புதன், 31 ஆகஸ்ட், 2022

மடம், மடுத்தல் வினைச்சொல்.

கேட்டல் என்பதற்கு இரு பொருள்: 1  வினாவுதல் (கேள்வி கேட்டல்),  செவி மடுத்தல் (  சொன்னது அல்லது ஒலி காதுக்கு எட்டுதல் ).

மடுப்பு  ( மடு-த்தல் வினையினின்றும் அமைந்த சொல்),  மடிப்பு என்றும் பொருள்படும். இது யாழ்ப்பாண வழக்கு  ஆகும்.  ஆகவே, மடி-த்தல்,  மடு-த்தல் என்பவற்றிடை மயக்கம் எனலாம்.

மடு என்பது பள்ளமான இடம் என்றும் பொருள் படும்:  " மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு"  என்ற வழக்கில் இது காணலாம்.

மடு - நீர்நிலை என்பதுமாம்.

மடுத்தல் - உண்ணுதல். நிறைத்தல்,  சேர்த்தல்,  ஊடுசெல்லுதல், பரவுதல் என்பனவும் இச்சொல்லால் தெரிவிக்கலாம்.    செவிமடுத்தல் என்பது செவியிற் சென்று அடைதல் என்று பொருள்கொள்ளவேண்டும்.

இங்கு இச்சொல்லின் எல்லாப் பொருள்களையும் முற்ற விளக்கவில்லை. சில விடப்பட்டன.  மடம் என்னும் சொல்விளக்கமே இவ்விடுகையின் நோக்கம் ஆகும்.

மடங்கள் உண்டாக்கப்பட்ட போது,  அவை  நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டுசேர்க்கவும்  மக்களும் தங்களை மடத்திடை கொண்டுசேர்த்து பெறற்குரிய செய்திகள் முதலியன பெற்றுக்கொள்ளவும்  ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. மேட்டு நீர் பள்ளத்தில் ஓடிச் சேர்தல் போலும்  ஓர் விழைநிகழ்வு கருதியே அவை அமைந்தன. மடுத்தல் உண்ணலும் ஆதலின் அங்கு உணவு உண்ணுதலும் நடைபெற்றது.  செவி மடுத்தற்கும் செய்தி கிட்டிற்று. இவ்வாறு பல வகைகளில் மடுத்தல் நடைபெற்றது என்பதுணர்க.

மடு + அம் -   மடம் ஆயிற்று.

மொழிவரலாற்றில் அகர வருக்கச் சொற்கள் வளர்ச்சி பெற்று உயிர்மெய் முதலாய் ஆயின,  ஆதலின்  அடு> மடு என்பதுணர்க.

இந்த அணுக்கம், செவிமடுத்தல் என்பதில் இன்னும் உள்ளது.  செவியை அடுத்த செய்தியே செவி மடுத்த செய்தியும் ஆகும்.

எமக்கு அப்புலவரிடத்தே ஒரு மடுவுண்டாகிவிட்டது என்றால்,  நீர் பள்ளத்தினுள் செல்லுமாறுபோல,  ஓர் ஈர்ப்பு உண்டாயிற்று என்பது பொருள்.  மனம் இடுகின்ற இடத்தில்தான் மடு.  இடு> இடு+அம் > இட்டம்,  இடு> ஈடு ( முதனிலைத் திரிபுச்சொல்.  ஈடு> ஈடுபடு > ஈடுபாடு. இவ்வாறு உணர்க.

ஆதிசங்கரரின் கருத்துப் பரவல், தமிழ்நாட்டிலிருந்தே நடைபெற்றது. மடம் அமைத்தலும் இங்கிருந்தே நடைபெற்றமையால், மடம் என்னும் சொல்லும் அவ்வாறே விரிந்து பிற இடங்களிலும் பயன்பாடு கண்டது.  மடம் - மட் ஆனது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

கருத்துகள் இல்லை: