ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

இளக்காரம்

 இவ்வினிய நாளில் இளக்காரம் என்னும் சொல்லின் திறம் அறிவோம்.

முதலிற் காரம் என்னும் விகுதி போலுமோர் உறுப்பினை  அலசுவது தக்கது.

காரம் என்பதற்குக் கூறப்படும் பொருள் பல.   மிளகு அல்லது மிளகாய் முதலிய உண்துணைகளைக் கடித்தால் நாவில் ஏற்படும் உற்றுணர்வுக்குக் காரமென்பர். எரிவு தாங்காவிட்டால் சிறிது தண்ணீர் குடித்துக்கொள்வோம். தொண்டையில் சளியடைப்பு என்பது எல்லா மனிதருக்கும் ஏற்படும் நிலை.  இதை மிளகு மாற்றக்கூடுமென்னும் நினைப்பில் தியாகராச பாகவதர்கூட மிளகை வாயில் பாடிக்கொண் டிருக்கையில் போட்டுக்கொள்வார்  என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.  தமிழ் முரசு ஆசிரியராகத் திகழ்ந்த மேதகு சாரங்கபாணியார் நம் பாகவதர் சிங்கப்பூருக்கு வரவழைக்கப்பட வேண்டும் என்று முயற்சிகள் செய்தார்.  அதற்குள் அவர் காலமாகி  விட்டபடியால்,  அவருக்குப் பதிலாக அவர்தம் இளவல் கோவிந்தராச பாகவதரைக் கச்சேரியில் சிங்கப்பூரில் கேட்கும் நற்பேறு கிட்டியது.  காந்தியைப்போல் ஒரு சாந்த சொரூபனை என்ற பாபநாசம் சிவன் பாடலை பழைய விக்டோரியா நினைவு மண்டபத்தில் அழகாகப் பாடினார்.  ஆனால் மிளகு வாயில் போட்டுக்கொண்டாரா என்று தெரியவில்லை. காரத்தை விளக்கும் முயற்சியில் இக்கேள்விச் செய்தியை  நினைவுகூர்ந்தோம்.

ஆனால் காரம் என்பதன் அடிச்சொல்  "கார்" என்பதுதான்.  கரு> கார் என்று திரியும். கருமுகில்கள் வானில்பல தோன்றி மழை வரும் காலத்தைக் கார்காலம் என்பர்.  அழல் ( தீ ) என்ற சொல்,  அயல் என்றும் திரியும்.  இது ழகர யகரத் திரிபுவகை. வாழைப் பழத்தை வாயைப்பயம்  என்று பேசிக்கேட்டிருக்கிறோம். இது பேச்சுமொழியில் என்றாலும் எல்லாம் அந்தத் திரிபுவகைதான்.  எந்த உருவில் எங்கு தோன்றினாலும் அது நம்மிடமிருந்து தப்பிவிடக் கூடாது. இதில் என்ன ஒரு வசதி என்றால்  வெண்பா எழுதும்போது யகர எதுகை தேவைப்பட்டுப் பொருத்தமாக வந்தால் அழல் என்பதற்கு நேரான பொருண்மையுள்ள சொல்லை அயல் என்ற உருவில் திணித்துப் பாட்டை எழுதிவிடலாம்.   இப்படி எழுதினால் இக்காலத்தில் புரிந்துகொள்வார் குறைவு என்பது வேறு இடர் ஆகும்.  குழம்பு காரமாகிவிட்டது என்று சொல்வதற்கு அயல்கிறது என்று கூறும் பேச்சு இப்போது மறைந்துவிட்டது. இதைக் குறிக்க ஆங்கிலத்தில் வரும் acrid என்ற சொல்லும் அண்மையில் யாரும் பயன்படுத்திக் கேட்கவில்லை.  Pungent என்னும் சொல் அணிமை உடையதாகலாம்.  சுவை, மணம் இரண்டையும் இந்தப் pungent என்னும் சொல் தழுவுகிறபடியால்  காரம் என்னும் ஒருசார் பொருண்மைக்கு இச்சொல் ஈடாகலாம்.

