செவ்வாய், 24 மார்ச், 2020

பிரேமை காதல் காமம் காம். மற்றும் காவாலி

பிரேமை,  மோகம் முதலிய சொற்களை முன் விளக்கியதுண்டு எனினும் அவை இங்குக் காணப்படவில்லை.

பிற ஏமை -  பிரேமை

பிற குடும்பத்தில் அல்லது பிற கூட்டத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணை தான் தனக்கென்று எடுத்துக்கொண்டு அவளைக் காத்து ஒதுக்கிக்கொள்வதே பிரேமை என்ற சொல் அமைவதற்குக் காரணமானது,  ஏம், ( ஏமம்) என்பது பாதுகாவல் என்று பொருள் தரும் சொல்.  தன் குடும்பத்தில்  பிறந்த பெண் தனக்குத் தங்கை அல்லது  அக்கை ( அக்காள் )  ஆகிவிடுதல் கூறவேண்டாதது. உறவு முறைகள் மக்களிடை வரையறுக்கப்பட த் தொடங்கலுற்ற மிகப் பழங்காலத்தில் நிலவிய கருத்துகளின் அடிப்படையில் பிற ஏமை  (பிரேமை) என்ற சொல் அமைவுற்றது,  பிற குடிப் பெண்ணைத் தனக்கென்று காத்துக்கொள்ளுதலே பிரேமை என்றாகிப்  பொருள் ஒருவாறு மாறிப் பின்னர் அது காதலென்ற (  மனவுணர்வுப் )  பொருண்மையைப் பெற்றது,  காவற் கருத்து மறைந்தது எனினும் சொல்லில் அது இன்னும் ஒளிந்துகொண்டிருக்கிறது.    பிற என்பது பிர என்று எழுத்துமாறி அதன்பின் ஈற்று அகரம் கெட்டு ஏமம் என்ற  சொல்லுடன் இணைந்து  பிரேமை என்ற சொல் அமைந்தது அறிக. ரகர றகர வேறுபாடின்றி சொற்கள் வழங்கிய காலமும் உண்டு. பின்னர் அவை குறைந்தன.

காதல்

காதல் என்ற சொல்லும் காத்துத் தனக்கென்று மேற்கொள்ளும் மனவுணர்வினையே குறித்ததென்பது காணின், பிரேமை என்பது அதே கருத்திலமைந்த சொல்லே என்பதை வலுப்படுத்துதல் காணலாம்.  காதல் என்பது காத்தல் என்பதன் தன்வினை வடிவமே எனினும் காலப்போக்கில் இதனைப் புலவரும் மக்களும் மறந்தனர் என்பது மிகத்தெளிவு.   இதே கா என்ற காத்தல் அடிப்படையில் எழுந்ததே காம், காம் + அம் = காமம் என்ற சொல்லும் (வடிவங்களும்) என்பதுணர்க.

தான் கண்டு காதலுற்ற பெண்ணைத் தனக்கென்று ஒதுக்கி மேற்கொள்ளும் செயல்பாடு உலகனைத்தும் காணப்படுதலின் தமிழ்ச்சொற்கள் மனித இயற்கையை ஒட்டிஎழுந்தவை என்பது உணரற்பாலதாகும்.

காவாலி

பயனற்றவற்றைப் பற்றித் திரிபவன் காவாலி.     கா -  காத்துக்கொள்ளுதல்.  வால் =  வால்போல் பின்செல்லுதல்.  காவாலி -  வேண்டாதன பின்பற்றிக் காத்துத் திரிபவன்.  காத்தலாவது விடாது பற்றி நிற்றல்.   இனிக் காவு + ஆல் + இ என்று பிரித்து -     காவு -  காத்தல்;  ஆல் -  விரிவாக அல்லது மிகுதியாக என்று பொருள்தரும் சொல்.  அகல் > ஆல் என்று திரியும்.   இ -  உடையனாதல் குறிக்கும் விகுதி.   ஆகக்  காவாலி எனினுமாம்.

கா என்ற அடியிற் பிறந்த சொற்கள் இன்னும் பல. சில பின் காண்போம்.


காமுகன் என்பது எவ்விதம் அமைந்தது?  இதில் முகம் என்பதென்ன ?

மேலும் அறிக:  https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_3.html

தட்டச்சுப்  பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.

(We are on self quatantine from Jan 2020. Pl take care. Coronavirus.)

கருத்துகள் இல்லை: