புதன், 2 மார்ச், 2022

பற்றுதல் பத்துமினி

அகலிகை என்ற பெயரை முன்னர் ஆய்ந்து சொன்னதுண்டு. அது இன்னும் உள்ளது.  அதை இங்குக் கண்டுகொள்க.

https://sivamaalaa.blogspot.com/2017/10/blog-post_30.html 

இப்போது பத்துமினி என்ற சொல்லினுட் புகுந்து வெளிவருவோம்.

தமிழில் பற்று என்ற மூலச்சொல்லே  சிற்றூர் வழக்கில் பத்து என்று திரியும்.

பற்று என்பது மனம் பற்றிக் கொண்டிருப்பது.  தீப்பற்றுவது போல,  அன்பும் பற்றிக்கொள்கிறது.  இது ஓர் ஒப்புமைப் பொருளாக்கமாகும்.

பற்று என்பதற்கு மூலம் பல் என்பதுதான்.  புல்லுதல் என்பது பொருந்துதல் என்னும் பொருளது,   புல் என்பது பல் என்று திரியும்.  பல் என்பதும் பொருந்துவதையே குறிக்கிறது.  பல் என்பது வாய்க்குள் எலும்பு சதை ஆகியவற்றுடன் பொருந்தி இருக்கின்றது.  அதனால்தான் அதற்குப் பல் என்று பெயர். பல் என்பதைப் பல  தருணங்களில் விளக்கியுள்ளோம்.  சிலவேனும் பழைய இடுகைகளில் அகப்படும்.

பற்றுதல் என்பதும் இணைந்து பொருந்துதல்தான்.   பல் + து > பற்று.  இங்கு வரும் து என்னும் துண்டு,  அது இது என்பதில் வரும் அதே து என்பதுதான். பல் து என்று இணைந்து,  வினையும் பெயரும் ஆகும்.  அப்புறம் ~தல் விகுதி பெற்று பற்றுதல் என்று மாகும்.  இதே விளக்கம் வேறு தொடர்புடைய சொல்லில் வருமானால்,  வாசிக்கும்போது தவிர்த்துக்கொண்டு நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ளுங்கள்,

றகர தகரத் திரிபிற்கொப்ப,  பற்றினி என்பது பத்தினி ஆகும்.  கணவன்பால் பற்று மாறாதவள்தான் பற்றினி என்னும் பத்தினி.  சிற்றூர்வழக்குத் திரிபு.

மரத்தடியில் வழங்கிய சொற்கள்தான் பின் தொகுத்து நன்றாக ஆக்கபட்டு, சமத்கிருதமாயின.  பழங்காலத்தில் சாமி கும்பிடும் இடங்கள் மரத்தடிகளாய் இருந்தன.  ஆல் என்ற மரத்தின் பெயரடிப் பிறந்த ஆலயம் என்ற சொல்லும் மரத்தடி என்று பொருள்தரும் பழங்காலச் சொல்தான். ஆல்+ அ+ அம் :  ஆலமரத்தடியில் அங்கு அமைந்திருக்கும் (கூடுமிடம்) என்பதே அது.  தமிழகத்து வழங்கிய இத்தகைய சில சொற்கள்  அயல்வழக்குக் கொண்ட காலை, அயலார் அதற்கு ஒரு கதை புனைந்து,  அச்சொற்களை மேற்கொண்டதுடன்,  அவற்றின் தொகுதியை இந்தோ ஐரோப்பியம் என்றனர்.  அவையாவும் வெறும் புனைவு. இச்சொற்கள் இத்துணைக்கண்டத்தன  ஆகும்.

சமத்கிருதத்தில் உள்ள பல சொற்கள் சிற்றூர்களில் வழக்குப்பெற்றவை.  பற்றினி என்பது பத்தினி என்றும் வழங்கியது போலவே ஆகும்.

பற்று + உம் + இன் + இ என்றால்,  அதுவே பற்றுமினி என்றுமாகி, பத்துமினி ஆகி, இடையில் உள்ள து என்ற எழுத்தை நீக்கிவிட,  இனிக்குமாறு "பத்மினி"  ஆகிவிட்டது.

எல்லாச் சொற்களும் பயன்பாட்டுக்காக உண்டாகினவைதாம். அவற்றின் பெருமை அல்லது மகிமை என்பது, அவற்றின் பயன் கருதியமைதான். ஒலியை உணர்ந்து மகிழ்தலும் உண்டானமையால்,  ஒலியையும் சுவைத்து, கொண்டாடிக்கொள்ளுங்கள். இசை என்பது ஒலியின் பாற் பட்டதே ஆகும்.

மகிமை என்ற சொல்லும் இங்கு முன்னர் விளக்கப்பட்டுள்ளது.

செய்யும் என்னும் வாய்பாட்டு வினையாக நாம் அறிந்து, பின் "பற்றும்" என்று அமைந்து. "பத்தும்" என்று திரித்து,  இன் இ என்றோ இனி என்றோ இணைதல்  கொண்டபின், சொல்லினுள் ஏற்றுவித்து,  பற்று இனி > பத்துமினி என்று வருவிப்பின், அது பத்துமினி> பதுமினி> பத்மினி என்றுமாம்.  இது மரத்தை இழைத்து தச்சனார் செய்வதுபோலும் செயல்பாடே ஆகும்.  தச்சனார் நன்றாகச் செய்துவிட்டால், உண்டாக்கிய பொருளை வாங்கிச் சென்றவர்,   தன் மதிப்பைக் கூட்டிக்கொள்ள,  ஐரோப்பாவில் வாங்கிவந்தது என்று சொல்லிக்கொள்ளலாம்.  உலகம் போலியானது.  செய்தவனின் புகழை மறைத்து எங்கோ இருப்பவனிடம்கூட அதனைக் கொண்டு சேர்க்கிறது. இங்குக் காட்டிய எல்லா வடிவங்களும் தமிழின்றேல் இல்லையாம் . என்றுமுளது தென்றமிழ்.  

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

தட்டச்சுப் பிறழ்வுகள் காண்புறுமாயின்,  பின்னூட்டம் செய்க.



திங்கள், 28 பிப்ரவரி, 2022

சாமிக்குச் செய்தது கேசரி.


சாமிக்குச்  செய்தது கேசரி  -----  சீனிச்

சார்பினில் இனிக்கும் கேசரி!

நேமித்துத்  தந்தனர்  பேறிது ---- இதை

நித்தலும் கொள்வ தெடைதரும்.


இறைவன் தந்த  தென்பதால் ---  தீமை

ஏதும் கூடாமல் காப்பதால்,

குறைவாய்க் கொஞ்சம் உண்ணலாம் --- ஆத்தும

குதூக  லம் மகிழ்ந்  தெண்ணலாம். 


சீனியை  மிஞ்சிய இனிமையில் ---  இதைச்

செய்து முடித்தது  மடைப்பளி, 

மேனிலை ஏய்ந்ததும் எப்படி  --- அறிவார்

சீனியை ஆய்ந்தவர் காண்கிலம்.


சார்பினில் -  ( சீனி அதிகமான ) பாங்கினால்

நேமித்து -  எம்  ஏற்பாட்டினால் பூசை செய்து,

நித்தலும் -  தினமும்

கொள்வது - உண்பது

பேறிது -  பேறு இது : இது எம் பாக்கியம் என்றபடி.

மடைப்பளி,  மடைப்பள்ளி, கோயிலில் சமைக்கும் இடம்

மேனிலை ஏய்ந்தது ---  (சீனி) கூடிய  நிலையை அடைந்தது

அறிவார் சீனியை ஆய்ந்தவர் --- சீனி ஆய்வு செய்தவர்களுக்கே தெரியும்.

இவ்வளவு இனிப்பாக இருப்பது எப்படி என்பது தெரியவில்லை.  சீனைய

மிஞ்சிய இனிப்பாய் உள்ளது.

காண்கிலம் -  எமக்குத் தெரியவில்லை.



கேசரி என்ற சொல்:

கூழ் என்பது முன்பாதியில் உள்ள சொல்.  இன்னொரு பின்பாதிச் சொல்: சரி.

அதிகமாகக் கூழாகிவிடாதபடி,  சற்று இளகிய நிலையிலே  :" சரியாகச்" 

செய்யப்படுவது.   கூழ் என்ற சொல்,  

கூழ் வரகு என்பதில் கூழ் -   கேழ் ஆகிற்று. அதுபோலவே இங்கும் சொல் திரிந்துள்ளது.  கேழ்வரகு என்பது பின்னும் கேவர் என்ற் திரிந்து வழங்குகிறது.

 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

[இரண்டு எழுத்துப் பிறழ்வுகள் திருத்தம்

02032022 1126]






தனிக்குறிப்பு

==========================================================

இது தனிவாசிப்புக்காக எழுதப்பட்டாலும் கவனக்குறைவான்  வெளியோரும் வாசித்துவிட்டனர்.  ஆகவே இந்தப் பகுதி இங்கு கைவிடப்படுகிறது. அழிக்கப்படவில்லை.


ஆசிரியர்க்கு not for public - do not read

 பஞ்சமி

வலை -  வளை  தொடர்பு

சாம்பவன் - ஜம்பவான்

பணவழங்கி முன் பதற்ற உரையாடல்

 தவறான எண்களை அழுத்தி,  அதனால் பணவழங்கி  ( ATM  ) எந்திரம் உங்கள் தொடர்பு  அட்டையை விழுங்கிவிட்டால், அதனால் பதற்றம் அடைவோர் உண்டு. நீங்கள் ஒரு குற்றமும் அற்றவர்,  ஞாபகக் கோளாற்றினால் தவறான எண்களைப் பலமுறை அழுத்திவிட்டீர் என்பது அந்தப் பணவழங்கிக்குத் தெரிய வழியில்லை. என்னதான் செய்வதென்பதை அந்த இயந்திரங்களின் ஒரு புறத்திலே எழுதிவைத்திருப்பார்கள். அங்கும் தெரிந்துகொள்ளலாம்,  அறிந்தோரிடம் கேட்டும் தெரிந்துகொள்ளலாம். அதிக வயது ஆனவர்களுக்குத் தாம் இத்தகு தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன போலும்.

இதுதொடர்பாக, இங்கு இன்னொரு படமும் உள்ளது. கண்டு மகிழ்க; இதுபோலும் நிகழ்வுகளின்போது இளைஞர்கள் உதவலாம் என்பதை முன் இடுகையில் பரிந்துரைத்திருந்தோம்.

அந்த இன்னொரு படம் இங்கு:-



உந்துகள் நிறுத்திடத்துடன் இந்த இயந்திரங்கள் உள்ளபடியால் யாவர்க்கும் வசதியாய் உள்ளது.. மறுபுறம் கடைகள் உள்ளன.