அலங்காரம் என்ற சொல்லிலிலும் காரம் என்ற பின்னொட்டு உள்ளது.  ஆனால் இது அழகாக்கப்பட்டது என்ற பொருள் உள்ள சொல்.  இதில் வரும் அல என்ற சொல் அழ(கு) என்பதற்கு நேர்.  பழம் என்பதும் பலம் என்பதும் பழுத்தது என்ற பொருளில் ஈடானவை.  ழ <> ல திரிபு. ஆயினும் அலகு என்ற சொல் பல்பொருட் சொல். அழகு என்பதற்கு நேரானதன்று. நம் ஆய்வு காரம் என்பதே ஆதலின், அலங்காரம் என்பதில் நாம் இதுவரை கருதிய காரமெதுவும் இல்லை,

கரி(~த்தல் )  என்னும் வினையடியாகத் தோன்றும் பெயர்ச்சொல்லான காரம் என்பது கரி + அம் என்ற அடியும் விகுதியும் இணைய முதனிலை நீண்டு காரம் என்று வரும்.  அது காரச்சுவை குறிக்கும் என்பது அறிக.  ஆனால் அலங்காரம், இளக்காரம் என்பவற்றில் வரும் காரம் என்ற ஈறு,  இதனுடன் தொடர்பு உடையதன்று.

கடுமையான பேச்சு  என்பதைக் காரமான பேச்சு என்போம்.  காரசாரமான வாதம் என்ற வழக்கும் உள்ளது.  இதில் வரும் காரமும் இளக்காரம் என்பதில் வரும் காரமும் ஒன்றன்ன்று.

இளக்காரம் என்ற சொல் பேச்சு வழக்கில் வரும் சொல்.  இளக்கு என்பதனடியாகப் பிறந்த வினைச்சொல் மற்றும் பிறவும் உள்ளன. மூலவினை இளக்குதல் என்பதே.  கடினம் குறைத்தல் என்பதே இதன் பொருண்மையாகும். இங்கு காரம் என்னும் துணைச்சொல் அல்லது விகுதி இல்லை. 

இளக்கு + ஆர்  + அம் >  இளக்காரம்  என்பதே சரியாகும்.  ஆர்தல் இதன் பொருள் நிறைதல்,  முழுமைப்படுதல் என்பதே.   இள என்ற அடியுடன் கு என்ற வினையாக்க விகுதி இணைந்து இளக்கு என்ற வினை அமைகிறது என்று கண்டுகொள்க. அதன் பின் வருவன ஆர்  மற்றும் அம் என்பனவே  ஆகும்.

வலக்காரம் என்ற சொல்  இதுபோல் தோன்றினாலும்  வலம் + கு + ஆரம் என்று வருவதே  ஆகும்,   வலக்குதல் என்ற வினை அமையவில்லை.  இங்கு வந்த கு என்பது ஓர் இடைநிலையாகிறது  வன்மை நிலைக்கு நிறைவு ஆதல் என்று அறிந்துகொள்க. காரம் இங்கு ஒரு சொல்லீறு அல்லது விகுதி என்றால் அது கு என்ற சேர்தல் குறித்த சொல் இணைந்த இறுதியே ஆகும்.  இவ்வாறு கு என்ற இடைநிலை பலவாறு பல சொற்களில் கலந்துள்ளது.  இவற்றுள் பெயர் வினை என்று வேறுபாடில்லை.  எடுத்துக்காட்டு:  செய்+ கு+ இன்று + ஆன்,  செய்கின்றான்.  கின்று என்பது சேர்பிரிப்பினால் வந்த புது இடைநிலையாகிறது.  ஆனால் இவ்வாறு செய்தல் வசதியாய் இருக்கக்கூடும்.

எது உணவு ஆகுகிறதோ,  அதுவே  ஆகாரம்.  ஆர்தல் என்றால் உண்ணுதலும் ஆகும்.   ஆதல் என்பதே மூலவினை.   ஆ -  வினை; கு-  பழந்தமிழ்ச் சொல். இணைவு குறிக்கும்,   ஆர் - உண் என்பது,  அம் விகுதி .  ஆ+ கு+ ஆர்+ அம்  > ஆகாரம் இதன் பொருள் உணவு. ஆ+ காரம் என்று பிரித்துக்கொள்வது ஒரு விரைவுவசதியாய்  இருக்கலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

திருத்தம் 28042024  1817 சில எழுத்துமாற்றங்கள்

சரிசெய்யப்பட்டன.





கருத்துகள் இல்லை: