வியாழன், 24 மார்ச், 2016

எவனோ விதைத்த பயிருக்கு.......

"அல் நீயன்" விளைத்த போரிலே
நீ ஏன்  கலந்து மீறினாய்?
எவனோ விதைத்த பயிருக்கு
ஏனோ நீர் நீ ஊற்றினாய்?
பணமோ வந்த பய   முறுத்தலோ?
பயன்சேர் கொள்கை உறுத்தலோ?
குடும்பம் குழந்தை உனனுடமை
விரும்பிப் போற்றுதல் உன்கடமை.
உயிருக் குலைசெய் நடப்புகளில்
அயர்வில் இணைதல் தவிர்த்திடுவாய்.
குண்டுகள் புதைத்து வெடிகிளப்பி
வென்றிடில் உனக்குச் சொர்க்கமில்லை.
மண்டுகள் மொழியில் நிலைகுழம்பி
மாயையில் சிக்கி அழிந்திடுதல்!.

நின்று நிலவும் நலம்படு கொள்கை
என்றும் எண்ணி 'அறிதல்
நன்றெனக் கடைப்பிடி நானிலம் உய்யவே.

புதன், 23 மார்ச், 2016

வச்சிர. . வஜ்ஜிர.

வல் என்ற  அடிச்சொல் பல்  என்று திரியும்.   இந்தப் பல் வேறு, பல என்று பன்மை குறிக்கும் பல் வேறு. இங்கு வல்> பல் என்பதை மட்டும் விளக்குவோம்.

வல் ‍ பல். இது ப>வ திரிபு.  இதை முன் பன்முறை இடுகைகளில் ஆங்காங்கு விரித்துரைத்துள்ளோம்.

வல் > வலம்.  (வலிமை)
வல் > பல் > பலம் (வலிமை).

இவற்றை விரிக்காமல், அடுத்து  வல் அடிச்சொல்லில் விளைந்த ஒரு திரிபைத் தெரிந்துகொள்வோம்.

வல் > வல்லூறு.  ஒரு பறவை.
(வலிமையான பறவை).

வல் ‍  வல்லுறு =  வலிமையாகு.   உறு ‍   உறுதல்.

வல் ‍  வல்லுற.  ( வலிமைப் பட).

வல்லுற >  வஜ்ஜிர.

இங்கு லகரம் ஜ‍வாக மாற்றப்பட்டது. இதற்கு   வேறொரு சொல் வடிவு உந்துதலாகியது


சு என்பது சொற்கள் பலவற்றில் வரும் விகுதி ஆகும்.  எ-டு :  பரிசு .

வல் > வற்சு .> வற்சு + இரு + அம்  > வற்சிரம் >  வச்சிரம்

வலிமையாக இருத்தல் என்பது பொருள். சு என்பது  இடை நிலை ஆனது.

"வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள் "  புறம் 241


வஜ்ஜிர என்பது அழகான படைப்பு.

==================================================================

குறிப்புகள்:

வல் > வல் + ம்+  அம்  =  வன்மம்
வல் >  வறு >  வறுமம் =  வன்மம் .
வல் > வற்பு >  வற்பம் =  வன்மம்
வன் >  வன்பு . =  வன்மம்





தானமும் தவமும் தமிழரும்

வேள்வி செய்தல் (யாகம் ​)  -  தமிழர்  செய்யவில்லை என்பது உண்மையன்று. இறை வணக்கத்திற்கு வேள்வி செய்வது அவர்களுக்குப் பிடித்தமானதாய் இருக்கவில்லை.  தானமும் தவமும் தமிழருக்குப் பிடித்தவை.  யாகம் பிடிக்காத காரணம் அது ஓர் உயிரைக் கொன்று இயற்றுவதாய்  இருந்தமைதான் . " அவி  சொரிந்து ஆயிரம் வேட்டலின் ....."  என்ற குறள் இதைக் காட்டுகிறது.    ஆனால் மழை இல்லாமல் போனால் தானமும் தவமும் இயற்ற முடியாவே என்று வள்ளுவர் கவலைப்படுவதாகவே  எமக்குத் தெரிகிறது  .  " வானம் வழங்கா தெனின் "  இவை தங்கா என்று வள்ளுவர் கூறுகிறார்,

தானம் என்ற சொல்  தா என்ற ஏவல் வினையடியே தோன்றியது.  இது பல மொழிகளிலும் பரவி விட்ட சொல்தான்

தா + இன் + ஆம்  =  தானம்  ஆகும்.

இன் என்பது உரிமை/ /  உடைமை  குறிக்கும் இடைச்சொல். 1.தருதற் குரியது ;-  2. தருதல் ஆகிய செய்கை;.

தருங்கால்  பிறர்க்குரிய தாவதே  தானம்.  இங்கு இன் மிக்கப் பொருத்தமாயுள்ளது.  உரிமை பிறர்க்கு மாறுவதைக் குறிப்பால் உணர்த்துகிறது. மிக்க ஆழ்ந்த பொருண்மை மிளிரச் சொல் உருவாக்கப் பட்டுள்ளது.

இன் என்பதில் இப்பொருளைக் காணார் பலர்.

எ-டு : உரிமை உடைமைப் பொருளில் இன்:

இந்தக் காய்ச்சல் ஒரு நோய் நுண்மத்தின் (virus )   வேலை என்று மருத்துவர் கூறுகிறார். 

சொல் அமைகையில் இது  தன்  தலையெழுத்தை  இழந்து  "ன்"  என்று மட்டும் நிற்கும்.  இல்லையென்றால்  "தாயினம் "   என்று போந்து வேறு சொல்லுடன் மயங்கிப்     பயன்படுத்துவோரைக் குழப்பும் . தானம் என்பதே சரியான அமைப்பு.

ஆங்கில dOnation வரை பரவி உலகச்  சேவை செய்யும் இத் தமிழ்ச்சொல்லை வாழ்த்துவோம்.

இன்னும் இதுபற்றி எழுதவேண்டும் என்று தோன்றினும் இத்துடன் அமைவோம்.  அடுத்துத் தவம்  எனற்பாலதான சொல்லை நாடுவோம். 

.