வெள்ளி, 20 ஜூலை, 2018

வதந்தி சொல்லமைப்பு

தந்தி என்ற சொல்லைப் பற்றி நன்`கு தெரிந்துகொண்டிருக்கிறீர்கள்.

அதை ஈராண்டுகட்குமுன் எழுதியிருந்தோம்.  இங்கு:

இப்போது வதந்தி என்ற சொல்லை அறிவோம்.

வதந்தி என்பது ஒருவனால் அல்லது ஒருத்தியால் கொண்டுவரப்பட்டு, இன்னொருத்தனுக்குத் தெரியவருவதாகும்.  ஒருவன் இன்னொருவன் என்பதைப் பன்மையிலும் எடுத்துக்கொள்ளவேண்டும்; ஆண்பாலுக்குக் கூறுவது இதுபோலும் காரியங்களில் பெண்பாலுக்கும் பொருந்துவதே.

வ:  வருபவன் அல்லது வந்தவன்

த:  தருகிறான் ஒரு செய்தி.

இப்படியே அது பல மடிகள் செல்லுகின்றது.   மாறிச்  செல்லச்செல்ல வதந்தி ஆகிவிடுகிறது.

ஆனால் உண்மையும் இப்படிப் பரவுவதுண்டு.  ஒன்று வதந்தியா அல்லது உண்மைச்செய்தியா என்பதை  செய்தியின் வாய்மை கொண்டே தீர்மானிக்கமுடியும்.

பெரும்பாலும் வதந்திகள் வருமிடத்து உண்மைச்செய்திகள் வருவதற்கும் எப்போதுமுள்ள வழிகள் இருக்கும். அத்தகைய ஏற்புடைய வழிகளில் வராமல் வதந்தி என்பது அஃது இல்லாத வழியில் வருவதாகும்.  எடுத்துக்காட்டு: அரண்மனை முரசறைவோர் ஏற்புடைய வழியினர் ஆவர்.

வருபவன் என்பது போகிறவனையும் உள்ளடக்கும்.  இஃது வழக்கு ஆகும்.

வ: வருவோன் வந்து  த: தரும்  செய்தி.

ஓடுகிறவன் பாடிவிட்டுப் போவான் என்ற சிற்றூர்மொழியில்  ஓடுகிறவன் என்ற சொல்லாட்சியைக் கவனிக்கவும்.  அதுபோலவே வருவோனுமாவான்.

வ+த+ தி(விகுதி) =  வதத்தி > வதந்தி.   இது மெலித்தலாகும்.  வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும் என்பது உத்தியாகும்.

வருவோன் தரும் அதிகாரப் பற்றற்ற செய்தி  வதந்தி.  வ, த, மற்றும் விகுதி: தி.

அறிக. மகிழ்க
 திருத்தம் பின்


சிவன்முன் ( விளக்கம்).

சென்ற இடுகையின் தொடர்ச்சி:  http://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_56.html


சென்ற இடுகையிலிருந்து தொடர்வோம்:

http://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_56.html 


பாட்டு: உரை வடிவில்:


பிரம்மனிந்   திரனைச் சார்ந்து  பேச்சிலா விரதம்    பூண்டும் உரம்நிகர் பத்தி மூண்டும் உலகிதை உணர்ந்  தரன்தன் திறம்திகழ் சிவமாலைதான்
சேர்ந்தவண் பணிந்து  நின்றார்;
வரம்தரப் பெற்றார் ; 
எற்கே  வந்த  கனாவே நேற்றே.

பொருளுரை:

பிரம்மன்  இந்திரனைச் சார்ந்து ----  பிரம்ம தேவனானவன் இந்திரனிடத்துச் சென்று சேர்ந்து;
உரம் நிகர் பத்தி பூண்டு  ---  ஆன்மாவுக்கு உரம் போன்ற  பக்தியினை
மேற்கொண்டு; 
பேச்சிலா விரதம் மூண்டும்  ---  மோனம் என்னும் விரத்தத்தை 
அவனுடன்  தொடங்கியும்;
உலகிதை உணர்ந்து ----   இவ்வுலகில்  மக்கள் போற்றுதலை அறிந்து;

அரன் தன் திறம் திகழ் சிவமாலைதான் சேர்ந்து  ---சிவனாரின் வல்லமை விளங்கும் சிவமாலையை அவர்கள் பார்வை அடையும்படியாக;

அவண் --- அங்கு சிவபெருமானின் முன்;

பணிந்து நின்றார் ---  வணங்கி நின்றனர்;

வரம் தரப் பெற்றார் ---  அதனால் சிவனின் வரம் பெற்றனர்;

நேற்றே ---  இன்று முன் நாளில்;

எற்கே  வந்த கனாவே    --- இது எனக்கே வந்த கனா ஆகும்.



அடிமுடி காணாப் பெரியோனாகிய சிவத்தையே பிற தெய்வங்களும்
வணங்கலுற்றன.

வியாழன், 19 ஜூலை, 2018

சிவன்முன் பிரம்மன் இந்திரன் கனவில்

 இப்பாடல் என் கனாவைக் கூறுவது.
பிரம்மனும் இந்திரனும் சிவனின் மாலையை
வந்து வணங்கினர். சிவனின் அருள்பெற்றனர்.


அறுசீர் விருத்தம்.


பிரம்மனிந்   திரனைச் சார்ந்து
பேச்சிலா விரதம்    பூண்டும் 
உரம்நிகர் பத்தி மூண்டும் 
உலகிதை உணர்ந்த    ரன்தன்
திறம்திகழ் சிவமா    லைதான்
சேர்ந்தவண் பணிந்து  நின்றார்
வரம்தரப் பெற்றார்  எற்கே
வந்தக  னாவே நேற்றே.


எற்கே =  எனக்கே.
உணர்ந்த   ரன்தன்=  உணர்ந்து அரன் தன்

முழுவிளக்கம்  இங்குக் காணவும்:

http://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_20.html