செவ்வாய், 7 ஏப்ரல், 2015

வாசனின் வாச மங்கை a story

வாசன்  ஓர் கடின உழைப்பாளி.  இந்தியாவிலிருந்து  மலாயாவுக்கு ஜப்பான் போர்  தொடங்குமுன் வந்தவர். போர் முடிந்தபின் தன் சொந்தச் சிற்றூருக்குச் சென்று பார்த்தவருக்குப் பேரதிர்ச்சிதான் காத்திருந்தது. தான் அன்புடன் அணைத்து மகிழ்ந்த மனைவி இன்னொருவருடன் குடும்பம் பண்ணிக்கொண்டு இரண்டு பிள்ளைகளையும் பெற்றுக்கொண்டு மகிழ்வுடன் வழ்ந்துகொண்டிருந்தாள்

"நீ  மலாயாவில் ( இப்போது மலேசியா) குண்டுபட்டு இறந்துவிட்டதாகக் கேள்விப் பட்டுத்தான் அவன்  மறு புருசனை எடுத்துக்கொண்டாள். யாருடைய தவறும் இல்லை"  என்று ஊர்ப் பெரியவர்கள் சொல்லவே,  ஒரு தென்னை மரத்தடியில் இருந்து தனியே அழுதுவிட்டு,  அடுத்த கப்பலிலேயே ஏறி சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்.

நண்பர்கள் பரிந்துரையின் பேரில் நல்லவேளையாக அவருக்கு வெள்ளைக்காரனின் போர்க்கப்பல்களில் குழாய்கள் சீர்ப்படுத்தும் ஒரு வேலை கிடைத்தது. கொஞ்சம்  நல்ல சம்பளமும் கிடைத்தது.  கல்யாணமும் வேண்டாம் கத்திரிக்காயும் வேண்டாம் என்றிருந்த்தவர்,  அங்கு இருந்த மணிமேகலை சாப்பாட்டுக் கடையில் நல்ல இலைச் சாப்பாடு சாப்பிடுவதும்
பாய்போட்டு நன்றாக உறங்குவதும் வேலைக்குப்போவதுமாக இருந்தார்.

"இப்படியே இருந்துவிட்டால்  எப்படி இருக்கும் எதிர்காலம்?" என்றொரு கண்ணதாசன் பாட்டு வானொலியில் வருவதுண்டு.  அந்தப் பாட்டு வானொலியில் யார்செவியிலும் ஏறாத அந்தக்காலத்திலேயே வாசனின் நண்பர்கள் வாசனிடம் வந்து உரையாடும் போதெல்லாம் "இப்படியே இருந்துவிட்டால்  எப்படி இருக்கும் எதிர்காலம்?"  என்று துளை துளை என்று துளைக்கத் தொடங்கிவிட்டார்கள். யாரும் மகிழ்ச்சியாகக்  காலங்கழித்தால்  விடமாட்டார்களே!
வாசனும்  அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காதவராய் " இந்தப் பொம்பிளைகளே எனக்கு உதவாது.  தனியாகவே இருந்து செத்துப் போகிறேன் " என்று பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தார்.  விட்டுவிடுவார்களா ?
ஒரு நாள் அவரை ஒருவாறு மடக்கிப் பிடித்து  அந்தக் காலத்து "ஆஸ்டின்" வண்டிக்குள் போட்டு  மலாயாவில்   பாலோ என்னும் இடத்திற்குக் கொண்டு போனார்கள்.  
ஒரு பெண்ணைக் காட்டினார்கள்.  சிவந்த மேனி,  பலாப்பழம் நிறத்து உதடுகள் ,இவருக்கு ஏற்ற நல்ல  உயரம்,  பிறை போலும் நெற்றியில் வாள் போன்ற கண்கள், முத்துப்பல்  வரிசை .........யாரும் வேண்டாம் என்று ஒதுக்க முடியாத வாட்டசாட்டம்...
என்ன கட்டிக்கொள் ... என்றார்கள் நண்பர்கள்.  பெண்ணின் தகப்பனார், தாயார் உடன்பிறப்புகள் எல்லாம் வாசன் எப்படி வாய்மலர்ந்து எல்லோரையும் மகிழ்விப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்......பெண்ணுக்கும் வாசனைப் பிடிக்கத்தான் செய்தது.  சரி சொல்லமாட்டாரா என்று உள்ளே அறையில் கொஞ்சம் சரிந்தே படுத்துக்கொண்டிருந்தாள் பெண் .  அவருக்குக் காப்பி கலக்கிக் கொடுத்த போதே அவரை நன்றாகக் கவனித்துக்கொண்டாள்.

இரண்டாம்  பாகத்தில் தொடர்கிறது......

will edit as necessary later.


கருத்துகள் இல்லை: