சனி, 21 மார்ச், 2020

சாஷ்டாங்கம் ‌ - சொல்

இன்று " சாஷ்டாங்கம்"   என்ற சொல் அறிவோம்.

இச்சொல்லின் முந்துவடிவத்தைக் கண்டு ஒப்பிடுவது  எளிதே ஆகும். இதை இவண் செய்து  மகிழ்வோம்.

அங்கத்தை முழுவதும் தரையில் சார்த்தி இறைவணக்கம் முதலியன இயற்றுதல்  "சாஷ்டாங்க"மாகும்.

சார்த்து அங்கம் >. சார்த்தாங்கம்> சாஷ்டாங்கம்   ஆயிற்று..

அதாவது  இஃது பூசைப் பொருள்கள் சார்த்துதல்போல் அங்கத்தைச்  சார்த்துவது.

சார்த்து என்பது பின் "சாத்து‌"  என்று
திரிந்தது.  பின்னர் அயல்சென்று    சாஷ்டா....>   சாஷ்டாங்கமாயிற்று. சாஷ்டாங்கம் வழக்குக்கு வந்த பின் சார்த்தாங்கம் இறந்தது

இவ்வாறு பின்வடிவம் வலுப்பட்டு நின்ற பின் முந்தையது  மூழ்கிப்போன இன்னொரு சொல்: கட்டம் (1)> கஷ்டம்.

கடு + அம் = கட்டம் > கஷ்டம்(1).  இனிக்   கட்டு + அம் = கட்டம்(2)  என்றுமாம். கஷ்டம்(1) என்ற சொல் செய்த பணி என்னவெனில்,  கட்டம்(2) என்பதனுடன்    ஏற்பட்ட பொருள்மயக்கு விலக்கியமை என்பர்.   சாஷ்டாங்கம்  என்பது இவ்வாறு ஒன்றும் உதவிற்றில்லை காண்க.

அங்கம் என்பது முதன்மை  (important)  உள்ளுறுப்புகள் யாவும் உள்ளடங்கிய உடல்.  அடங்கு>. அடங்கம்>    அங்கம் எனக் காண்க. இது  டகரம் ஒழிந்த இடைக்குறைச்சொல்.  இவ்வாறு புனைவுற்ற இன்னொரு சொல் :  கேடு + து =  கேது என்பது.    பெரிதும் கேடு விளைக்கும் கிரகம் அல்லது கோள்  என்பது இதன் பொருள். மற்றொன்று :  பீடு + மன் = பீமன்,  பீடுடைய மன்னன்.

ஒரு திரிந்த  துணுக்கும் ஓர் இடைக்குறைச் சொல்லும் கலந்த மயக்கமே சாஷ்டாங்கமாகும்.

தேய்ந்து அழிதக்கது தேகம்.  இது  தேய் + கு + அம் =  தேய்கம் என்றாகி யகர ஒற்று விலக்கித்  தேகம் என்றமைந்தது.   பேச்சு வழக்கில் திரேகம் என்றொரு சொல்லும் உள்ளது.  அது தோல் திரைந்து பின் அழிதல் என்னும் கருத்தில் அமைந்தது.   திரை+ ஏகு + அம் =  திரேகம்.  திரைந்த பின் ஏகிவிடுவது.  போய்விடுவது என்பதே ஏகு என்ற சொல்லால் உணர்த்தப்பட்டது.  இச்சொல்லமைப்பில் திரை என்ற சொல்லின் இறுதி ஐகாரம் கெட்டது.

நரை திரை மூப்பு மரணம் என்பது தமிழ்நாட்டினர் சொல்லும் முதுகருத்து ஆகும்.

ஒப்பீடு:

வாய்+ தி = வாய்த்தி >  வாத்தி > வாத்தியார் ( பணிவு அல்லது மரியாதைப் பன்மை.)  யகர ஒற்று ஒழிந்த சொல்.
அதுவேபோல்  தேய்கம் > தேகம் என்பதும்.

சாஷ்டாங்கம்:

எட்டு உறுப்புகள் தரைப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது என்பார் உளர்.

சா -  சாய்ந்து,
ட்டு    =   எட்டு   ( திரிபு:  அட்டு )
அங்க(ம்)   மகர ஒற்று விலக்கல்
ஆக சாட்டாங்க > சாஷ்டாங்க என்பது  என்பர்.

எட்டு உறுப்புகள் ஆவன: இரு கைகள் இரு முழங்கால் இரு தோள் மார்பு நெற்றி   ஆக எட்டு என்பர். அங்கம் என்பதில் தோளும் மார்பும் அடங்கிவிட்டன ஆகையால் இது பொருந்தவில்லை.  தோள் முழுமையாய்த் தரையிற் படுவதில்லை. இதனினும் உயிருக்கு வரும் தீமையை உடலுக்குச் சாட்டுதல் என்னும் கருத்துக் கூறி  சாட்டு + அங்கம் = சாட்டாங்கம் என்று புனைந்து  சாஷ்டாங்க என்று திரிப்பின் நல்ல விளக்கமாகுமே! இறைவணக்கத்துக்கு உண்டான புனைவு பின் பிற வணக்கங்களுக்கும் பரவிடில் வியப்பொன்றுமில்லை.



அறிக மகிழ்க.


இங்கு தட்டச்சுப் பிறழ்வுகள் இருப்பின்.
பின் சரிசெய்யப்படும்.

22.3.2020 failed to generate edit preview  .

கருத்துகள் இல்லை: