விலங்குகள் எனப்படும் உயிரினங்கட்கு, இந்தப் பெயர் வரக் காரணம், இவை மனிதர்கள் என்போரிலிருந்து வேறுபட எண்ணப்பட்டமைதான். விலகு - விலங்கு என்று சொல் அமைந்தது. இவை விலக்கி எண்ணப்பட்டவை. இதைப்போல் அமைந்த இன்னொரு சொல்:
ஒழுகு ( வினைச்சொல், ஏவல்வினை) , > ஒழுங்கு.
இதுபோலவே:
விலகு > விலங்கு.
இனியும் ஒரு சொல் வேண்டின்:
வினைச்சொல்: அணுகு, அணை. ( ~ (த்)தல் )
ஆண்மகனை வல்லந்தமாக அணுகி, அணைத்து ஆட்கொள்ளும் ஒரு பேய்.
அண் ( அணுகு, அணை) > அணுகு > அணங்கு அல்லது:
அண்> அண்+ அம் + கு > அணங்கு.
இச்சொல்லின் அடிப்படைக் கருத்து அடுத்துவரல் : அண்முதல், அணுகுதல், அணைத்தல்.
இண் என்ற அடிச்சொல்லிலிருந்து இணங்கு வந்தமை அறிக.
அண் என்ற படர்க்கை அடிச்சொல்லும் இண் என்ற சேய்மை அடிச்சொல்லும் ஒப்பிடுக.
விலங்கு என்பது ஊர்வனவற்றையும் குறிக்கும்.
ஆனால், கால்நடை என்பது நடப்பனவற்றை மட்டுமே குறிக்கும். மாடு, மனிதனை இழுத்துச் செல்லுதல் மட்டுமின்றி, சாமான்களையும் முதுகிலோ வண்டியிலோ கொண்டுசெல்லும் வேலையையும் செய்கிறது. ஆனால் மாடு, அது தனக்கு இத்தகைய வசதியைக் கேட்பதில்லை, யாரும் அதற்குக் கொடுப்பதும் இல்லை. சில இடங்களில் அறுப்புக் கொட்டகைக்குக் கொண்டு செல்லும்போது மட்டும் அது தொலைவாக இருந்தால் பளுவுந்தில் வைத்துக் கொண்டுபோவார்கள். விரைவில் அதன் உயிரை எடுப்பதற்குதான். மனிதனுக்குச் செல்வத்தை வாரி வழங்கினாலும் மாட்டுக்கு மற்றும் ஆட்டுக்கு வாகன வசதியில்லை. ஆகவே கால்நடை என்பது சிற்றூரார் அதற்கிட்ட சிந்தனை பெயர் என்று சொல்லவேண்டும்
கால் + நட + ஐ > கால்நடை.
மனிதனோடு ஒப்பிடுகையில் தன் வாழ்நாள் முழும்மைக்கும் நடைப்பயணமே செய்யும் --- இறுதியில் தன் உயிரையும் ஈந்துவிடும் விலங்குக்கு அது பெயராக வருவதால் அஃது ஆகுபெயர். வினைப்பெயர் வடிவிலிருந்து ஓர் உயிருள்ள பொருளைக் குறித்தது காண்க.
கால்நடை என்பது தமிழ், ஒரு பேச்சுவழக்குச் சொல். ஆடு, மாடுகளைக் குறிக்கும். புலி, சிங்கம், கரடி முதலியவையும் காலால் நடப்பன , (ஓடுவன) என்ற போதும், இச்சொல் விரித்துப் பொருள்கொள்ளப்படாமையால், இதைக் காரண இடுகுறிப் பெயர் என்ப. நாற்காலி என்பது நாலுகால் உள்ள குதிரை யானைகளைக் குறித்தல் இன்மை காண்க.
இவ்வாறு கண்டுகொள்க.
அறிக மகிழ்க.
மெய்ப்பு: பின்னர்.
`
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக