புள்ளிவிவ ரங்களை அள்ளித் தரத்தொடங்கின்
ஒள்ளியரென் போரும் உறங்கத் தொடங்கிடுவர்!
சாப்பாடோ தேநீரோ சற்றே கிடைக்குமென்று
ஏற்பா டறியா திறங்கிவந்த ஊரார்
கடினக் கருத்துகள் ஆரம்பம் ஆனால்
படுக்கையைத் தேடிப் பறக்காமல் கேட்டுவிடின்
பூமியில் அஃதும் இயல்பன்று நாமிதிலே
நேமத்தால் நன்மைகாண் போம்
----- சிவமாலா
இதன் பொருள்:
புள்ளிவிவ ரங்களை அள்ளித் தரத்தொடங்கின் --- ஒரு பொதுக்கூட்டத்தில் எழுதிக் கவனித்தாலே உருப்பெற்றுக் காணத்தக்க, புள்ளி விவரங்களை வாய்மொழியாகக் கூறத்தொடங்கிவிட்டால்,
ஒள்ளியரென் போரும் உறங்கத் தொடங்கிடுவர்!--- மிக்கச் சிறந்த நினைவாற்றல் நிறைந்த அறிவாளிகள் கூடத் தூக்கத்தில் விழுந்துவிடுவர்;
சாப்பாடோ தேநீரோ சற்றே கிடைக்குமென்ற---- கூட்டத்தில் சாப்பாடோ குடிக்கத் தேநீரோ கொஞ்சம் கொடுப்பார்கள் குடிக்கலாம் என்னும்;
ஏற்பா டறியா திறங்கிவந்த ஊரார்--- ஏதாவது கிடைக்கும் பார்க்கலாம் என்று கூட்டத்திற்கு வருகின்ற ஊரின் பொதுமக்கள்;
கடினக் கருத்துகள் ஆரம்பம் ஆனால்--- கடுமை மிகுந்த பொருளியல் கருத்துகள் சொற்பொழிவில் வரத்தொடங்கிவிடுமானால்;
படுக்கையைத் தேடிப் --- மீண்டும் வீட்டுக்குச் சென்று படுத்துத் தூங்கவே மனங்கொள்வர்; பறக்காமல்--- வீட்டுக்கு ஓடிவிடாமல்,
கேட்டுவிடின்--- ( அவ்வாறின்றி) உட்கார்ந்து எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொள்வார்கள் ஆயின்;
பூமியில் அஃதும் இயல்பன்று --- அதுவும் எங்கும் எப்போதும்
நடைபெறுவதன்று;
நாமிதிலே--- நாம் இதைப் பகுத்துணர்வதானால் இதில்
நேமத்தால் நன்மைகாண் போம்.--- இயல்பான விதிமுறைகள் கடைப்பிடிப்புகள் எவையோ அவற்றால், உண்மையைத் தெரிந்துகொள்வோம்.
யாரையும் குறைகூறுவதைத் தவிர்ப்போம் என்றவாறு.
நேமம் : எப்போதும் உள்ளபடி .
Note: The meanings have been made clear; we may need to paraphrase correctly with due
regard to the poetic wordings. Will attend when time permits.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக