புதன், 3 ஆகஸ்ட், 2022

சாதாரணம் பற்றிய சிந்தனை.

 ஒரு வீட்டில் சாவு எப்போதுமே நடந்துகொண்டிருப்பதன்று.   சாவு என்பது. எப்போதாவது நடப்பதென்பதனால் அது அரிது என்று சொல்லலாம். ஆனால் உலக முழுவதையும் ஒருசேர நோக்கினால்,  சாவு நடந்துகொண்டே இருக்கிறது. மதுரையில் நாலுபேர், மானாமதுரையில் ஐந்துபேர் என்று கணக்கெடுத்தால், நியூ யார்க்கிலிருந்து பெய்ஜிங் வரை அது  நடவாத இடமில்லை. சாகாத குடும்பத்தில் கடுகு வாங்கிக்கொண்டு வா என்று புத்தர் அனுப்பியதுபோல, எல்லாக் குடும்பத்திலும் எப்போதாவது  எமன் விருந்தாளியாக வந்துவிட்டுப் போயிருப்பான். எமன் தான் எப்போதும் நம்முடன் இருப்பவனாயிற்றே. அதனாலேயே நாம் அவனை " எம்மவன். எம்மவன்" என்று பயப்பற்றுடன் குறிப்பிடுவோம். அவன் வந்துபோகிறவன் அல்லன். நம்முடன் உள்ளிருந்து என்றோ வெளிப்படுபவன். அவனை விருந்தாளி என்றது வெறும்பேச்சுக்காகவே.

சாவைத் தரும் நிலை, சா தாரணம்.  ( சா-  சாவதைத்;  தரு -  தருநிலையை,  அணம்-  அணவி நிற்றல் என்று,  இச்சொல் தமிழாவதைக் கண்டுகொள்க.ஒரு சொல்லை ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் உள்ளுறைவுகளைப் பிரித்தாலும் அதே பொருள் புலப்படும்படியாக அமைப்பது சிறப்புக்குரியது. இச்சொற்களைப் பொதுச்சொற்கள் என்று குறித்தனர் அறிஞர் சிலர். 

சாவைத் தரும் நிகழ்வுகளும் உலகிற் பல. தண்ணீர்த் தொட்டியில் விழுந்தாலும் இறக்கிறான்,  படுத்துத் தூங்கும் போதும் இறக்கிறான். சோறு விக்கிக்கொண்டும் இறக்கிறான். காரணங்கள் பற்பல.  இறப்புதான் இயல்புநிலை.

சாதாரணம் என்பது இயல்பான நிலை என்ற பொருளை அடைந்தது, " பெறுபொருள்" ஆகும்.    உறுபொருள் சாவைத் தருநிலை என்பதுதான்.  இன்னும் சில விளக்கங்களும் உள்ளன.  வந்துழிக் காண்க. சாவைக் கண்டு கலங்கிய நிலை வந்து,  உடம்பைப் பாடம்பண்ணிய நிலை மாறிப்  பின் இயல்பு என்ற நிலையையும் உணர்வையும் பெற மனிதக்குலம், காலம் எடுத்துக்கொண்டதென்பதை உணர்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின். 

 

கருத்துகள் இல்லை: