வெள்ளி, 10 மே, 2019

ஆனந்தம் மற்றொரு முடிபு

 
ஒரு பசு தமது ஆயின் அதுதான் ஆனந்தம். பழங்காலத் தமிழனின் தேவை, தலைக்கு மேல் ஒரு கூரை; வீட்டினருகில் காலையில் குடிப்பதற்குப் பால்தரும் ஒரு "பாலம்மை" --- சிவபெருமான் கிருபை வேண்டும்; மற்றென்ன வேண்டும்? அருந்தத் தருமொரு பாலம்மை வேண்டும்.

தமிழறிவாளர் வேலூர் க.. மகிழ்நன் ( 1935 வாக்கில் ) , பசுவைப் பாலம்மை என்றே பெயரிட்டு வழங்கினார். அவரே சங்க இலக்கியம் என்று திரு வி.க அவர்களால் புகழப்பட்டவர் அவர். சுண்டி இழுக்கும் தமிழ் நடை அவரது என்பதை அறிந்தோர் அறிவார்.

பாலம்மை ஒன்றிருந்தால் ----- இந்தப்
பாரினில் ஆமோர் ஆனந்தமே

என்று சிந்துபாடத் தோன்றுகிறது எமக்கு.

சொல்லாய்விலோ மொழி ஆய்விலோ ஈடுபடுவோன் உணர்ச்சி வயப்படுதல் ஏற்கத் தக்கதன்று என்பர் ஆய்வுகட்கு இலக்கணம் வகுத்தோர். உண்மைதான். ஆய்வு என்று வந்துவிட்டால் யாதொரு பாலும் கோடாமையும் நடுநிற்றலுமே ஆய்நெறி ஆமென்பதே பேருண்மை ஆம்.

இதனைக் கருத்தில் இருத்தியபடி ஆனந்தம் என்ற சொல்லின்பால் ஒரு மறுபார்வையைச் செலுத்துவோம்.

முன் வரைந்த இடுகையில் ஆனந்தம்:

ஆன் + அம் + தம்.

ஆன் = பசு. அம் = அழகே ஆகும்; தம் = தமதானால்.

தம் : து அம் விகுதிகள் எனினுமாம்.

ஆனென்பது அடுத்தவீட்டிலிருந்தால் கேட்டு வாங்கிப் பால் குடிப்பது அவ்வளவு பெருமைக் குரியதாகாது. தமக்கென்று ஆனொன்று இருப்பதே ஆனந்தம்.

இறையுணர்வினால் தோன்றும் உள்ளானந்தம் என்பது பிற்கால வளர்நிலை ஆகும்.


இனி ஆனந்தம் என்பது வேரொரு வழியிலும் அறிதற்குரித்தாகிறது:

+ நன்று + அம் > + நந்து + அம் = ஆனந்தம்.

ஆக நன்றான நிலைமை ஆனந்தம்.

இதில் வரும் ஆ என்ற முன்னொட்டு ஆகாயம் என்பதில் போல வந்தது.

காயம் என்பது பழைய தமிழ்ச் சொல். நிலா சூரியன் முதலிய காய்கின்ற வான்வெளி என்பது பொருள். காய் > காயம். இது காசமென்றும் திரிவது.

இது ஆக்கம் குறிக்கும் ஆ என்ற முன்னொட்டுப் பெற்றது. ஆகாயம் ஆனது போல் இங்கும் ஆனந்தம் வந்தது.

இனி :

நன்று என்பது நந்து ஆனது எப்படி? 0ன் து > ந்து.

பின் + து = பிந்து; பிந்துதல்.
முன் + து = முந்து; முந்துதல்.

மன் + திறம் = மன் + திரம் = மந்திரம் ( மன்னுதல் = நிலைபெறுதல் ). நன்மையை நிலைபெறச் செய்தல் மந்திரத்தில் நோக்கம்).

இயல் + திறம் > இயன் திரம் > இயந்திரம். { 0ன் + தி = ந்தி }

இம்முறை பின்பற்றி :

நன்று > நன் + து > நந்து.

நன்று என்பது உண்மையில் நல் து என்பதுதான் எனினும் இங்கு நல் என்ற அடியை எடுத்துக்கொள்ளாமல் நன் என்ற புணர்வடிவையே மேற்கொண்டனர் என்று அறிக.

நல் > நன் என்பது திரிபிலும் வரும் : எடுத்துக்காட்டு: திறல் > திறன்.

நன் என்பது திரிபு வடிவமும் ஆகும்.


இயல் திறன் என்பதை இயற்றிரம் என்று வல்லெழுத்துப் புணர்த்துக் சொல்லமைத்தல் கைவிடப்பட்ட உத்தி. அது எப்படியும் பேச்சு வழக்கில் இயத்திரம் என்றே வரும். அதை மெலிக்கும் வழி மெலித்து இயந்திரம் என்றதே மொழியில் ஆற்றொழுக்கு மென்னடைக்கு ஏற்றதென்பதை இப்புலவர்கள் அறிந்திருந்தனர். இலக்கணம் செவியினிமைக்கு வழிவிடுதல் இன்றியமையாதது காண்க.

முன் எழுதிய இடுகை காண்க.

https://sivamaalaa.blogspot.com/2014/03/blog-post_16.html







கருத்துகள் இல்லை: