் = புகைவரும் எரியும் பொருள்.

கருப்பூரம் :  கற்பூரம்.   ( எரியும் கல்போலும் பொருளிலிருந்து புகை வரும்.  அதனால் கற்பூரம் ஆனது ).

கருப்பூரம் -  கர்ப்பூரம்
கல் பூரம் -  கற்பூரம்.

இறுதியில் இவை ஒருபொருள் குறித்தன.   

அடிக்குறிப்பு:

புகு ஊர்தல் எனினும் அமைதலின் இதை இருபிறப்பி எனலாம்.

பிழை காணின் திருத்தம் பின்,

செவ்வாய், 25 டிசம்பர், 2018

திமிங்கலம் : கலங்களுடன் திமிருங்கலம்.

திமிங்கலம் என்ற சொல்லோ தமிழில் அழகுற அமைந்த தாகும். இஃது அமைக்கப்பட்ட விதம் காண்போம்.

இந்த வகை நீர்வாழுயிரிக்கு ஆங்கில மொழியில் "வேல்"(           )  என்பரென்பது நீங்கள் அறிந்ததே.

திமிங்கலங்கள் படகுகளை எதிர்கொண்டு கவிழச் செய்துவிடும் என்பது நம்பிக்கை ஆகும். இதுபோல் சில நடந்துள்ளனவாகவும் தெரிகிறது.

https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=26&cad=rja&uact=8&ved=2ahUKEwj855ORx7zfAhVQat4KHTZjD9sQFjAZegQIBxAB&url=https%3A%2F%2Fwww.canadiangeographic.ca%2Farticle%2Fhow-often-do-whales-attack-ships&usg=AOvVaw2bPOVekcDxIdBKBo0SrUvv

இவற்றுள் ஒன்று மேலே தரப்படுகிறது.


இவ் வுயிரிகள் கலங்களுடன் வலிமை காட்டவல்லவை ஆகும்.  திமிருதல் என்றால் வலிமை காட்டுதல். சிலர் இது சிறுபான்மை நடப்பு என்றாலும் அச்சம் இருக்கவே செய்கிறது.

திமிரும் + கலம் = திமிருங்கலம் > திமிங்கலம்.

இதில் ரு என்ற எழுத்து இடைக்குறைந்தது.

இவ் விலங்கும் ஒரு கலம் போன்ற பெரிய (பரிய )  உருவினதே.


காவலன் பிடிக்கத் திருடன் திமிரிக்கொண்டு ஓடிவிட்டான்  என்ற வாக்கியம் காண்க. திமிருதல் - வன்மைகாட்டுதல்.

(புறநா. 258):   ஈர்ங்கை விற்புறந் திமிரி.
உராய்ந்து,  தடவி  என்று பொருள்.

(நற். 360).  மெய்யிடைத் திமிரும்.


கலங்களைத் திமிர்கின்ற   கலம் போலும் உருவினதாகிய மீன் எனல்.


திமிர் என்பது திமி என்று கடைக்குறைந்துள்ளது.

திமிர்தல்
திமிர்த்தல்
 திமிர்ப்பு
திமிர்ச்சி
திமிரன்:  மெதுவான துடிப்புக்குறைந்த விலங்குமாம்.
திமிராளி
திமிரம் - இருள்
திமிதம் -  நிலைநிற்றல்

திமிதமிடுதல் :  களித்தல்

வலிமை ஒத்த நிலையில்  நிலைநிற்றல் கூடுமாகின்றது.

 பேருந்துக்குள் திமுதிமு என்று கூட்டம் புகுந்துவிட்டது எனல் காண்க.

திமுதிமு எனல் விரைவுக் குறிப்புமாம்.

திமி, திமிர் என்பன இலக்கிய வழக்கிலும் உள்ளவை.