புதன், 31 மே, 2017

முதிர்வு. முது > முத்து > முத்தி

நாம் ஏன் நெடுநாள் வாழவேண்டும்? அப்படி உலகில் என்ன இருக்கிறது?
நாள்தோறும் வேலைக்குப் போவது,  அது முடிந்து வீட்டுக்கு வருவது,
சாப்பிடுவது, குளிப்பது, உறங்குவது, மீண்டும் எழுந்து வேலை....இதில்
என்ன இருக்கிறது! ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

கடவுள் ஏன் சிலருக்கு நூறு வயதையும் வேறு சிலருக்கு ஆறுவயதையும்
கொடுத்திருக்கிறான்? இதுவும் தெரியவில்லையா.......?

மனிதன் இறைவனை உணரவேண்டும். சிலருக்கு இவ்வுணர்வு ஏற்படுவதே
இல்லை. ஏற்பட நாள் ‍~   காலம் தேவைப்படுகிறது. இந்தக் காலத்தை
அவனுக்கு அருளி, இறைவனை உணரச்செய்தால்தான்  அவன் முத்தி பெறுதல் கூடும். எனவே அவரவருக்கு வேண்டிய கால அளவினை
அவனே அருளுகின்றான். இறைவனை உணர்ந்தவன் நெடுநாள் இங்கு
திரியவேண்டுவதில்லை. ஆகவே இறைவன் அவனை  எடுத்துக்கொள்கிறான்.

இவன் எப்போது கடவுளை உணர்ந்தான்? ஒன்றுமே அறியாதவன் ஆயிற்றே
என்று நீங்கள் கருதலாம்.  அது உங்கள் கருத்து. இறைவன் அறிந்த அனைத்தும் நீங்களும் அறிந்திருக்கவேண்டும் என நீங்கள் நினைப்பது தப்பு.

சிலர் விளம்பரம் உடையவராக இருக்கலாம்.  உண்மை அறிவுக்கு விளம்பரம் ஒரு சான்று ஆகாது. அறிந்தோனாகப் பலரால் நினைக்கப்படுபவர் ஒன்றுமறியாதவராக இறைவனால் தரம் அறியப்பட்டிருக்கலாம் அன்றோ?

இறைவன்பால் யார் உண்மைக் காதலுடையாரென்பதை அவன் அறிவான்.
அந்தக் காதல் இறையுணர்வின் முதிர்வு ஆகும். முது > முத்து > முத்தி.
இது பின் முக்தி என்று அழகுபடுத்தப்பட்டது ஆகும்.

கருத்துகள் இல்லை: