புதன், 23 பிப்ரவரி, 2022

செடிகள்மேல் வந்த ஆசை.

 நீரில்லா இடத்தினிலே தாகம் போல----ஆசை

நெஞ்சமதில் சிங்கப்பூர் மக்கள் கொண்டார்

பாரெங்கும்   செடிப்பசுமை மாணும்  முன்னால்---சிங்கை

பகருமொரு பசுநகராம்   பாதை கண்டார்.


வீதிகளில்  தெருவோரம் ஊர்தி  செல்லும்  ----- நடு

விரிவாகு  எனவெங்கும்  பசுமை யாக்கி, 

யாதுமொரு  வெற்றிடமும் இல்லா வண்ணம் ---செடிகள்

எழுமரங்கள் கொடிகளிவை வளர்த்தி வென்றார்.


குப்பைகொட்டும் வழித்துளையே என்ற போதும் ---  மக்கள்

கூட்டெனவே அரசுடனே  ஒத்தி சைந்து, 

சப்பைநிலை போலியங்கிச்  சார்ந்து நின்றார் ---  செடிகள்

சட்டிகளில் கொடிகளென எட்டி   னார்கள்.


தாகம்:   தவி+ அம் > தாவம் > தாபம் > தாகம். (போலித்திரிபு)

தாகம் தவிக்கிறது என்பது  பேச்சில் பயன்பாடு.

ஆசை - ஒரு பொருளின் அணுக்கத்தினால் மனத்துள் அசைவு உண்டாதல்.

அசை >  ஆசை (முதனிலை நீண்டு திரிந்த தொழிற்பெயர்)

இதுபோல் திரிந்த இன்னொன்று:  சுடு >  சூடு.

நடுவிரிவாகு:  சாலையின் நடுவில் அமைந்துள்ள விரிந்த ஒரு வாகு.

இந்த வாகிலும் செடி புல் முதலியவை நடப்பட்டுள்ளன.

மாணும் - சிறக்கும்

பசுநகர் -  பசுமை நகர்

பகரும் - எடுத்துரைக்கும். ( தகுதியான என்று பொருள்).

குப்பை வழித்துளை - ரப்பிஷ் சூட் என்னும் குப்பைக்கிடங்கு.

கூட்டெனவே -  அரசுடன் ஒத்துழைத்தவாறு.

எட்டினார்கள் - அடைந்தார்கள்.




 

 இங்குச் சில சட்டிச் செடிகள் உள்ளன.  ஒன்றில் விதைகள் தூவி உள்ளனர்





நாய்க்குட்டி - காயமுண்டாக்கும் களிப்பு

சிங்கார மாய்விளங்கு நாய்க்குட்டியே ----எனைச்

சீண்டியே காயம்செய்யும் வெள்ளைக்   குட்டியே

பங்காக நொறுப்பளமே தந்துவிட்டாலும்  --- காலால்

பறண்டிஎனைத் தொல்லைசெயும்  சின்னக்குட்டியே.



அருஞ்சொற்பொருள்:

காயம்செய்தல் -- காலநகத்தால் கிழித்துவிடுதல்.

பறண்டு -  காலால் ( நகத்தால் )கீறு(தல்).  கால்சிதைதல், நகம்பதிதல் என்றும்

கூறுப.

நொறுப்பளம் -  பிஸ்கட்.

நகம்:  உடலின் பகுதிகளில்,  வெண்மையாக இருந்து ஒளி தருபவை பற்களும் நகங்களும்.  இவற்றுள், நகம் என்பதுமட்டுமே ஒளிசெய்தல் என்னும் பொருளதாம்,   நகுதல் என்னும்  தமிழ் வினையினின்று போந்துள்ளது.  ஆகவே காரண இடுகுறியாகின்றது. உகிர் என்பது இன்னொரு பெயர்.  உ+ கு+ இர் என்று அமைவதால்,  முன்னுள்ளது என்ற பொருடரும்.   உ = முன்,  கு -  சேர்ந்து, இர் - இருப்பது என்ற குறிப்பைத் தருவதுடன்,  இர் விகுதியாகவும் இருபண்புடைமை கொள்கின்றது. எல்லா விகுதிகளும் இவ்வாறு பொருள்தருபவை அல்ல.

பழைய மொழியான தமிழ், இத்தகு உயர்வளர்நிலை  தன் சொற்களிற்காட்டுவதால், மிக்கப் பழமை நாளிலே சிறந்து வளர்ந்துவிட்டதென்பது தெரியும் 

கீழுள்ள கவிதை

தெருட்டுதல் - மனத்தெளிவு தருதல்

பரந்த - பரவிய

உடை - அதன் தோலின் முடியைக் குறிக்கிறது

மாண் திணிந்த --  மிகச் சிறந்த,

கனிவு =  முதிர்ந்து இனிக்கும் அன்பு








விளையாட ஆளில்லையென்றால் இது அமைதியாய் இருக்கும்!



இதுவும் காயம் ஏற்பட்டபின் எடுத்ததுதான்.  அது களிப்பில் ஆடிக்கொண்டிருந்தபோது எதுவும் எடுக்கமுடியவில்லை,




இது அதன் ஆட்டம் தொடங்குமுன் எடுத்தது.


நாய்க்குட்டியின் அன்பு ( கவிதை)

தனிமையை ஓட்டுகின்ற இனிமை ஆட்டம்

தாவித்தாவி ஆடுவதில் தனக்கீ  டில்லை!

பனிபரந்த வெண்ணிறத்தில் உடையு  டுத்து

பாணிகளில் மாண்திணிந்த நடையி  னோடு

கனிவுடனே முத்தமிட்டு  அணைக்க வந்து

காட்டுகின்ற காட்சிதனை என்ன சொல்வேன், 

மனிதரிலே யாருமிதைப்  போல  அன்பை

மறுபடியும் மறுபடியும் தெருட்டு வாரோ?

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

ஓமிக்ரோனுடன் சமரசம் செய்துகொள்


 


இன்னலே  செய்திவ்  விகந்தனை அச்சுறுத்தி

அன்னலில் ஆம்திசை காணாமல் ---  பன்னாளும்

அல்லாட வைக்கும் அழிதொற்று நோயகல

இல்லரசு மின்னலார்பூ   சை.



இகம் தனை -   உலகத்தை

அன்னல் -  புகை

ஆம் திசை -   ( தப்பிக்க ) ஆகும் திசை.

மின்னலார் -  பூசை செய்த குடும்பத்துப் பக்தமணி அம்மையார்

பெயர் மின்னலார்.


இந்த நோய்க்கிருமிகளுடன் சமரசம்   (ஒத்திசைவு) செய்துகொள்வதைத் தவிர வேறுவழியில்லை.  சாமிகும்பிட்டு  உருகி, பற்று பெருகினால், நோய் மெல்ல மெல்ல மறையும்.   அதுதான் உங்கள் முன்னுள்ள வழி.


மெய்ப்பு  பின்னர்