வெள்ளி, 5 ஏப்ரல், 2024

பாக்கியம் என்பதன் அடிமுடிப்பொருள்.

 இவ்வுலகில் இலாபம் மட்டுமே ஏற்படுவதில்லை.  நட்டமும் ஏற்படத்தான் செய்கிறது. இரண்டுமே இந்த உலகம் என்னும் குட்டையில் ஊறிக்கிடைத்த மட்டைகள்தாம். இரண்டும் ஒரே மட்டை என்று வைத்துக்கொண்டால், மட்டையில் ஒரு பாக்கியம் என்னலாம்; மற்ற பகுதி பாக்கியமின்மை ஆகும். ஒன்று நல்ல பகுதி.  இன்னொன்று கெட்ட பகுதி.

பாக்கியம் என்றால் இயன்ற பகுதி.  அதனால்தான் அதற்கு இயம் என்ற விகுதி கொடுத்துள்ளனர்.  பாக்கியமின்மை நமக்கு இயலாத பகுதி. அதை நாம் இப்போது துருப்பிடித்த பகுதி என்னலாம்.  துருப்பிடித்த இரும்பு போல பயன்படுத்த வியலாத பகுதி. இதை இன்னும் சுருக்கிச் சொல்வதானால் "துருப்பாக்கியம்" -  என்று சொல்லிப்பாருங்கள். இன்னும் சுருக்கித் துர்ப்பாக்கியம் என்று சொல்லியும் பாருங்கள். 

துரு என்பது இரும்பைத் துருவிச் சென்று இறுதியில் ஒரு பொத்தலைப் போட்டுவிடுகிறது.  அதனால்தான் அதைத் துருவென்று சொன்னார்கள். துருவென்பது துருவுதல் என்பதன் அடிச்சொல். இறுதியில் இரும்பைத் தின்றுவுடும் துருவை துரு என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது. துருவென்பது சரியான சொல்.

பாக்கியம் என்றாலே அதை நற்பேறு என்றுதான் வேறு சொல்லால் குறிக்கமுடியம்.  அப்புறம்  துருப்பாக்கியம் என்றால் இப்போது பாக்கியம் என்ற சொல் "கெட்ட நற்பேறு"  என்று சொல்லலாமோ?   அது முரண்பாடாக இல்லையா?  ஆகவே,  பாக்கியம் என்றால் நற்பேறு அன்று,  வெறும் பேறு மட்டுமே,  நற்பாக்கியம் என்றால்தான் நல்ல பாக்கியம், துருப்பாக்கியம் என்றால்தான் கெட்டபாக்கியம் என்னலாமோ.

மனிதனே குறைகள் இல்லாதவன் அல்லன்;  அவனால் ஆக்கப்பட்ட மொழியும் குறைப்பட்டதே ஆகும். ம்

இப்படி ப்ளூம்ஃபீல்ட்டு முதலிய மொழிநூலறிஞர்கள் மொழிகளில் பல முரண்பாடுகள் உள்ளன என்று கூறுகிறார்கள்.  உலகின் எல்லா மொழிகளிலும்!   ஆங்கில மொழியிலிருந்து பல முரண்பாடுகளைக் காட்டுகிறார்கள். தமிழில் இப்படி நாம் காணும்போது,  உரையாசிரியர்களே நமக்கு வந்து வழிகாட்டுகின்றனர். பாக்கியம் என்றால் நல்ல பாக்கியம் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் கூறுவர்.  பள்ளமும் மேடும் அடுத்தடுத்து வருமாயின்  வண்டி கவிழ்ந்துவிடுமன்றோ?   நல்லபடியாக மட்டுறுத்துகின்றனர் என்று அறிக.

எனவே:

பாக்கியம் என்று வந்தால் அது நல்ல பாக்கியம் அல்லது பேறு.

துருப்பாக்கியம் என்றால் கெட்ட நிகழ்வு

அடிப்பொருள்

:  நல்ல பாகம் அல்லது பேறு.

ஏன் பாகம் என் கிறோம்?  பாகம் என்பது பகுதி,

எப்படிப் பகுதி ஆகும், பாருங்கள்:

பகு> பாகு>  பாகு + இயம் > பாக்கியம்.

இறுதி உகரம் வர ககரம் மெய்  இரட்டிக்குமே.

முடிப்பொருள்:

பாக்கியம் துர்ப்பாக்கியம் என்று உலகவழக்கில்  ( அன்றாடப் பயன்பாட்டில்) இருப்பதால்,  பாக்கியம் என்பது இப்போது பொதுப்பொருளில் வழங்குகிறது. 

ஆயினும் பாக்கியம் என்பதன் ஆக்கப்பொருள் நற்பேறு என்பதே.

இயம்:  இ + அம்  :  என்றால் இங்கு அமைவது அல்லது இயன்றது.

இயல் > இயம்,

அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்னர்.


கருத்துகள் இல்லை: