வெள்ளி, 23 ஜூன், 2017

குண்டலம் I - ( குளம் முதல் குண்டலம் வரை )

குண்டலம் என்ற சொல் நாடோறும் வழங்கும் சொல் அன்று என்றாலும் சில பழங்கதைகளில் இதை எதிர்கொள்ள நேரிடுகிறது. இது எங்ஙனம் அமைந்தது என்பதைக் காணுமுன் இதன் அடிச்சொல்லான "குண்டு" என்பதை நடுவணாக வைத்து நாம் நம் ஆய்வினை மேற்கொள்வது எளிதாகவிருக்கும் என்று எண்ணுகிறோம்.

குண்டு என்பது பல்பொருளொரு சொல். இதன் பொருளாவன: ஆண், ஆண்குதிரை, ஆழம், சிறு நிலம், தாழ்செயல், நிறைகல், குழி, குளம், விதை, முட்டை வடிவமாய்க் கனக்கும் பொருள் -- என்பன.


குண்டு என்னும் சொற்கு குளம் என்னும் பொருளும் இருப்பதை மேலே காணலாம். இது எப்படி
ஏற்படுகிறது என்று காண்போம்.

குள் என்பது அடிச்சொல்.

குள் + அம் (விகுதி) = குளம்.
குள் + து = குண்டு. ஒப்பு நோக்குக: கொள் + து= கொண்டு. (எச்ச வினை).
குள் + து + = குட்டை. "குளம் குட்டை".(இணைத் தொடர்).
குள் > குழி.
குழிதல், குழித்தல்.

குளத்தைக் குறிக்கும் குண்டு என்பதும் குள் என்ற அடியினின்றே தோன்றியதென்பது இதன் மூலமாக விளங்கும்.

குழிவான நீர் தங்குகின்ற இடத்தையே இதுகாறும் விளக்கினோம். இன்னும் இதன் வேறு பரிமாணங்களையும் காணவேண்டும். அவற்றை அடுத்துக் காண்போம்


தொடரும்.

கருத்துகள் இல்லை: