மாலை வந்து மயக்கி இரவு வந்து இனிப்பை வழங்குகிறது என்று நம் தமிழ்க் கவிஞர் பாடுவர். இன்றைய உலகில் இரவு வந்ததும் வேலைக்குப் போகும் பெண்மணிகளும் ஆண்மக்களும் உள்ளபடியால் இவ்வமைப்புக்குள் இவர்கள் எங்ஙனம் உள்ளடங்குவர் என்று கேட்கக்கூடாது. அது கவிச்சுவை காணும் போக்கு அன்று.
இரவிலே வந்தான்
இன்ப சுகம் தந்து
மருவியே சென்றான் - அந்த
மாயக் கள்ளன் யார்?
என்று பெண் கேட்பது போலும் ஒரு பாடல் உண்டு. எப்படிப் பாடினாலும் தமிழ் இனிமையே தரும். யார் என்றது நீர் அறியீர் என் நெஞ்சுக்குள் உறைபவரை என்று அறிவித்தற்பொருட்டு. சொன்னால் புரிந்துவிடுமோ உமக்கு? என்றபடி. சென்றான் = காலையில் சென்றான் என்று கொண்டுகூட்டுதலில் தப்பில்லை.
காலை வந்துற்றதும் தலைவன் பிரியும் நேரம் அதுவேன்பது இலக்கிய வழக்கு. இதைக் கூறும் அள்ளூர் நன்முல்லையாரின் இன்னொரு சங்கப் பாடலை இப்போது பாடி மகிழ்ந்திடுவோம். "அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் " என்ற அவர்தம் பாடலைச் சின்னாட்களுக்குமுன் படித்து இன்புற்றோம் .
குக்கூ என்றது கோழி அதனெதிர்
துட்கு என்றன்று என் தூய நெஞ்சம்
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகல் வந்தன்றால் எனவே. குறுந் 157.
கோழி கூவினதும் தலைவிக்கு அச்சம் தோன்றிவிட்டது. "காலையே அதற்குள் ஏன் வந்தாய் ? என் செய்வேன்" என்று அஞ்சுவாளானாள்.
தோள் சேர்தல், தோள் தோய்தல் என்பவை எல்லாம் இப்போது திரையில் நாம் அடிக்கடி கேட்பவை. இலக்கியத்தில் இது இடக்கரடக்கல் என்னும் ஒரு முறையாகும்.
காதலியின் நெஞ்சமோ தூய்மையானது. தவறுதலாக ஏதும் நடந்துவிடவில்லை என்பது குறிப்பு. தோள்தோய் என்பது இனிமேல் மணமுடித்துத் தோள்சேர விருக்கும் (தலைவன்) என்று பொருள்தரும், முக்காலமும் உணர்த்தும் வினைத்தொகை இதுவென்றாலும், "தூய" என்றதனால் எதிர்காலத்தையே காட்டுவது.
துட்கு : அச்சம். இந்தக் காலையோ ஒரு வாளானதே! தமிழ் மொழியிறைவனாராகிய வள்ளுவனாரும் குறள் 334ல் வாளென்றே கூறினார்.. வைகல் = காலைப்பொழுது. வந்தன்று = வந்தது, அல்லது ; வந்துவிட்டது எனற்பொருட்டு. ஆல் என்பது அசை. வந்து+அன்+து = வந்தன்று; நாம் பேசும் "வந்தது" என்பதில் "அன்" இல்லை. அவ்வளவில் நிறு த் தி அதை எளிதாக உணரலாம். பகுதி விகுதி சந்தி இடை நிலை சாரியை என்று மூழ்கினால் படிப்போருக்குக் கடினமாகிவிடும். என்றன்று = என்றது.
எளிய இனிய பாடல் தந்த புலவர் நன்முல்லையாரைப் போற்றுவோம்.
குறிப்பு:
துள்+கு = துட்கு (அச்சம்)
துள் + (அ) +கு = துளக்கு. (துயர் ).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக