சனி, 12 மார்ச், 2022

உக்கிரேன் போர் - அமைதி

இந்தக் கவிதை சிலவிடத்து  விடுகதைபோன்றிருக்கும். எனினும் ஊன்றிப் படித்தால் பொருள் தெளிவாகும். உங்கட்கு உதவ,  சிறுதலைப்புகள் உள்ளன. இவை பொருள்விளக்கமாக இருக்கும் என்பது எம் நம்பிக்கை.


விளக்கம் வேண்டுவோர் பின்னூட்டம் செய்க.


உக்கிரேன் நாட்டு நிலை 


உக்கிரேன் தரையின் மட்டம்

கொட்டமே இல்லா வட்டம்.

விற்கிறான் வாங்கு கின்றான்

வீதியில் காண்போமில்லை!

வைக்கிறான் வெளியில் காலை

நடக்கிறான் யாரும் இல்லை!

ஒக்கநிற்   போர்வி ழைந்த

உன்னதம் இதுவே தானோ?


இந்தியா பெற்ற ஆதரவு


ஆறென முறைகள் தப்பி

பார்புகழ் காவல் எய்தி,  

பேரொடும் இந்தி யாதாம்

பிடித்ததோர் பிணியின் நீங்கி

நேர்பட நிற்கும் தெம்பை

உருசியா தந்த தென்பார்.

கூறுவர் இதையும் உள்ளம்

கொள்வது கடனாய்க் கொள்வர்.


தெம்பு - வலிமை

கடனாய் -  கடமையாய்

கொள்வர் -  ஏற்றுக்கொள்வர்.


போர்முனைக் காட்சிகள்


போர்முனை தன்னில் கண்கள்

புலப்படச்  சிறுசு  வர்கள்,

யாருமுன் இருந்த மக்கள்

யாங்கணும் காணற்  கில்லை.

தேர்ந்தவர்  செய்வி ழாக்கள்

தினமுமே  நிகழ்ந்த நாட்டில்

 ஊர்ந்தன  பிணப்பு   ழுக்கள்

உலகுக்கு நேரக்  கேடாம்.  


யாருமுன் - யாரும் முன்

தேர்ந்தவர் -  திறமை உள்ளவர்கள் ( விழச்செய்வதில்)

நேரக் கேடு -   கெட்ட காலம்.

( நமக்குக் காலம் என்பது உலகுக்கு நேரம் )



சண்டைநிறுத்தம்:


உக்கிரேன் உருசியா போடும்

உக்கிரச் சண்டை பார்த்தால்

எக்கரை நடப்ப தேனும்

எம்மனம் கவலை கொள்ளும்.

தக்கதை அமர்ந்து பேசித்

தகுதியில் ஒத்துப் போக

ஒக்குமோர் வழியே தானும்

ஊர்ந்துமே வரினும் நன்றே.


ஊர்ந்துமே -  மெதுவாக


அமைதி வருக

விரைந்தினி வருக என்றால்

சுரந்தது மெலவே தோன்றும்

வருந்தரு ணத்தே வந்து

வண்ணநல் லெண்ணம் வந்தால்

அருந்திறல் உடையோர் என்றும்

அவனியன் னாரைப் போற்றும்.

பெருந்துணை அமைதிப் பெண்ணே

பிறழாது வருவாய் நீயே.


சுரந்தது -  வெளிப்பட்டது.  அமைதி எண்ணம்.

மெலவே:   மெல்லவே.  ( தொகுத்தல்,  அதாவது சொல்லைச் சுருக்குதல்)

அவனி -  உலகம்   (  அ + அன் + இ)  வகரம் புணர்ச்சியில் தோன்றிற்று.

( உங்களுக்கு அண்மையில் இருப்போர் உலகத்தினரே.  

அ = அங்கு;  அன் -  (  இது அண் என்பதன் ஒரு வடிவம்)  அருகில்,

இ - இது இருப்போரையும் இடங்களையும் குறிக்கும்.)

இந்த "அன்" என்பது  அன்பு என்ற சொல்லில் உள்ளது, காண்க.



அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

வெள்ளி, 11 மார்ச், 2022

குறுகிப் பெயராகும் வினைகள்: மண்டை, புவி, புவனம்,

 புவி என்பது யாம் பன்முறை விளக்கிய சொல். இன்று இன்னும் இவ்வலைப்பூவிலும் விளக்குதற் குரித்தாகிறது. இவற்றுட் பல வாய்மொழியின. சில எழுத்தில் உள.

இதன் வினைச்சொல் பூத்தல். இது ஒரு பல்பொருளொரு சொல் எனினும், இங்குக் கருதுதற்குரிய பொருள் தோன்றுதலென்பதே.  பூமி தோன்றியதை நாம் பார்க்கவில்லை;  நாம் தோன்றியதையும் நாம் பார்க்கவில்லைதான் . எனினும் தோன்றினோம் என்பதைப் பல்வேறு கருத்தளவைகளாலும் கேட்பமைதியினாலும் நம்புகின்றோம்.

பூத்தல் வினை, முதலெழுத்து நெடிலில் தொடங்குகிறது. இதிலிருந்து தொழிற்பெயர் அமைகையில் பூ என்ற முதலெழுத்து குறிலாகிவிடுகிறது. ஆகவே முதனிலை குறுகித் திரிந்து பெயர் அமைகிறது என்று அறிதல் கடன். 

இலக்கண நூல்கள் இதுபோல அமைவனவற்றைத். தொழிற்பெயர் என்ற பிரிவில் அடக்கும்.  முதனிலை நீண்டு திரிந்தமைதலே இலக்கணியர் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது. முதனிலை குறுகி அமைந்தன எனற்பாலன பேரளவில் அவர்கள் கவனத்தைக் கவரத் தவறினமைக்குக் காரணம் அறிய இப்போது  இயல்வில்லை. எதிர்காலத்தில் இந்நிமிர்தடை சாய்ப்புறலாம்.  ( சாய்>[ சாய்த்து இயல்வதாகி ]> சாத்தியமாகலாம்.

[தடையாக எதிர்நிற்பது ,  நிமிர்ந்து நிற்பது , சாய்க்கப்படுவதே சாய்த்தியம், சாத்தியம்.]

எனினும்,  காண் என்ற வினை, குறுகிக் கண் என்று திரிந்தமை மொழியில் தெளிவாகத் தெரிகிறது.  இதில் விகுதி அமையவில்லை .  ஆனால் சா(தல்) என்பது சவம் என்றமைந்த காலை,  அம் விகுதி பெற்றது.  தோண்டு என்பது தொண்டை என்று அமைந்த போது,  ஐ விகுதியை (ஈற்றில்) பெற்றது. தோண்டு என்பதே வினையாகலின்,  டை என்பது விகுதியன்று.  தொண்டை, தோண்டப்பெற்றது போன்ற ஓர் உறுப்பு அன்றோ?

எல்லா உறுப்புகளிலும் மாண்பு மிக்குடையது மண்டை ஆகும். இதற்குத் தலை என்பது இன்னொரு பெயர்.

மாண் - மாண்+ டை > மண்டை.   மாணுதல் - வினைச்சொல்.  சிறப்பு அடைதல் என்பது பொருள்.

இதில் நாம் சுட்டிக்காட்ட விரும்புவது யாது? அது:  மாண் என்ற நெடில் முதலாகிய சொல், டை விகுதி ஏற்க, மண் என்று திரிந்ததுதான்.  இதுபோல் திரிந்த இன்னொரு சொல்: முன் பன்முறை எடுத்துக் கூறியது போல, சா + அம் > சவம் என்பதுதான். யாவும் தமிழே என்று உவத்தல் கொள்க.

ஒரு குறள் மாண்டதமைச்சு என்று முடியும்.  மாண்டது என்றால் சிறந்தது என்று பொருள். ( செத்துப்போனது என்பதன்று).

இங்குக் கூறிய நெடில் குறிலாகித் திரிந்து பெயரான சொற்களைப் போலுமே, பூத்தல் என்பதிலிருந்து பிறந்த சொல்லாய  புவி  என்பதும்  ஆகும்.

பூ(த்தல்) > பூ + வி > புவி ஆயிற்று.

பூ + அன் + அம் >  புவனம்.  அன் என்பது இடைநிலை.

இரண்டிலும் பூத்தல் என்னும் வினை,  பு என்று குறுகியமை காண்க.

பூ + தலம் > பூதலம்.  இது இயல்பாய் அமைந்தது. இது இருபெயரொட்டு என்றோ வினைத்தொகை என்றோ கொள்ளலாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


செவ்வாய், 8 மார்ச், 2022

செய்திகளில் சலித்தெடுக்கும் கருத்தியல்கள்

 (அறுசீர் விருத்தம்)

காதுக்குள் அலைபோல் செய்தி

கருத்துகள் காட்டும் வந்தே

மோதிடும் நெஞ்சில் ஆங்கு

முழுத்தத் துவம்மு கிழ்க்கும்;

யாதொரு தயக்கம் இன்றி

யாத்துடன் பயனே காண்க;

மீதமாய் நிற்கும் வாழ்வில்

மேலடைந் திடுவீர் உண்மை!



இருளினில் ஒளிபோல் உண்மை

இருவிழிக் கின்பம் சேர்க்கும்,

பொருண்மையில் நாட்டம் கொள்வார்

புவியினில் யாங்கும் காண்பார்;

தெருள்பெறத் தேர்ந்து கொள்வோர்

தேடின யாண்டும் வான்கார்

குளிர்மழை போல்பெய் காலை

குதித்தெழு மகிழ்கொள் வாரே.


அன்றாடச் செய்திகளிலும் உண்மை கண்டு

அவற்றை வாழ்வில் பயன்படுத்திக் கொள்ளலாம். 

சற்றே தேடிப்பார்த்தல் அவை கிட்டிவிடும். 


தெருள் =  தெளிவு

வான் கார் -  வானில் மேகம் கருத்து (மழை பொழிதலைக் குறிக்கும்.)

மகிழ் -  மகிழ்ச்சி

முகிழ்க்கும் - ஊறி வெளிவரும்


யாப்பு:

ஒவ்வொரு வரியிலும் மூன்று சீர்களில்

நடுச்சீர் நிரையாகவும் நேராகவும் மாறிமாறி

வந்து ஒலிக்கிளர்ச்சி தரும்படி தொடுக்கப்பட்டது.

Less  monotony.

தெருள்  -  குளிர்.   இங்கு ர - ள முறைமாற்று இனவெதுகை. வழக்கம்போல் வரும் எதுகைக்கு இது வேறுபட்டு இன்பமுறுத்தும்.