சனி, 20 டிசம்பர், 2008

இயற்கை தந்த கவி செயற்கையில் பதிவு பெற்றது.

மெல்லிய பூங்காற்றிலே --- என்
மேனி சிலிர்த்திடுதே!
அல்லி மலர்திடுதே ! -- நில
வழகொளி வீசிடுதே,

அணிபெறு வண்டினங்கள் -- சேர்ந்து
அருகே முரல்பொழுதில்,
இனிமை தவழ்கவிதை -- என்
நெஞ்சில் முகிழ்க்கிறதே.

மங்கிய தண்மதியில்் -- இங்ஙன்்
மாந்திக் கிடக்கையிலே,
தங்கிடும் கோலெழுத்தை -- வரை
தந்திடத் தருணமுண்டோ?

உள்ளில் ஊறியதை -- அங்கே
உள்ளப் பலகையிலே,
தெள்ளத் தெளிவுறவே -- வைக்கத்்்
தேங்கின எண்ணங்களே.்

மகிழ்வினை என்சொல்லுவேன் -- என்
மனைக்குள் புகுந்ததுமே,
அகழ்ந்துடன் ஆய்ந்துமனம் -- கண்டு
அக்கவி தான் தொடுத்தேன்.

இயற்கைக்கு நன்றிசொல்வேன் - கவி
இயன்றதோர் ஊற்றதனால்!
செயற்கை மறப்பதுண்டோ --- புனை
செய்த மனைவளர்க!

வெள்ளி, 12 டிசம்பர், 2008

நிலநூல் அறிவு

களப்போர் நிகழ்வுகளைக் காதாற் பெறினும்
எழுத்தாற் படித்திடினும் என்ன --- உளத்தாலே
எந்தவிடம் என்ன இனிநடக்கும் என்றுணரச்
சொந்த நிலஅறிவின் றேல்.

இன்பகாலம் இனி வருமோ?

வாழ்வதற் கேற்ற சூழல்கள் அமைந்த
கூடும் ஒவ்வொரு குருவிக்கு முண்டாம்;
வாடிய காலம் இருப்பினும் இன்பம்
கூடிய காலமும் வந்திடும் அன்றோ?
ஏற்ற இறக்கம் இயல்பே வாழ்வினில்!
ஆற்ற இனிதாய்த் தொடருதல் அரிதே.
குமுறிய கடலால் குமரி மூழ்கித்
தமிழ்நிலம் சுருங்கிய கால முதலாய்
இழந்தவை பற்பல; இனித்தவை பற்பல.
இன்ப காலம் இனிவரும்; துன்பமும்
தொலைந்திடும் அந்நாள் எந்நாள்?
அலைதுயர் இலாது தமிழர் வாழவே!