சனி, 24 ஜூன், 2017

குண்டலம் 2

குண்டலம் II

குள் என்ற அடிச்சொல் இன்னொரு பொருளையும்
தெரிவிப்பதும்  ஆகும். அது திரட்சிக் கருத்து.
உருண்டையாகத் திரண்டதும் குண்டு எனப்படும்.
இப்போது வெடிக்கும் எல்லாக் குண்டுகளும்
உருண்டு திரண்டனவாய் இருப்பதில்லை. சில
 நீட்டுருளையாகவும் கூர்முனையுடையனவாயும் 
உள்ளன.. என்றாலும் வெடிக்கும் தன்மை உடையன
 யாவுமே குண்டு என்றோ வெடிகுண்டு  என்றோ
குறிக்கப்பெறுகின்றன. இது ஒரு  பொருள்விரிவாக்கம் 
என்க.

பயங்கரவாதம், படையினர் மோதல் முதலிய பற்றிய
நாளிதழ்ச் செய்திகளில் சொல்லின் அடிப்படைக் 
கருத்தாகிய திரட்சி கருத்து மனத்தினின்று அகன்று 
வெடிப்பு என்பதே முன்னிலை பெறுவதால். இப்பொருள்
விரிவாக்கம் ஏற்படுகின்றதென்பது வெள்ளிடைமலை.

இனிச் சொல்லமைதல் எப்படியென்று காண்போம்.

குள் அடிச்சொல். திரட்சிக் கருத்தில்.

குள் + து = குண்டு. (திரட்சி.)

"தடி"யாக உள்ள பெண்ணை (தடிச்சி ) " குண்டுப்பாப்பா"
என்றும் குண்டாக இருக்கிறாள் என்றும் பேச்சு
வழக்கில் வருதல் காண்க.

குண்டு என்பது பெயர்முன் அடைமொழியாகவும் 
பயன்பெறும். -டு: "குண்டு மாரி"

வெடிமருந்து உள்ளடங்கு திரட்சியாகச் 
செய்யப்பட்டிருப்பதால்  வெடித்திரளை "குண்டு"
என்றனர்.

குண்டுவீச்சு = bombing

யப்பானியர் குண்டுவீச்சு என்பது வழக்கு.

இப்போது குண்டலம் என்ற சொல்லுக்குச் செல்வோம்.

காதணி, தோடு, குழை,  கடுக்கன், மஞ்சிகை என்று
பல்வேறு பெயர்களாலும் குறிக்கப்பெறுவது குண்டலம்.,

குண்டு + அல் + அம் = குண்டலம்.

இங்கு இரு விகுதிகள் உள.

அல் என்பதை இடைநிலையாகவும் அல்லது 
இடைநிலை விகுதியாகவும் அம் என்பதை 
இறுதிநிலையாகவும் விளக்கலாம். இருவிகுதிகள் 
பெற்ற சொற்கள் பல.எம் முன் இடுகைகள் காண்க.

இங்கு குறித்த நகைகள் யாவும் திரட்சியாக்கங்கள்
திரண்டு குண்டுபோலுமிருத்தலால் குண்டலம் 
ஆயின. இது  பொருத்தமான சொற்புனைவு ஆகும்.

வான், அல்லது காயமும் (ஆகாயமும்) புவியைச் 
சுற்றித் திரண்டிருத்தல்போல் தென்படுதலால்
இது ஆகாயத்துக்கும் பெயரானது. நிலவு, பகலோன் 
முதலியவை காயுமிடமே காயம் (ஆகாயம்
எனப்படுவது.


குள் என்னும் அடிப்பிறந்த சொற்கள் இன்னும் உள
இவற்றைப் பின்பு கண்டு இன்புறுவோம்.

கருத்துகள் இல்லை: