வியாழன், 17 ஏப்ரல், 2014

முயற்சித்தல்


இந்தச் சொல்லின் அடிச்சொல் எதுவெனின்,  முயலு(தல்) என்பதே ஆகும். அல்லது முயல்தல் எனினும் ஏற்கற்பாலதே. முயலல் என்பதும் சரிதான்.

முயல் என்பதே அடியாய் உள்ள வினைச்சொல்.  "கேள்வி முயல்" என்று ஆத்திசூடியில்   வருகிறது  அன்றோ?.  அப்படி  என்றால்,  கேள்வி  கேட்டு அவற்றின் மூலம்  அறிவை விரிவு படுத்திக் கொள் என்பது பொருள்.

முயல் என்று  ஓர்  உயிரி  உண்டு. இங்கு  நமது கவனத்தில் இருப்பது ஓர்  வினை.  ஓர் உயிரி  (விலங்கு )  அன்று.

முயல் + சி  =   முயற்சி.  சி -  விகுதி.

வினைச்சொல்லினின்றும்  சி விகுதி பெற்று ஓரு தொழிற்பெயர்  அமைந்துள்ளது.

முயற்சி  மீண்டும் வினையாகுமா?

முயற்சித்தல்   என்பது சரியானால், பயிற்சித்தல், உயர்ச்சித்தல்  என்றெல்லாம் வரவேண்டுமே. தொழிற் பெயர்கள் இங்ஙனம் அமையா.

"முயற்சிக்கிறான்" என்று பேசக் கூடாது,  எழுதவும் கூடாது.

தொல்காப்பியத்தில் தொழிற்பெயரிலிருந்து வினை அமைவது காணப்படுகிறது.

"மெய்யி   னி யற்கை  புள்ளியொடு  நிலையல் "   (தொல் 15).

என்ற நூற்பாவைப் பாருங்கள்.

நில்  + ஐ =  நிலை.

நிலை -  நிலையல் மற்றும்  நிலைத்தல் என்று  நிலை என்ற பெயர்ச்சொல்  மீண்டும் வினை ஆகவில்லையா?

பெயரே மீண்டும் வினை ஆனாலும்,  நிற்றல் என்பதன் பொருள் வேறு,  நிலைத்தல் என்பதன் பொருள் வேறு. முயற்சித்தல் என்ற சொல்லமைப்பிலிருந்து இது வேறுபடுவது ஆகும்.
முயலுதல் என்பதும் முயற்சித்தல் என்பதும் பொருள்  ஒன்றுதான். ஆகையால், முயற்சித்தல் என்பது வேண்டாத நீட்சி என்பர்.

எனினும் முயற்சித்தல் என்பது இன்னும் வழங்கவே செய்கிறது  -- தவறென்று ஆசிரியர் கடிந்தாலும்.

muyaRchiththal is a malformation.

கோர்வை, முயற்சிப்பது" என்பவெல்லாம் பிழைகள் என்பதில் ஐயமில்லை.தாளிகைத் துறையில் வேலைபார்க்கும் ஒரு நண்பரிடம் இதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொல்கிறார்: கோவை என்று எழுதினால் மக்களுக்குப் புரியாது, முயலுதல் என்றால் முயலைப்பற்றிய எண்ணம் வந்துவிடுகிறது என்று! -- சொல்லிப் புன்னகை வேறு புரிந்தார். அவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் போலிருக்கின்றது. நாம் நல்லதமிழ் பயில்வோம் ------Sivamala, writing on 18.6.2006




புதன், 16 ஏப்ரல், 2014

உத்தரவு

 இச்சொல் தமிழன்று என்று சொல்வாருமுண்டு.  

இச்சொல் வேற்று மொழி அகராதிகளிலும் இடம் பெற்றிருந்திருக்கக் காணப்பட்டமை ஒரு காரணமாயிருக்கலாம். ஒரு சொல் எங்கு தோன்றியிருப்பினும் அது வழங்கும் மொழிக்குரியதாக எடுத்துக்கொள்வதும் ஒரு வழியாம். எ - டு   காவல் என்பது தமிழ் ஆயினும் அது மலாய் மொழியிலும் தனியாகவும் முன்னொட்டு பின்னொட்டுகளுடனும் வலம்  வருகிறது. வழக்கின் காரணமாய் அதுவும் மலாய்ச் சொல் ஆகும். மற்றும் அது தமிழ்ச் சொல்லும் ஆகும். தமிழில் தோன்றி வழங்கியும் வருகிறது.  இப்படி  முறைப்படுத்துவதில் தவறில்லை.  இது  நிற்க.

அ ,  இ, உ  என்பன தமிழ்ச்     சுட்டுகள்.  இவற்றுள் உ என்பது முன்னிலை குறிப்பது.

தரவு  =  தரப்படுவது.  தரு+ வு  = தரவு  ஆகும்.  ஒப்பீடு: வரு + வு > வரவு.

 ,முன்னிலையாய் உள்ளவர் தருவதே உத்தரவு ஆகும்.

இது தமிழன்று என்பதற்கு காரணம் ஒன்றுமில்லை. கிடைத்துள்ள சங்க இலக்கியங்களில் இல்லாமல் இருக்கலாம். அது சரியான காரணமன்று.
இப்படியான இலக்கியங்கள்  உலகின் பல மொழிகளில் இல்லை.

வந்தனை

வினைப் பகுதியிலிருந்து தொழிற் பெயர்களை அமைத்தலே தமிழ் முறையாம். ஆனால் பிற மொழிகளில் எச்ச வினைகளிலிருந்தும் (1)  பெயர்ச் சொற்களை அமைப்பதுண்டு. இப்படித் தமிழில் அமைந்தவை ஒரு சிலவே ஆம். இதை நாம் முன்பே அறிந்துள்ளோம்.

ஒருவர் நம் வீட்டுக்கு வருகிறார் என்றால், "வா'ங்க வா'ங்க" என்போம். செய்யுள் நடையில் "வந்திடுவீர், வந்திடுவீர் "  என்றோ "வருக வருக"   என்றோ சொல்லும் பழக்கம் பெரும்பாலும் நம்மிடம்  இல்லை எனலாம்.
 எங்ஙனமாயினும் வந்தவரை  வணக்கத்துடன் அழைக்கும் பண்புடையார்  தமிழரெனின் மிகையன்று.

 இப்பண்பு பிறரிடத்து இல்லையென்பது பொருளன்று .

இப்போது விடையத்திற்கு வருவோம்.

வந்திடுக என்பதே "வந்தித்தல்" ஆகும். வருமாறு வணங்கி ஏற்றுக்கொள்ளல்.

வந்திடு > வந்தி > வந்தித்தல்.
அல்லது  வந்து > வந்தி > வந்தித்தல்.

இரண்டும் ஒன்றுதான். வந்து என்பது எச்ச வினை. (1)

வந்தி + அன்+ ஐ  =  வந்தனை.
வந்தி + அன்+ அம்  = வந்தனம்.

 அடிச்சொல்  "வா" என்பதே.

"யாம் வந்தோம்" என்பதை "யாம் வந்தனம்" என்று சொல்லலாம். நீவிர்  வந்தீர்  என்பதை "நீவிர்  வந்தனிர் " எனலாம். ஈண்டு வந்தனம் வந்தனிர்  என்பன வினை முற்றுக்கள். இவை அன் சாரியை பெற்றன.

வந்தனம் என்பது அமைந்த விதமே இங்கு கூறப்பட்டது.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.  ---- பாரதி.