புதன், 21 ஜூன், 2017

பிரம்மை -ஆய்வு


பிரம்மை என்ற சொல்லை இப்போது ஆய்வு செய்வோம்.

ஒரு வித அறிவு மயக்கத்தில் இருக்கும் ஒருவனுக்கு, திடீரென்று அருகில் இன்னொரு மெய் அல்லது உடல் தோன்றி நிற்கிறது. அந்த மயக்குத் தெளிந்தவுடன் அம்மெய் மறைந்து போகிறது. இந்தப் பிற மெய்தான் பிற + மெய் = பிறமெய் ஆனது. இந்தப் பேச்சு வழக்குச் சொல்லை எடுத்து "பிறம்மெய்" > பிரம்மெய் என்ற சொல் உருவாக்கி மக்கள் மன்றத்திலே உலவு றுத்தப்பட்டது என்பது உணர்க.

ஒரு விடயத்தில் ( a thing)  சில உள்ளுறுப்புகள்  (factors)  இருக்கும். அந்த உறுப்புகள் அந்த விடயத்துக்கே உரியவையாய் இருக்கும். பெரும்பாலும் இத்தகைய நிகழ்வால் ஓர்  இடரும் தோன்றுவதில்லை. பிற பொருளின் உள்ளுறுப்பு  (external factor ) ஒன்று இவ்விடயத்தில் வந்து கலந்துவிட்டால் "பிற சினை" வந்துவிட்டது என்கிறோம். அதற்கு இனமல்லாத வேற்று உறுப்பு புகுந்து விட்டது. இதனால் "பிறச் சினை" ஏற்படுகிறது. அதுவே பிரச்சினை ஆகிறது. அதாவது பிற உறுப்பு வந்து இடர் விளைக்கிறது என்று பொருள். இதைப் பிரச்சினை என்பதை விட "பிறச்சினை" என்பதே உண்மை நிலை காட்டுவதாகும். இங்கும் அப்படியே வேறு இடுகையில் எழுதியுள்ளோம். இதில் இலக்கணப் புலவர் ஒரு மறுப்புத் தெரிவிக்கலாம். நடுவில் ஒரு சகர ஒற்றுத் தோன்றாது என்பதே மறுப்பு ஆகும். இது புதுச் சொல்லமைப்பு ஆதலின் இயல்பான புணர்ச்சி இலக்கணங்கள் இதற்கு ஏலாதவை என்று இம்மறுப்பைக் களைந்து விடுக.

இதைப் போலவே பிற மெய் எனற்பாலது பிரம்மை என மகர ஒற்றும் மிக்கு வந்து ஒரு புதிய சொல் அமைந்தது என்பது கண்டுகொள்க. இவை பேச்சு வழக்குச் சொல்லிலிருந்து கல்லி எடுக்கப்பட்டவையாதலின், மறுப்புகள் எழா.

பொய்ம்மெய் என்பதிலும் மெய் என்பது மை என்று திரிந்து பொம்மை ஆனதை மொழிநூலார் சுட்டியுள்ளனர்.

பெரு + மெய்  என்பதே  பிரம்மை என்றானது என்று  சிலர்  நினைப்பர் . பெரிய மெய் (உடல் ) முன் தோன்றுதல் -  எனினும் தமிழே    மூலம் .  



Tamil text editor could not render the author's  feed in   properly.

கருத்துகள் இல்லை: