வியாழன், 5 அக்டோபர், 2017

தோழனுக்கு மறுபெயர் - "சாரகன் "


தோழனுக்குப் பல மாற்றுச் சொற்கள் தமிழில் கிடைக்கும்.   எடுத்துக்காட்டு:  நண்பன். கூட்டாளி.

உங்கள் அகத்தில் சார்ந்திருப்பவன் உங்கள் நண்பன். உங்கள் மனம் அவனை விரும்புகிறது. அதனாலே அவன் உங்கள் தோழனானான்.

ஓர் இல்லத்தரசியுடன் பேசிக்கொண்டிருந்தேன். இவர் கணவர்,  இவர்  சொல்வதைக் கொஞ்சமும் கேட்க மாட்டாராம்.  “ உன்னைவிட நான் என் தோழனையே விரும்புகிறேன்” என்பாராம். தோழன் வாங்கிய கடன் வெள்ளி ஐம்பதினாயிரத்துக்கு இவர்  வங்கியிடம் பிணையாக நின்றார்.  சில மாதங்களில் தோழன் கடன் தவணைகளைக் கட்டமுடியாமல் திணறி, இறுதியில் நொடித்துப்போய் வேலையும் இழந்துவிட்டதால், வங்கி இவரைப் பின் தொடர்ந்தது.  இவரும் கொஞ்சம் தவணைகளைக் கட்டிப்பார்த்தார்.  இவரும் வேலையிழக்க,  வழக்கு நடைபெற்றது.  எல்லாக் கடனையும் இவரே  கட்டவேண்டுமென நீதிமன்றம் தீர்ப்புவழங்க,  இவர் அதிர்ந்துபோனார்.  

இதற்கிடையில் இவரது தோழன் கொஞ்சம் பணம் சம்பாதித்தாரென்றாலும் கடனைத் தம்மால் கட்ட முடியாது என்று கைவிரித்துவிட்டார். இப்போது இந்த இல்லத்தரசிதான் கடனைச் சமாளித்துக்கொண்டு, குடும்பத்தையும் கவனித்துக்கொள்கிறார் என்று தெரிகிறது.  இங்கு கூறப்பட்ட நபர் தோழனை மிகவும் விரும்பி மண்ணாய்ப் போனவர்.  இது எதைக் காட்டுகிறது என்றால், தோழன் என்போன் ஒருவனின் அகத்தைச் சார்ந்து நிற்பவன். அகம் என்பது மனம். எனவே “சார்  அகன் “  என்ற சொற்புனைவு சிறப்பானது.   தோழனுக்குச் “சாரகன்” நல்ல மாற்றுச் சொல் என்பதை இதன்மூலம் உணரலாம். 

குதிரைப்பாகன் குதிரையைச் சார்ந்திருப்பவன். இச்சொல் அவனுக்கும் வழங்கும். 

(திருத்தம் வேண்டின் - பின்பு. )

அறிக மகிழ்க.

சிலதிருத்தங்கள் :  25012022 1715
மற்பார்வை பின்னர்.



தீபாவளிச் சேலை



தீபாவளி வருமுன்பே தீபஒளி  காண
சேலைக்கடை ஒன்றினுகுச் சென்றிடுக,  பேணும்
ஆபவனி கண்டுமகிழ்ந் தணியழகு கூர்ந்தே
அயர்வென்ப  தடையாமல் அகமகிழ்வீர் ஆர்ந்தே.
கணவர்குறை காசெனவே கசடு பறைந்  தாலும்
கசக்கியெடு கரந்துளதைக் கறந்திடுஇந்  நாளில்
மணவினையும் அணிவிழவும் பிற நாளும் தேடும்
மதிப்புளதோ புடவையலால் தீபஒளி கூடும்.  


சாரணர் எவ்வாறு அமைந்த சொல்.



இனிச் சாரணர் என்ற சொல்லின் அமைப்பையும் பொருளையும் அறிந்து இன்புறுவோம்.

இது  இரண்டு துண்டுச் சொற்களை இணைத்து எழுந்த சொல் ஆகும். எனினும் இது ஒன்றும் புதிது அன்று. சங்க காலம் தொட்டு வழங்கி வருவதாகும்.

சார் :  இது சார்தல், சேர்ந்திருத்தல் என்ற பொருளுடையதாம்.

அணர்: இது  அணவுதல் தொடர்பான சொல்லினின்றும் தோன்றுவது.

அணவல்:   அண+ அல் =  அணவல்;  அணவு+ அல்= அணவல் எனினுமது.

இதன் பொருள் கிட்டுதல், பொருந்துதல்,  நெருங்குதல்.

அணத்தல் -  தலையெடுத்தல்,  மேலெழுதல், ஒன்றுசேர்தல், பொருந்துதல்.

அணர் -  தலையில் பொருந்தியிருப்பதாகிய மனிதன் அல்லது விலங்குகளின் மேல்வாய்.( கீழ்வாய் அசையும், மேல்வாயுடன் சேரும், விரியும் தன்மையுடையது. ) மேல்வாய் அசையாமல் இருப்பது.  ஆகவே  அணர் எனப்பெயர் பெற்றது.

அணவுதல் -  அணத்தல்;  புணர்ச்சி.

அணாவுதல் -  சேர்தல்.

இன்னும் உளவெனினும் இவை போதுமானவை. இங்கு போந்த பொதுவான கருத்து: :  பொருந்தியிருத்தல்.
சில எழுத்தாளர், “பிராமணர்” என்ற சொல்லை விளக்கினர்.  அவர்கள் பெரும் +   அணர் =  பெருமணர்> பிராமணர் என்று  தெரிவித்துப் பொருள்கூறினர். பிரம்மத்தை அணவினோர் என்று பொருள்கூறினவர்களும் உளர்.  இவ்விளக்கத்திலிருந்து “அணர்”  என்பதன் பொருளை அறிந்துமகிழலாம்.

ஆகவே பெருமானாகிய இறைவனை அணவியவர்கள் என்று கோடலும் பொருத்தமாகிறது.

எனவே  சார்+ அணர் எனின்,  சார்ந்து நின்று செயல்புரிவோர் என்பது பொருளெனல் இப்போது புரிந்திருக்கும்.

சாரணர் என்பதன் பொருளுணர இவை போதுமானவை.

நாகர்களை “  நக்க சாரணர்” என்றார் சீத்தலைச் சாத்தனார் ( சங்கப் பெரும்புலவர்).

Scouts எனப்படுவோரையும் "சாரணர்" எனப்படுதல் உண்டு. இந்த ஆங்கிலச் சொல்லை இப்படி மொழிபெயர்ப்புச் செய்தோர் பாராட்டுக்குரியோர் ஆவர்.  சாரணர் பள்ளிகளையும் நிறுவனங்களையும் ஒருவாறு  சார்ந்து இயங்குவோர் ஆவர்.

செவ்வாய், 3 அக்டோபர், 2017

மோடிக்குப் புகழ்



வீடற்றார் தமக்கேயொரு கோடி வீடே

விடியலுக் கெழுந்ததுபா ரதமே நாடே

ஓடற்ற குடிசைகளில் துன்பம் மிஞ்சி

ஓய்ந்தயர்ந்த மக்கட்கு நல்ல காலம்!

நீடுற்ற பலநன்மை நீங்கி டாதார்

நேர்த்தொண்டர் நிமிர்நெஞ்சர் மோடி பாதை

ஈடற்ற நன்முறையில் போற்றும் ஆட்சி

என்றென்றும் எய்திடுக ஏற்றக் காட்சி
.
மறுபார்வை செய்த நாள் : 27.9.2017

ஏழைகட்கு ஒரு கோடி வீடுகளை மோடி அரசு....
உறுதி அளித்துள்ளதாகத்
தகவல்.

சனி, 30 செப்டம்பர், 2017

புறப்பொருள்: பொருள்மொழிக்காஞ்சித் துறை பொதுவியல் திணை. (சுற்றம் பூட்டும் விலங்கு):

அடுத்து ஒரு சிறு புறநானூற்றுப் பாடலைப் பாடிப் பொருளுணர்வோம்.
நம் முன் இருப்பது 193-வது பாடல். இப்பாடலைப் பாடியவருக்கு இயற்பெயர் யாது என்று தெரியவில்லை. ஆனால் ஓரேருழவர் என்று ஏடுகளில் காணப்படுகிறது. ஓர் ஏர் உழவனின் செய்கையை வரணித்தபடியால் இப்பெயரால் குறிக்கப்பட்டார்.  இவர்பாட்டிலிருந்து இவரது புலமை புலப்படுகின்றது.

இப்பாடலின் திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக்காஞ்சி.
அறிஞர் உரைத்த ஓர் பேருண்மையைப் புலவர் எடுத்துப் பாடுவது பொருள்மொழிக்காஞ்சி என்று கூறப்படும்.  பெரும்புலவர் தாமே அறிஞர் நிலையை எய்தி ஓருண்மையை உலகுக்கு உணர்த்தும் பாடலும் பொருண்மொழிக்காஞ்சி என்றே சொல்லப்படும். இது பொதுவியல் என்னும் திணையின்பாற் படும். பொருளென்பது புரிந்து கண்டது.  எ-டு:
இருளோடு உறவு கொண்டு நில்லாமல் அருளோடு உறவு கொள்வாய் --  என்று பாடினால் அது பொருள்மொழிக்காஞ்சி ஆகிறது.  அஃது ஓர் உலகு போற்றும் உண்மையாம் தகுதி உடைமையினால்.

பிற புறத்திணைகட்கு இது பொதுவாதலால் பொதுவியல் எனப்பட்டது.

இனிப் பாடலைப் பார்ப்போம்.

அதள் எறிந்தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடுமன்;
ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே.

அதள் -  புடைத்துக் கொட்டிய உமி அல்லது தோல்.
எறிந்தன்ன -  வீசியது போல. .
நெடுவெண் – நீண்ட வெண்மையான.
களர் -  களர் நிலம். விளையா நிலம்
ஒருவன் -  வேடன் ஒருவன்
ஆட்டும் = ஓடவைக்கும்;
புல்வாய்  -  மான். (போல)
உய்தலும் கூடுமன் -  ஓடித் தப்பிப் பிழைத்தலும் முடியும்.
ஒக்கல் வாழ்க்கை -  சுற்றத்துடன் வாழும் வாழ்க்கை.
தட்கும் -  கட்டிப்போடும்.  ஆ=  அந்த.
கால் -  நடமாடும் உறுப்பாகிய காலினை.  (ஆ காலே)

பாடலின் பொருள்: புடைத்து எறிந்த தோல் பரப்பியது போலும் காணும்  ஒரு களர் நிலத்தில் தனித்து நிற்கும் ஒரு மான் என்றாலும் அதுவும் ஒரு வேடனிடமிருந்து ஓடித் தப்பிவிடும். யானோ சுற்றத்துடன் கூடி வாழ்கிறேன். இச்சுற்றம் என்னைத் தப்பவும் விடாமல் இங்கு வாழவும் விடாமல்  கால்களைக் கட்டிப்போட்டு   வைத்துவிட்டது. (அதனால் என்னால் இங்கு இருக்கவும் முடியவில்லை; தப்பி ஓடி வாழவும் முடியவில்லை.)

ஒருவனின் சுற்றம் அவன் விரும்பும் வாழ்க்கையை அவனுக்குக் கிடைக்காமற் செய்துவிடுகிறது. இது உலகத்து உண்மையாகும்.  

காதலியை இத்தலைவன் மணக்க இயலவில்லை என்று பாடலிலிருந்து தெரிகிறது. இவனுக்காக இரங்குவதன்றி யாது செய்யலாம்? பொருளாதார ஏற்றத் தாழ்வினாலோ பிற காரணங்களாலோ இத்தகு துன்பமுற்றோர் உலகிற் பலர். சிலரே நினைத்ததை அடைந்து இன்புறுவோர்.  இது உலகினியற்கை.