சனி, 17 மார்ச், 2018

டப்பா டப்பி அமைப்பும் பொருளும்



இடப்பி.  டப்பி, டப் பா.

இப்போது டப்பா என்ற சொல்லையும் அதன் பல்வேறு பரிமாணங்களையும் சற்று சிந்திப்போம்.
இதை பல்லாண்டுகட்கு முன்னே சிந்தித்து எழுதியதுண்டு.  அவை இப்போது இங்கில்லை யாகையால் நீங்கள் அறிந்துகொள்ள இயலாது. அதை மீண்டும் பதிவிடுவோம்.

சில மருந்துகள் கட்டிகளாக இல்லாமலும் நீர்போல அல்லது சாறுபோல இல்லாமலும் குழம்பாக இருக்கும். நீண்ட நாட்கள் சென்றபின் தான் கட்டிப்படும்.

கட்டி என்ற சொல் நீங்கள் அறிந்ததுதான். கடுமை உடையது கட்டி. கடு+ =கட்டி என, டகரம் இரட்டித்தது. 

குழம்புகளை களிம்புகள் என்பர்.  உருகும் தன்மை உடையவற்றை மெழுகு என்றும் சொல்வதுண்டு.  -டு:  தசலவணமெழுகு. மாத்திரைகள் சிறு கட்டிகள். கோரோசனை மாத்திரை மாதிரி.

இந்தக் களிம்புகளை சிறு டப்பிகளில் வைப்பார்கள். அப்போதுதான் வாங்குவோருக்கு எளிதில் பகிர்வு செய்ய இயலும்.  நெகிழிப்பட்டை போலும்  எடுப்பான்பட்டையால் அளவாக வாரி டப்பியில் வைப்பார்கள்.

அப்பி இட்டு வைப்பார்கள்.  இடு+ அப்பி = இடப்பி என்று வந்தது. நாளடைவில் இகரம் வீண்நீட்டாகத் தோன்றியதால் அல்லது முயற்சிச்சிக்கனம் காரணமாக, இது டப்பி என்று வழங்கியது. டப்பி  பின்பு டப்பா ஆனது.  அதுபின் dabba  ஆனது.

ஒரே சொல் பல தோற்றரவுகளை ( அவதாரங்களை)  எடுப்பது  மொழியியல்பு ஆகும்.  இயன்மொழி எனப் புகழப்பட்ட தமிழிலும் திரிசொற்கள் எண்ணிறந்தன ஆகும்.  ஆகவே இடப்பி என்பது எப்போதுடப்என்று மாறுகிறதோ அதை நாம் ஆங்கிலமொழிக்கோ மலாய்மொழிக்கோ தானமாக வழங்கிவிடலாம். டாங் என்று மாறினால் சீனமொழிக்கு வழங்கி ஆனந்தம் அடையலாம். டபஸ் என்று மாறினால் இலத்தீனுக்குத் தாரைவார்க்கலாம்.  ஈத்துவக்கும் இன்பமே பேரின்பம் ஆகும். எதையும் இல்லை என்னாது வழங்கியோன் தமிழன். கொடுக்கக் கொடுக்கக் குறையாதவை சொற்கள் மட்டும்தான் என்று தெரிகிறது.  கொடுத்தால் இங்குமிருக்கும்; அங்குமிருக்கும்.  கவலை இல்லை.

திராவிட மொழிகள் 77, அவற்றில் சில அழிந்தன, பல எழுத்தில்லாதவை என்று ஒரு மொழியாய்வாளர் ஆய்வு செய்து முடித்திருந்தார்.  பலுச்சித்தானத்திலும் திராவிடமொழி வழங்குகிறது.  திரிபுகளே உருவாகவில்லையென்றால் மிழ் இப்படிச் சிறித் திரிபுகளை அடைந்திருக்க மாட்டாதன்றோ? திரிபுக் குவைகள் தனிமொழிகளாய் இலங்குகின்றன. இஃது நமக்குப் பெருமிதமே.

இடப்பி என்பது Reverse formation. “அப்பியிடம்”  என்றமையாமல் இடுஅப்பி என்று மறுதலையமைப்பாக ஆயிற்று. இப்படிப் பல சொற்கள் உள்ளன. தாய்க்குப் பின் வருவோன் தந்தை.  தாபி என்ற அமைந்தால் தாயின்பின் என்று காணலாம்.  பிதா என்று மறுதலையாக அமைத்தது புதுமைவேட்டல் ஆகும்.  அம்மாவின் கடையாகிய மாவையும் தாயின் முதலாகிய தாவையும் இணைத்து மா-தா என்றது
இருமைவேட்டல்.  ஏன்?  தாய் என்னும் கருத்தே இரட்டித்துத் தாயின் மேன்மையைப் பறைசாற்றியது.

மகிழ்வு காண்க.

வியாக்கியானம்



வியாக்கியானம் என்ற சொல்லைப்பற்றி இன்று உரையாடுவோம்.

உரையாடுமுன், இது சமஸ்கிருத வழக்குடைய சொல் என்பதை யாம் தெரிவிக்கவேண்டியதில்லை.  வியாக்கியானம் எனின் விளக்கம். தெரிந்திருக்க வாய்ப்பில்லாத ஒரு சொல்லைப் பயன்படுத்தி அதை வழக்குக்குக் கொணர்வோம் என்னும் நோக்கில் திகழ்த்துதல் என்ற சொல்லையும் சென்ற இடுகையில் புழங்கியிருந்தோம். இவ்வளவு விரைவில் அதை மறந்திருக்க மாட்டீர்கள் என்னும் துணிபுடையேம்.

வியன் என்பது ஒரு தமிழ்ச்சொல். “விரிநீர் வியனுலகத்துள் நின்று உடற்றும் பசி “ என்ற திருக்குறள் தொடரை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.  வியன் என்றால் அகன்ற, விரிந்த என்று பொருள்.  குறளின் கருத்துப்படி இவ்வுலகின் கடல்களும் மிக விரிவானவை.  ஆகவே விரிநீர் என்றார்.  உலகம் கடலை உள்ளடக்கியது; எனினும் அதுவும் மிக்க விரிந்ததே என்னும் பொருளில் வியனுலகு என்றார் ஐயன் வள்ளுவனார். ஆக விய என்ற அடிச்சொல்லை மறக்கலாகுமோ?

பெரும்பாலான பாம்புகள் மூன்றடி நான்`கடியே உள்ளனவென்றால் நீங்கள் 20 அடி நீட்டப்பாம்பைப் பார்த்ததாக்ச் சொன்னால் அதைப் பலரும் வியப்பாகவே கேட்பர்,  கேட்கும் அல்லது நடக்கும் நிலைக்குத் தக்கபடி, பெரிது என்றால் வியப்பர் அல்லரோ?

இப்போது விய > வியப்பு என்பதன் பொருள் உங்களுக்கு வெட்டவெளிச்சமாகியிருக்கும்.

விய > வியன்.
விய > வியப்பு

எனவே இது விரிதற் கருத்து என்பதைப் புரிந்துகொண்டிருக்கலாம்.

விய > வியா என்று நீளும்.

ஒரு கடை ஓரிடத்திலிருந்து செயல்படாமல்,  நடமாடும் கடையாக இந்த ஊர், அந்த ஊர், அதற்கடுத்த ஊர் என்று விரிவாக விற்றல் செய்யப்பட்டால் அதுதான் முன்னாளில் வியாபாரம்.   வியா= விரிவு.  பர+அம் = பாரம் ஆகும். பரந்து செல்லுதல். இது பளு என்றும் பயன்படும்.   பார் என்ற உலகு குறிக்கும் சொல்லும் பரந்ததாகிய பூமி என்று போருள்படுவதே. பரந்து விரிந்து செய்யப்படும் வணிகத்தை வியாபாரம் என்றாலும், நாளடைவில் சொற்பொருளை மறந்து, ஓரிடத்திலேயே செய்யப்பெறும் வணிகத்துக்கும் வியாபாரம் என்றே சொன்னபடியால் அச்சொல் அதன் சிறப்புப் பொருளை இழந்ததுடன், அது நம்ம வீட்டுப் பிள்ளை என்ற உணர்வு மாறி அடுத்தவீட்டுப் பிள்ளைபோலும் கருதப்பட்டதும் உண்மையாகும்.

உடலுக்குள் உள்ள நீர் உள்ளேயே இருக்காமல் வெப்பத்தின் காரணமாக் வெளிப்பட்டு தோலின் மேற்பரப்பில் பரவுமானால் அது வியர்வை ஆகிறது.  விய என்பதை மறக்கலாகுமோ?

தக்கபொருள் எங்கும் பரவுமானால் பயன்படலாம். பால்போன்றவை தரையில் ஒழுகிப் பரவுமானால் எப்படிக் குடிப்பது?  சில பொருள் இருக்குமிடத்தில் இருந்தாலே பயன்.  பரவினால் பயனில்லை. பெண்ணும் ஓரிடத்து அடக்கமாய் இருந்தால் அது பயன். அது தவறினால் பயன் கேடு.  ஆகவே விய> வியர்க்கம் என்ற சொல்லும் பயனின்மையைக் குறித்தது.

இனித் திறன் என்பது திறல் என்று வருதல்போலவே வியன் என்பது வியல் என்றும் தோன்றும்.  கண்டு மலைப்புறாதீர். அங்குமிங்கும் ஓடி வேலைசெய்வோன் வியலன்; பயணம் போவோனும் வியலன்.  வியல் என்ற சொல் பகுதியாதல் அறிக.

விர்> விய் > விய> வியா;  விய் > வியல் > வியன்.

விர்> விரி.

இனி வியாக்கியானம் காண்போம்.
விய ஆக்கிய ஆன் அம்.    ஆன் இடைநிலை, ஆன என்பதன் இடுதிரிபு.

மீண்டும் சந்திப்போம். அளவளாவுவோம்.

Beware of extra dots inserted by
this software. Pl read cautiously.
Will edit.

This post  has been hacked.  We have corrected the induced errors found in 
the text. Please report if they reappear or  are re-induced.

If a post can be hacked, then it has "bitten".







வெள்ளி, 16 மார்ச், 2018

வாத்திய ஒலிகளும் வணிக இலாபங்களும்



மலாய் மொழியில் “உந்தோங்”  என்றால் இலாபம்,  வருமானம் என்று பொருள். எப்போதாவது இலாபம்  என்று சொல்லவேண்டுமானால் “கடாங் கடாங்” என்பதையும் இணைத்துக்  “கடாங்  கடாங் உந்தோங்க்”  என்று சொல்லவேண்டும்.  இல்லை என்பதற்கு  “தா” (ஜாவாவில் ங்கா ) என்பார்கள். எனவே இலாபம் இல்லை என்று சொல்ல வேண்டுமானால் “தா உந்தோங்” என்று சொல்லலாம்.

சீனர்கள் முக்கிய விழாக்களில் சீனப் பறைகளை வாசிப்பார்கள். பெரிய நிலை மத்தளமும் கொட்டுவார்கள்.  அவர்கள் இவற்றை வாசிக்கும்போது எழும் ஒலி கேட்பதற்கு நன்றாக இருக்கும்.  அது பெரும்பாலும் “உந்தோங்க்  உந்தோங்க் உந்தோங்க்”  என்று ஒலிக்கும்.  இந்த ஒலியை மலாய் மொழியில் பொருள்கூறுவதானால்  இலாபம் இலாபம் இலாபம் என்றுதான் சொல்லவேண்டும்,   பெரும்பாலும் கடைகள் தொழில்கள் நடத்துபவர்கள் ஆதலால்  அவர்கள் வாசிப்பதுபோலவே தொழிலிலும் அவர்களுக்கு எப்போதும் இலாபமாகவே இருக்கும் என்பது அவர்களைக் கவனிப்பவர்கள் உணர்ந்து சொல்லும் ஒரு விடயம் ஆகும்.

இந்தியர்களும் தம் நிகழ்வுகளில் தம் வாத்தியங்களை இயக்குவார்கள். இவர்கள் வாசிக்கும் தவில், மத்தளம் மதங்கம் போன்றவை  “கடாங்  கடாங் உந்தோங்க்” “கடாங்  கடாங் உந்தோங்க்”  என்றுதான் ஒலிக்குமாம்,  இந்தியர்களுக்கு எப்போதும் இலாபமாக இல்லாமல் எப்போதாவது இலாபம் கிட்டி மகிழ்வார்களாம்.  தொழில்துறையில் அவர்கள் இரண்டாவதாக இருக்கிறார்கள். அவர்கள் வாசிக்கும் வாத்தியங்கள் அவர்களின் தொழில் நிலையை பிறருக்கு எடுத்துக்கூறுவதுபோல் அமைந்துவிடுகிறது.

மலாய்க்கார்ர்கள் பெரும்பாலும் வணிகத்தில் ஈடுபடுவதில்லை.  அப்படி அத்துறையில் நுழைந்து முயலும்போது இலாபம் காண்பதுமில்லை. அவர்கள் விழாக்களில் வாசிக்கும் வாத்தியங்களில் அடிப்பதும் “தா உந்தோங்” “தா உந்தோங்” என்றுதான் அடிப்பார்களாம்.  இலாபம் இல்லை இலாபம் இல்லை என்று சொல்வதுபோல் அவர்களின் வாத்தியங்களும் அமைந்துவிடுமாம்.

இவை எல்லாம் முற்றிலும் உண்மை என்று சொல்வதற்கில்லை.  ஒவ்வோர் இனத்தவரின் வாத்திய ஒலியையும் அவர்கள் வணிக இலாப நட்ட நிலைகளையும் கூர்ந்து கவனித்த யாரோ இப்படி ஒரு கதையைச் சோடித்து இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். மனிதனின் மூளை இப்படியெல்லாம் கிண்டல்களை உருவாக்குகிறது என்பது இதிலிருந்து உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

வாத்தியங்களின் சந்தத்தைப் பொறுத்தவரை ஒலிப்பு வருணனை உண்மைதான்.  இலாபம் என்பது நமக்குத் தெரியாதவை.  மலாய்க்காரர்கள் இப்போதுதான் தொழில்துறைகளில் ஈடுபாடு காட்டுகிறார்கள். சீனர்களே இதில் முன்னோடிகள் ஆவர்.


வடசொற்கிளவி



வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.    5

என்று தொல்காப்பிய நூற்பா கூறுகிறது.  இருப்பினும்
இதற்கு பல்வேறு  திகழ்த்தல்கள் (வியாக்கியானங்கள் )
விரிக்கப்பட்டுள்ளன.

இதை   ஓர் எளிதான முறையில் இப்போது அறிந்து
இன்புறுவோம்.

எது வடசொல் என்பது பெரிய ஆய்வுக்குரியது.  
எடுத்துக்காட்டாக, கஷ்டம் என்ற சொல் வடசொல்
என்று சொல்வர்.  இதற்குக் காரணம் சொல்லில்
"ஷ்" வருகிறது.  அது வடசொல் என்பதற்கு 
வேறு ஆதாரங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் 
துணிந்து வடசொல் என்பர்.

அது வடசொல்லாக இருக்கட்டும். தொல்காப்பியம்
கூறுவது என்னவென்றால், இந்த வடசொல்லை 
எடுத்து அங்குள்ள வட எழுத்தை எடுத்துவிட்டால்
அது மிச்சமுள்ள எழுத்துக்களுடனும் இன்னும்
புணர்ந்த எழுத்துக்களுடனும் தமிழ்ச்சொல் ஆகிவிடும்
என்பது.

இப்போது கஷ்டம் என்பதை எடுப்போம்.
அதிலுள்ள ஷ் என்ற வட எழுத்தை விலக்குவோம்.
ஆக, கஷ்டம் >  கடம் ஆகிவிட்டது.

இதில் ஓர் எழுத்தைப் புணர்த்த வேண்டும்.

கடம் > கட்டம் ஆகிவிடும்.

கடம்,  கட்டம் இரண்டும் தமிழ்தான்.

கடு+ அம் =  கடம்.   (குடம் - கடம் என்பது
இருக்கட்டும்,)

கடு+ அம் =  கட்டம்,

இரண்டும் கடு( கடுமை)  என்ற சொல்லினின்று
பிறப்பன ஆகும்.

ஆகவே அவை இரண்டும் தமிழே.

எந்த வட எழுத்து உள்ள சொல்லை எடுத்தாலும்
அந்த எழுத்தைப் பின்னிழுக்க, அது தமிழ்ச்சொல்
ஆகிவிடும்.

இதை இன்னும் ஆராய்வோம்,

23




தமிழும் திரிசொற்களும்

திரிசொற்களே இல்லாத மொழி உலகில் எங்காவது
வழங்குகிறதா என்று தேடிப்பார்க்கவேண்டும்.

தமிழைப் பொறுத்தவரை, தமிழில் இயற்சொற்களும்
திரிசொற்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
திரிசொற்களே வேண்டாமென்று சொல்வதானால்
மொழியில் பாதியை வேண்டாமென்று விலக்கி
வைத்தது போலாகிவிடும். மொழியில் இயல்பான
 இயக்கம் பாதிக்கப் பட்டு பொருளறிவித்தலில்
தடைகள் ஏற்படலாம்.

ஒரு பொருள் குறித்த வேறு சொல் ஆகியும்
வேறு பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும்
இரு பாற்று என்ப திரிசொல் கிளவி.
3
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி.
4
(தொல். சொல்லதிகாரம். எச்சவியல் )

இயற்சொல் என்பது :  சொல்லமைப்புப் பொருளும்
வழக்கில் உ:ள்ள பொருளும் வேறுபடாமல்
இருந்தாலே அது இயற்சொல். வழக்கில் அதன்
பொருள் திரிந்துவிட்டாலோ சொல்
திரிந்துவிட்டாலோ அது இயற்சொல் ஆகாது.
அது திரிசொல்.

தேவடியாள் என்பது கடவுளின் அடியவள் என்று
பொருளுடையது.  ஆனால் வழக்கிலும் அதே
பொருளானால் இயற்சொல். இல்லையானால்
திரிசொல். வழக்கில் அது விலைமகள் என்று
பொருள்தருகிறது. ஆகவே அது திரிசொல்.


நீங்கள் ஒரு குறிப்புப் புத்தகம் தொடங்கி,
பல தலைப்புகளில் சொற்களைச் சேகரித்துக்
கொள்ளுங்கள். பின்னர் அவற்றை
மறுபார்வை செய்து, ஓரிரண்டு
தெரிவியல்களையாவது கண்டு
விளக்கலாம். இந்திய மொழிகளில் ஐரோப்பியச்
சொற்களுடன் ஒலியொற்றுமையுடைய
சொற்களைக் கண்டு,  இவற்றைக்
கொண்டு: ஆரியர்கள் இந்தியாவிற்குள்
நுழைந்தனர் என்ற கொள்கையை உருவாக்கியது
போல நீங்களும் சில தெரிவியல்களை
உருவாக்கலாம்.

உங்கள் தெரிவியல்களை உலகம் ஏற்காமற்
 போய்விட்டால் அதனால் நட்டமொன்றுமில்லை.
உங்கள் வேலையினால் உங்களுக்கு ஏற்பட்ட
வெற்றி உங்களுக்கு மனமகிழ்ச்சியை
அளிக்கும்.  அதுவே பொன்னாகும்.

இன்று சில மெய்கள் மறைந்தனவால்
திரிந்துவிட்ட சொற்களை
ஒரு சிறு பட்டியலில் அமைத்துமகிழ்வோம்.

இவை பெரும்பாலும் சொல்லுரு மாற்றம்.
பொருள்திரிபு உள்ளவையும் இருக்கலாம்.

வாழ்த்தியம் >  வாத்தியம்.
தாழ்மதி >  தாமதி.
தாழ்வணி >  தாவணி.
கேழ்வரகு > கேவர்
வாழ்க்கைப்படு > வாக்கப்படு!
பெய்தி > பேதி.  ( மலம் ஓழுங்குடன் கழிக்காமல்
நீராய்  எருவாயாற் பெய்தல்)
செய்தி > சேதி.
தேய்கம் > தேகம் (  தேய்ந்தழியும் உடல்)
செய்வை> சேவை.
உய்த்தி > உத்தி.
வாய்த்தி > வாத்தியார்.  ( வாய்ப்பாடம் சொல்பவர்)
வேய்சி > வேசி.   ( அணிகளும் உடையும்
வேய்ந்து  மயக்குபவள்)
தாய்தி > தாதி.
ஓய்சனை> ஓசனை > யோசனை.
( ஓய்ந்து சிந்தித்தல்)
செய்வகன் > சேவகன்.
வாய்ந்தி > வாந்தி.  ( வாய்மூலம் திரும்பி
வருதல்)
வேய்ந்தன் > வேந்தன்.
சாய்க்கடை >  சாக்கடை.
தாழ்ப்பாள் > தாப்பாள்
சாய்த்தியம் > சாத்தியம்
( வெற்றிகரமாய்ச் சாய்த்தல்)
சேர்மி > சேர்மித்தல் > சேமித்தல்.
நேர்மி > நேர்மித்தல் > நேமித்தல்.  ( நியமித்தல் வேறு)
தீர்வு > தீவு ( நீரால் தீரச் சூழப்பட்ட நிலம்)
பாழ்: > பாழ்வு> பாழ்வம் > பாவம்



இன்னும் :

விழுபூசி > விபூதி.  (விழுமிய பூசுதல்)  த-ச போலி
விழுபற்று >  விபத்து.
( வீழ்ச்சி பற்றுதல் அல்லது அடைதல்)

எம் இடுகைகளிலிருந்து கிடைப்பன இன்னும் பல.

வியாழன், 15 மார்ச், 2018

மொழியில் துணைவினைகள்:





ஒரு மலையாளி இன்னொருவருவருடன் மலையாள மொழியில் உரையாடிக் கொண்டிருந்தார்.  அப்போது முதலாமவர்  ஓடிக்களை என்றார். இரண்டாமவர் இந்தச் சொல்லைப் பிடித்துக்கொண்டு: ஓடாம். பின்ன களையின்னது எங்ஙன என்றார்.  இதற்கு என்ன பொருளென்றால்:  ஓடலாம்; எப்படி வீசுவது ? என்பதுதான்.

களை என்றால் வீசுவது, எறிவது என்று பொருள். இந்தச் சொல் தமிழிலும் வழங்குவதுதான்.  ஆனால் வாக்கியத்தில் இப்படிப் பயன்படுத்துவதில்லை.
அரசியலில் அநாகரிகத்தைக் களைந்திடுவோம் என்று ஒரு சொற்பொழிவாளர் பேசுவார்.   ஒரு வேண்டாத செய்கையாளனைக் குறிப்பிட்டு:  இதுபோன்ற புல்லுருவிகளைக் களையெடுக்கவேண்டும் என்பார்.  வயலில் களைக்கொட்டு ஒடிஞ்சி மெனக்கெட்டுப் போச்சு என்பார் ஒருவர் . களை என்ற சொல்லும் அவ்வப்போது பயன்பாட்டி;ல் வருவதுதான்.

ஆனால் ஓடிக்களை என்பதில் களை என்பது வீசி எறிவது என்பது பொருளன்று.  ஓடுகின்ற செயலை விரைவாகச் செய்து முடித்துவிடு என்று பொருள்.  ஓடிக்கொண்டிரு என்பதற்கு எதிரான வினைவகை அதுவாகும்.

களை என்பதுபோலும் சொற்கள் வினைமுற்றுக்களில் துணைவினையாக வருகின்றன.

ஓடிவிடு; என்று சொல்லும்போது விடு என்பதற்குத் தனிப்பொருள் இல்லை.
அது ஓடுகின்ற செயலை விரைந்து முற்றுப்பெறும்படி செய் என்று பொருள்தரும்.

எனவே அது ஒரு துணைவினையாக வந்து ஓடிவிடு என்ற வினைமுற்றின் ஆற்றலை மிகுத்து முடித்துவைக்கிறது.

செய்திடுவோம்.  பாடிடுவோம் கூடிடுவோம் என்பவற்றில் இடு என்பதும் ஒரு துணைவினையே.

சென்றொழி,   வந்தொழி,  கண்டொழி என்று பண்டை நாட்களில் பேசும் பழக்கம் இருந்திருக்கிறது.  இவற்றுக்கு: சென்றுவிடு, வந்துவிடு. கண்டுவிடு என்று இக்காலத்தில் பொருள்கொள்ளவேண்டும்.  ஒழித்தல். விடுதல் என்பன துணைவினைகளே.  பெரும்பாலும் தனிப்பொருள் இல்லை.

பொருட்சிறப்பு இருக்குமாயின் இவைபோலும் துணைவினைகட்குத் தனிப்பொருள் தரலாம்.

ஓடிக்களை என்பதில் எதைக் களைவது என்று கேட்டுவிட்டால் அதிலும் ஓர் இடர் பிறந்துவிடுகிறது.

அறிந்து மகிழ்வீர்.