வெள்ளி, 28 அக்டோபர், 2022

நிர்வாணம் - நிலை, அமைப்பும் பொருளும்.

 இன்று நிர்வாணம் என்ற சொல்லைச் சிந்தித்து அறிவோம்.

இது மிகப் பழைய சொல்லாகும்.  புத்தர்பெருமான் நிர்வாணநிலை பற்றிப் பேசினார். ஆங்கிலத்தில் "நிர்வாணா" என்று இது சொல்லப்படும்.   இதை வரையறை செய்து மதநூல்கள் விளக்கும்.

இஃது விடுதலை பெற்ற நிலையைக் குறிக்கிறது.  மறுபிறவியும் இறப்பும் இல்லையாகிவிட்ட நிலை.  அதாவது கருமம் தீண்டாத தூயநிலை.  இங்குப் பற்று இல்லை.  ஆசை இல்லை.  அதனால் துன்பமுமில்லை.  இந்து வாழ்வியல் புத்த மதத்தையும் முந்தியதாதலின்,  இக்கருத்துகளைப் புத்தர் இந்து மதத்திலிருந்து பெற்றார் என்று ஆய்வாளர் கூறுவர்.

இதனைச் சாத்தனார் மணிமேகலையில்:

பிறந்தார் உறுவது பெருகிய துன்பம்,

பிறவார் உறுவது பெரும்பே  ரின்பம்,

பற்றின் வருவது முன்னது பின்னது

அற்றால் வருவது அறிக

என்று எடுத்துக் கூறுமாறு காண்க.   குறளில்:  பற்றுக பற்றற்றார் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு  என்று அழகாகக் கூறுமாறும் காண்க.   மண்ணாசை,  பெண்ணாசை , பொருளாசை என்று மூன்று கூறுவர்.  பெண்ணாசை என்றது ஆண் பெண்மீது கொள்ளுமாசையும் பெண் ஆண்மீது கொள்ளுமாசையும் ஆகும். இதை இற்றையர்,  பாலியல் ஆசை என்று கூறுவர்.  ஆசை யாவது,  அசைவற்ற மனம் அசைந்து பற்றுதற் கான மூவாசை ஆகும்.  அசை-   ஆசை , இது முதனிலை நீண்டு திரிந்த தொழிற்பெயர்.  சுடு>  சூடு என்பது போலுமிதாம்.

பொருள் சொல்லப் புகுந்து நீண்டு விட்டது. என்றாலும் நிர்வாணம் என்பது அறிந்துகொண்டோம்.

நிர்வாணம் எனற்பாலது நிர்மாணம் என்றும் வழங்கும்.  இவ்வடிவமும் அகரவரிசைகள் இயற்றினார்க்கு அகப்பட்டுள்ளது. புத்தகராதிகளில் கிடைக்காமற் போகலாம்.  ஒரு 200 ஆண்டுகட்கு முன் வந்த பதிப்புகளிற் காண்க.

வகரமும் மகரமும்  மோனைத் திரிபுகள் எனப்படும். " மானம் பார்த்த பூமி" என்ற சிற்றூர் வழக்கில் வானம் என்பது மானம் என்று திரிந்து நின்றதும் காண்க. இத்தகைய திரிபுதான் நிர்மாணம் என்ற சொல்லில் நிகழ்ந்துள்ளது என்று அறிக.

மாட்சி அல்லது மாண்பு நின்ற நிலையே நிறுமாண்+அம்  ஆகும். இதுவே மூலம் ஆகும்.  இது திரிந்து  நிறுவாணம்> நிர்வாணம் ஆயிற்று.

முற்றத் துறந்த முனிவர்கள் எதையும் அணிவதில்லை.  இதைப் பின்பற்றியே சமணமதமும் அம்மணம் போற்றிக்கொண்டனர்.  அம்மணம். இச்சொல் இடைக்குறைந்து,   அமணம், பின் வழக்கம்போல அகரம் சகரமாகி  அமணம் > சமணம் ஆயிற்று.  அடு:( அடுதல் ) > சடு> சட்டி என்றாற்போல.  (  சடு+ இ ). டகரம் இரட்டிப்பு.

நிறுமாணம் -  நிறுவாணம் > நிர்வாணம்.

நிர்வாணம் எனின் மாட்சி நின்ற உயர்நிலை.

நின்று மாணுதல் : நிறு மாண் > நிறுமாணம் > நிர்வாணம்.

நிர்வாணா > நிப்பானா  ( பாலிமொழி)

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

மேலும் வாசிக்க:

சமணர்,  ஜெயின்:  https://sivamaalaa.blogspot.com/2021/07/blog-post_3.html

செவ்வாய், 25 அக்டோபர், 2022

வெற்றிலை - புக இலை : பெயர்கள்.( புக - தொடங்க)

 வெற்றிலை போடும் பழக்கம் நம் புதிய தலைமுறையினரிடைப் பரவா தொழிந்துவிட்டது.  இது ஒரு வகையில் நல்லதுதான்.  வெற்றிலை பாக்கினுடன் போயிலை என்னும் புகையிலையும் சேர்த்துச் சவைத்து,  வாய்ப்புண் முதலிய இன்னல்களை வரவழைத்துக்கொள்ளுதல் அறிவுடைமை ஆகாது. அதனால் சீர்ச்சைச் ( சிகிச்சைச்) செலவுகள் ஏற்பட்டு இழப்பினை உய்த்துவிடும் என்பதும் ஒரு காரணியாகும்.

போயிலை போடுவதால் புற்றுநோய் வருகிறதா என்று ஒரு சிறப்பு மருத்துவ (  ஆய்வாள)ரிடம் கேட்டு உரையாட ஒரு வாய்ப்புக் கிட்டிய காலை, யாம் அவரிடம் கேட்டேம்.   நோய் வந்துற்ற காலை அதற்கு மருந்துகொடுத்து மனிதரைக் காப்பாற்றுவதே வேண்டத்தக்கது,  இந்த ஆய்வெல்லாம் செய்யத்தக்கதாகாது என்று அவர் சொல்லிவிட்டார்.  வாழ்க்கை முழுமைக்கும் போயிலை போட்டு எந்த நோயுமின்றி இறந்தோரும் உண்டு.  சிலகாலமே போயிலை போட்டுப் புற்று நோயில் இறந்தோரும் உண்டு. ஆகவே முடிவாக எதையும் சொல்லமுடியாமையால், இம்மருத்துவர் கூறியதும் ஒருவகையில் சரிதான்.

இந்த இடுகையின் சொல்லாய்வுக்கு இது ஒரு முன்னுரையாகுமா?  ஆமென்றாலும் அன்றென்றாலும் இருக்கட்டும்.  வெற்றிலை என்பது வெற்றி இலை என்பதன் மரூஉ என்றோரும் உளர்.  இந்த வெற்றி என்பது  நீடித்த வாழ்வைத் தரும் வெற்றி என்று பொருள்சொல்ல எம்மிடம் சான்று எதுவுமில்லை.  ஆனால்  பெண்பார்த்து முடிவாகி மணவுறுதி ஏற்பட்ட ஞான்று,  குழுமியிருக்கும் பெரியோர் வெற்றியின் அடையாளமாக வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்ளும் பழக்கம், மலாய்க்காரர்களிடமும் உள்ளதாகும். மலாக்காரர் வழிசார் சீனரிடமு இவ்வழக்கம் உள்ளது. புகையிலைக்கு இப்படி ஒரு சிறப்பு இல்லை என்று தெரிகிறது. வெற்றிலை பாக்குப் போடுவதில், போயிலை போடுதல் ஒரு பிற்சேர்க்கைப் பழக்கம் என்று தோன்றுகிறது.  ஆகவே புகையிலை என்பது புக இலை  ( தொடக்கத்தில் போடும் இலை) அன்று.  புகையிலைதான். புகை என்பது போ என்று திரிந்தது.

வெற்றிலை,  பல பெயர்கள் உடைய ஒரு பொருள்.

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு எல்லாம் இயைத்து மென்று, வாயானது கனிவாகி விடுகிறது.   இந்தக் கனிவில், நோய்நுண்மிகள் இறந்துவிடுகின்றன.  வாயில் நல் மணம் உண்டாகிவிடுகிறது.  கத்தக்காம்பு உள்படப்  பலவும் இயைந்து கனிவதனால்,  இதற்கு "இயைகனி" என்ற பெயரிருந்தமை அறியலாம்.  இயைகனி என்பது நாளடைவில் இடையிலிருந்த  "யை" என்ற எழுத்தை இழந்து,  "இகனி" என்றாயிற்று.  பிறபாகங்களுடன் கலந்து கனியும் இலை யாதலின்,  " இகனி " என்பது வெற்றிலை என்னும் இலையைக் குறித்தது.

இந்தச் சொல் இன்னும் நம்மிடை உள்ளது.

வெற்றிலை தொடர்பான ஆய்வுகள்:

https://sivamaalaa.blogspot.com/2021/11/blog-post_10.html

வெற்றிலைப் பெயர்கள்:

https://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_7697.html

கவிதை: - வெற்றிலை:

https://sivamaalaa.blogspot.com/2018/02/blog-post_2.html

வெற்றிலை:  https://sivamaalaa.blogspot.com/2014/05/vetrilai.html

பாக்கு:  https://sivamaalaa.blogspot.com/2021/12/blog-post_21.html

குரங்கு இன்னும் பல https://sivamaalaa.blogspot.com/2021/05/blog-post_27.html

சருகு பிளகு: https://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_16.html

தாம்பூலம் https://sivamaalaa.blogspot.com/2021/11/blog-post_11.html

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

தீபாவளி வாழ்த்துகள் ( கவிதை மறுபதிவு)

கவிதை மறுபதிவு. 

உரைநடைக் கவிதை

எல்லா அன்பு நேயர்க'      ளுக்கும் 

யாம் சொல்வோம் இன்பத் தீபஒளி வாழ்த்துகள்.

 உலகப் போர்வரும் என்றுநாம் அஞ்சினுமே 

நிலையில் நின்றிட்ட அமைதிக்கு மகிழ்வோமே. 

தொற்றுகள் மிக்குவந்து தோழர்பலர் சென்றிடினும் 

பற்றுடனே பல்லோர் நல்வாழ்வு தாம்கண்டார். 

இசையொடு கூத்தியலும் இன்னுமுள பல்கலைகள் 

பசைபட்டு மக்களிடைப் பயின்றன ஓர்மகிழ்ச்சி. 

உடல்நலத் துறையிலும் ஊறிவளர் பல்துயர்கள் 

கடலென விரியினுமே காணாமல் தொலைந்தனவாம்.

 இன்னபல இன்னிகழ்வும் இனிதுநம்முன் இட்டுவைத்து 

கண்பலன் காட்டிய தீபஒளிக்  கே-மகிழ்ந்தோம். 

பலகாரம் பலரோடும் நல்லுணவு விளைவுகளால் 

நலம்தந்த தீபஒளி வரவேற்றோம் வரவேற்றோம்

 இறைவற்கு நன்றிசொலும்  இன்பத் தீபாவளியை 

கரைகடந்த மகிழ்வுடனே கால்மாற்றி ஆடிமகிழ். 

பெரியவர் பிள்ளையரும் பெருமகிழ்வு மேம்படவே

 அரிய இந்த நன்னாளில் ஆடியாடி நீமகிழ்வாய். 

வளம்தரும் தீப ஒளி வாடாத நன்மலராம் 

களம்வென்ற களிப்பினிலே களைப்பற்றோய் ஆடிமகிழ். 

நேயர் அனைவருக்கும் தீபஒளி வாழ்த்துகளே 

ஆயும்நற் றமிழால் ஆடியாடிப் பேருவகை. 

வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன். 



இதைக் கவிதை வடிவில் (அப்போது) வெளியிட இயலவில்லை. ஆகவே இங்குச் சென்று காணவும். https://bishyamala.wordpress.com/2022/10/24/