செவ்வாய், 3 மார்ச், 2020

கபிலர் என்னும் புலவர்பெயர்.

எப்பொருளாயினும் அதை ஒளிவு மறைவின்றி எடுத்துரைப்பதற்கு ஒரு திடமான மனம் வேண்டும்.   ஒளிவு மறைவு என்பதற்கு மற்றொரு சொல் "கட்பு"  என்பதாகும்.

கட்பு என்ற சொல் எப்படி அமைந்தது என்பதை முதலில் பார்க்கலாம்,

கள்ளம் என்ற சொல் எதையும் ஒளிப்பதையும் பொய்மையையும் குறிக்கும்.  கள்ளர் என்பது திருடர் என்றும் பொருள்படுவது.  இச்சொல் கருப்புநிறத்தவர் என்றும் பொருள்தரும்.  கள்ளி என்பது திருடி அல்லது மறைத்தவள் என்றும் குறிப்பதுடன் கள்ளிச்செடி, கள்ளிப்பலகை முதலியவையையும் குறிக்கும். இவற்றின் அடிச்சொல் கள் என்பதுதான்.  கள் ஒரு குடிதேறலையும் குறிக்கும்.

கள் என்பது அடிச்சொல் என்றோம்.  இச்சொல்லுடன் ஒரு "பு" விகுதியைச் சேர்த்தால்  கள்+பு =  கட்பு என்ற சொல் உருவாகின்றது.

ஒளிவு மறைவோ அல்லது தீய  பண்புகளோ இல்லாதவர்,  அல்லது எதையும் வெளிப்படையாக அணுகி ஆய்பவர்  என்று பொருள்தரும் ஒரு பெயரை அமைப்பதற்கு:

கட்பு + இலர்  =  கட்பிலர் என்ற சொல் அமையும்.

இச்சொல் மெய் நீக்கப்பட்டால்  அல்லது நாளடைவில் இடைக்குறைந்தால்

கபிலர் என்றாகிவிடும்.

கபிலர் என்ற சொல்லுக்குத் தமிழிலும் சங்கதத்திலும் வேறு பொருள்பல கூறலாம் எனினும் அவற்றை இன்னோர் இடுகையில் காணலாம்.

இடைக்குறைச்சொற்கள் பல ஆய்ந்து முன் கூறியுள்ளோம். பழைய இடுகைகள் காண்க.   நகுலன் என்ற பெயரும் நற்குலன் என்ற சொல்லின் இடைக்குறையாகி நற்பொருளே தரும். வல்லவர் என்ற சொல்லும் வலவர் என்று வருமே. பல்லோர் என்பதும் அர் விகுதி ஏற்குங்கால் பலர் என வருதல் கண்கூடன்றோ? இவையனைத்தும் நீங்கள் ஒப்பிட்டு அறிதற்கானவை.

இதைக் கபி -  குரங்கு  என்று பொருள்படும் சொல்லினடித் தோன்றியதாகக் கொண்டு பொருளுரைப்பாருமுண்டு.   அதையும் பின் காண்போம்,

கபிலர் என்ற பெயருள்ள புலவர்கள் தமிழ்நாட்டில் இருந்துள்ளனர்.    சங்கப்புலவர் கபிலர் என்பவர் பத்துப்பாட்டில் ஒன்றாகிய "குறிஞ்சிப்பாட்டு" பாடியுள்ளமையால் இப்பெயர் முதன்மை பெறுவதாகிறது.

தட்டச்சுப் பிழைகள் திருத்தம் பின்


கருத்துகள் இல்லை: